நலம் வாழ

உயிரின் நாதமே இதய நாதம்! | இதயம் போற்று 50

கு.கணேசன்

‘இதயம் போற்று’ தொடரில் இதயப் பாதுகாப்பு குறித்து நிறையவே கற்றிருப்பீர்கள். நம் தவறான வாழ்க்கை முறைகள் இதயத்துக்கு எப்படியெல்லாம் ஆபத்து களை ஏற்படுத்தக் கூடும் என்பதை உணர்ந்திருப்பீர்கள். இவ்வளவு ஆபத்தான சவால்களுக்கு மத்தியிலும், நம் இதயம் சலிப்பில்லாமல் துடித்துக் கொண் டிருக்கிறது என்பதே ஆச்சரியமும் அதேநேரத்தில் பெருமை தரும் செயல்பாடுதானே.

இவ்வளவு மகத்துவம் மிக்க இதயத்தைப் போற்றுவதும் பாதுகாப்பதும் நம் கடமையல்லவா! ஆகவேதான், இதயத்தைப் பாதுகாக்கிற வழிகள் குறித்து இந்தத் தொடரில் பல இடங்களில் விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.

என்றாலும், கரும்பைச் சாறு பிழிந்து கொடுப் பதைப் போல, தொடரின் இந்தக் கடைசிக் கட்டுரையில், இதய ஆரோக்கியம் காக்க என்னென்ன வழிமுறைகள் முக்கியம் என்பதைச் சுருக்கமாகப் பதிவுசெய்கிறேன். வாசகர்கள் இதை ஓர் அவசியக்
கையேடாகவே பயன்படுத்திக் கொள்ளலாம்.

உயர் ரத்த அழுத்தம், உஷார்: ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது நமக்கு இயல்பு அளவு. ஆனால், அது 120/80க்கும் 130/80க்கும் இடைப் பட்டதாக இருந்தாலும் அதை இயல்பு அளவாகவே எடுத்துக் கொள்ளலாம். உங்கள் ரத்த அழுத்தம் 130/80 முதல் 139/89 வரை இருந்தால் உயர் ரத்த அழுத்தப் பாதையில் பாதம் பதிக்கிறீர்கள் (Elevated blood pressure) என்று அர்த்தம்.

அப்போது சரியான உணவு முறையாலும் (DASH Diet) உடற்பயிற்சி உள்ளிட்ட வாழ்க்கை முறைகளாலும் அதைக் கட்டுப்படுத்த முயலுங்கள். இயலவில்லை என்றால் மாத்திரை எடுத்துக்கொள்ளத் தயங்கா தீர்கள். ரத்த அழுத்தம் 140/90க்கும் அதிகம் என்றால் ‘உயர் ரத்த அழுத்தம்’ (Hypertension) என்னும் எல்லைக்கு வந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

இதற்கு உணவில் உப்பைக் குறைத்து, தகுந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டு ரத்த அழுத்தம் எப்போதும் கட்டுப் பாட்டில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். மருத்துவர் யோசனைப்படி மாதம் ஒருமுறை அல்லது மருத்துவர் கூறும் இடைவெளி களில் ரத்த அழுத்தத்தை அளந்துகொள்ளுங்கள்.

சர்க்கரை நோய்க் கட்டுப்பாடு: வம்சாவளியில் சர்க்கரை நோய் வரச் சாத்தியமுள்ளவர்கள் 20 வயதிலிருந்தே உணவுமுறையிலும் உடல் எடையிலும் எச்சரிக்கையாக இருங்கள். சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பவர்களும் (Pre-diabetes) உணவுமுறை, உடல் எடை, உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள்.

சர்க்கரை நோய் வந்துவிட்டால், மருத்துவர் பரிந் துரைக்கும் மாத்திரைகள், இன்சுலின் ஊசி மருந்து எதுவானாலும் அளவு மாறாமல், உணவு முறையும் மாறாமல் தொடர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள். மாதம் ஒருமுறை ரத்தச் சர்க்கரை அளவையும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ‘ஹெச்பிஏஒன்சி’ (HbA1C) அளவையும் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ரத்தச் சர்க்கரை 120 - 140 மி.கிராமுக்குள் இருக்க வேண்டும். 40 வயதுக்குக் கீழ் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு ‘ஹெச்பிஏஒன்சி’ 6.5%க்குக் கீழும், 40 - 60 வயதுக்குள் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு இது 7%க்குக் கீழும், 60 – 70 வயதுக்குள் இருப்பவர்களுக்கு 7.5%க்குக் கீழும், 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 8%க்குக் கீழும் இருக்க வேண்டும்.

