நவீன மருத்துவ வளர்ச்சிக்கு முன்பு ஆட்கொல்லிநோய்கள் சமூகத்தைப் பீடித்திருந்தன. நோய்த் தடுப்புத் திட்டங்கள் மூலம் ஆட்கொல்லிநோய்கள் மட்டுப்படுத்தப்பட்டன. தற்போது சமூகத்தில் உடற்சிதைவு நோய்கள் அதிகரித்து வருகின்றன.
இது வயது வரம்புகளைத் தாண்டி சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை நோய்களுக்குக் காரணமாகிறது. இத்தகைய நோய்கள் முக்கிய உள்ளுறுப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்து வதோடு உடல் இயக்கச் சிக்கல்களைத் துணைக்கு அழைத்துக்கொள்கின்றன.
இந்தப் புள்ளியில்தான் அனைத்து வயதினருக்கான ஆரோக்கியப் பராமரிப்பின் அவசியம் எழுகிறது. உயிருடன் வாழ்கிறோம் என்பதை விட உயிர்ப்புடன் வாழ வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது. இந்த நிர்பந்தம் வயது முதிர்ந்தவர்களுக்குக் குடும்பம், சமூகம் என அனைத்து மட்டங்களிலும் சவால்களை ஏற்படுத்துகிறது. சமூக அடுக்குகளில் இத்தகைய சுகாதாரச் சுமைகளை எதிர்கொள்ள உலக நாடுகள் பல முற்போக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளன.
அதிக மக்கள்தொகையும் குடும்ப அமைப்பையும் கொண்ட நம் நாட்டில், முற்போக்கு முயற்சிகள் வேகம் எடுக்க வேண்டிய அவசியத்தை நாம் உணர வேண்டும். நுகர்வுப் பண்பாடு உள்ள சமூகத்தில் ஆரோக்கியத்தை வெறும் பணத்தைக் கொண்டு கைப்பற்றிவிடலாம் என்கிற ஆபத்தான மனப்பாங்கு மேலோங்கி வருகிறது.
அதை முறியடித்து இது ஒரு சமூகக் கடமை என்கிற ஒற்றைக் குறிக்கோளில் ஒன்றிணைந்திருப்போம். அதன் பொருட்டு இந்த ஆண்டு உலக பிசியோதெரபி நாளை ‘ஆரோக்கிய முதுமை’ (Healthy Ageing) என்கிற கருப்பொருளில் கொண்டாடவிருக்கிறோம்.
நடப்பு நிலை: தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது. 2021இல் 60 வயதுக்கு மேற்பட்டோர் 14.9 கோடிப் பேர் (மொத்த மக்கள்தொகையில் 10.1% ) இருந்தனர். 2050க்கு முன்பாக இந்த எண்ணிக்கை 32 கோடியாக (19.5%) உயரும் என்று ஐக்கிய நாடுகள் அவை கணித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் தற்போது 12 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் முதியோர் பிரிவில் உள்ளனர்; இது தேசிய சராசரியைவிட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நடத்தப்பட்ட முதியோர் வயது நீடிப்பு சார்ந்த ஆய்வின்படி (LASI 2020), தமிழ்நாட்டில் 65 சதவீத முதியோர் குறைந்தது ஒரு நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் ரத்த அழுத்தம் (35%), நீரிழிவு (28%), எலும்பு-மூட்டு வாதம் (20%) போன்றவை அதிகம் காணப்படுகின்றன.
அதோடு, ஹெல்ப் ஏஜ் இந்தியா தரவுப்படி 47 சதவீத முதியோர் தனிமையால் பாதிக்கப்படுகின்றனர். ஊட்டச்சத்து, வாழ்க்கை முறை என இரு முனைகளில் பிரச்சினைகள் தென்படுகின்றன. 45 வயதுக்கு மேற்பட்டோரில் 25% பேர் அதிக எடை கொண்டவர்கள்; 26% பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. போதிய உடற்பயிற்சி இன்மை, தூக்கக் குறைபாடு போன்றவை முதுமையை மேலும் வேகப்படுத்துகின்றன.
அதேபோல, சுகாதாரச் சேவைகளிலும் சவால்கள் நீடிக்கின்றன. நாட்டில் உள்ள 1.6 லட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே முதியோர் நலச் சேவைகள் உள்ளன. தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் தேசிய முதியோர் சுகாதாரத் திட்டம் (NPHCE) செயல்படுத்தப்பட்டாலும், தேவைக்குப் போதவில்லை என்பதே நிதர்சனம்.
தீர்வுகள் என்னென்ன? - இத்தகைய சூழலில் அரசு, குடும்பம், சமூகம் என மூன்றும் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் பிசியோதெரபி சேவைகள் விரிவாகக் கிடைக்கச் செய்தால்தான் ‘ஆரோக்கியம் நிறைந்த முதுமை’ சாத்தியமாகும்.
மையக் கருத்து: ‘Healthy Ageing' என்பது முதியோரின் நலனை மட்டும் குறிக்கவில்லை. அது குடும்பங்களின் சுகாதாரச் சுமையைக் குறைத்து, சமூகத்தில் உறவுகளை வலுப்படுத்தி, நாட்டின் உற்பத்தித் திறனையும் மேம்படுத்துகிறது. அரசின் திட்டங்கள், குடும்பத்தின் அன்பு, சமூகத்தின் ஆதரவு, பிசியோதெரபி வழங்கும் வாழ்க்கைத் தரம் என அனைத்தும் ஒருங்கிணைந்தால்தான் ‘ஆரோக்கியம் நிறைந்த முதுமை’ சாத்தியமாகும்.
சமூகத்தின் பங்கு:
* சமூக மையங்களில் குழு உடற்பயிற்சி, உடல் எடை மேலாண்மை, மனநல ஆலோசனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
* 'Intergenerational Programs' - வெவ்வேறு தலைமுறையினர் சந்திப்பு மூலம் மாணவர்களும் முதியோரும் இணைந்து செயல்பட வேண்டும்.
அரசின் பங்கு:
* ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோர் நல பிசியோதெரபி மையம் அமைத்தல் அவசியம்.
* முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பிசியோதெரபி சேவைகள் நேரடியாகச் சேர்க்கப்பட வேண்டும்.
* கிராமப்புற முதியோருக்காக நடமாடும் மருத்துவப் பிரிவுகள் அனுப்பப்பட வேண்டும்.
* பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டங்களில் ‘Exercise is Medicine’ இயக்கம் பரப்பப்பட வேண்டும்.
குடும்பத்தின் பங்கு:
* முதியோருடன் நேரம் செலவிடுதல்.
* ‘3E’ முறை – உடற்பயிற்சி (Excercise), உணர்வுரீதியான ஆதரவு (Emotional support), உடன் இருத்தல் (Engagement) – குடும்பத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
- கட்டுரையாளர்: இந்தியன் அசோசியேஷன் ஆஃப் பிசியோதெரபிஸ்ட்கள் - தமிழ்நாடு கிளை தலைவர்.