சரியான கொலஸ்டிரால் அளவுகள்: கொலஸ்டிரால் பிரச்சினை இருந்தால் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவுகளைப் பரிசோ தித்துக் கொள்ளுங்கள். மொத்த கொலஸ்டிரால் 200 மி.கி.டெ.லி.க்குக் குறை
வாகவும், டிரைகிளி சரைட்ஸ் 150 மி.கிரா முக்குக் குறைவாகவும் இருக்க வேண்டும். கெட்ட கொலஸ் டிரால் (LDL) 100 மி.கிராமுக்குக் குறைவாக இருக்க வேண்டும் என்பது பொதுவான விதி.

குடும்ப வரலாற்றில் கூடுதல் கொலஸ்டிரால் உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோயும் இதய பாதிப்பும் சேர்ந்து இருப்பவர்களுக்கும் கெட்ட கொலஸ்டிரால் 70 மி.கிராமுக்குக் குறைவாகவும், ஏற்கெனவே பைபாஸ் அறுவைசிகிச்சை, ஆஞ்சியோ பிளாஸ்டி மேற்கொண்டிருக்கும் நபர்களுக்கு இது 50 மி.கிராமுக்குக் குறைவாகவும் இருக்க வேண்டும்.

நல்ல கொலஸ்டிரால் (HDL) ஆண்களுக்கு 40 மி.கிராமுக்கு அதிக மாகவும், பெண்களுக்கு 50 மி.கிரா முக்கு அதிகமாகவும் இருக்க வேண் டும். இதற்கு உடற்பயிற்சியும் சரியான உணவுமுறையும் முக்கியம்.

உடல் எடை கவனம்: உங்கள் உயரத்துக்கு ஏற்ப உடல் எடை சரியாக இருக்க வேண்டும். இதற்கு உணவிலும் உடற் பயிற்சி யிலும் கவனம் செலுத்துங்கள். உணவில் இடம்பெறும் உப்பு, இனிப்பு,
கொழுப்பு அளவுகள் முக்கியம்.

தவிர்க்க வேண்டிய உணவு

* எந்திரங்களில் தீட்டப்பட்ட அரிசி உணவு வகைகள்.
* நிறை கொழுப்பு உணவு வகைகள்.
* இனிப்புகள், பேக்கரி பண்டங்கள்.
* மது, செயற்கைப் பானங்கள்.
* பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்.
* துரித உணவு வகைகள்.

சேர்க்க வேண்டிய உணவு!

* சிறுதானிய உணவு வகைகள்.
* முழுத்தானிய உணவு வகைகள்.
* காய்கறிகள், கீரைகள், பழங்கள்.
* பருப்பு, பயறு, கடலை, சுண்டல் உணவு வகைகள்.
* பால், பாலில் தயாரிக்கப்பட்ட பனீர் உணவு வகைகள்.
* பாதாம், முந்திரி, தேங்காய்.
* செக்கு எண்ணெய் தினமும் ஒரு நபருக்கு 15 மி.லி.
* மீன், தோலுரிக்கப்பட்ட கோழி இறைச்சி.

உடற்பயிற்சி விவரங்கள்: பெரியவர்கள் தினமும் குறைந்த பட்சம் 40 நிமிடம் அல்லது வாரத்துக்கு 150 நிமிடம் நடைப்பயிற்சி செய்யுங்கள். வாரத்தில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குத் தசை வலுவூட்டும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். சிறுவர் சிறுமியரும் பதின்பருவத்தினரும் தினமும் 60 நிமிடம் மைதானத்தில் விளையாடலாம்; ஓடலாம்; உடற் பயிற்சி செய்யலாம். இதய ஆரோக்
கியம் உள்ள இளைய வயதினர் ‘ஜிம்’, எடை தூக்குதல் போன்ற தசை வலுவூட்டும் பயிற்சிகளைச் செய்யலாம். கர்ப்பிணிகள் பிரசவத் துக்குப் பிறகும் வாரம் 150 நிமிடம் உடற்பயிற்சிகளைச் செய்யலாம். யோகாவும் தியானமும் உதவும்.

உயிரின் நாதமே இதய நாதம்: ‘இதயம் போற்று’ தொடரில், பலதரப்பட்ட இதயநோய்கள் குறித்துத் தொகுத்து வழங்கிய போது, அவற்றை வாசித்த வாசகர்களில் பலரும் மின்னஞ்சலில் தங்கள் சந்தேகங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டனர்.

நான் சென்னையில் இருக்கிறேன் என எண்ணிக்கொண்டு என்னிடம் சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்தவர்களின் எண்ணிக்கை அதிகம். நான் ராஜபாளையத்தில் இருக்கிறேன். அதனால், அவர்கள் அனைவருக்கும் என்னால் உதவ முடியவில்லை என்பதில் வருத்தமே. ஆனாலும், பலருக்கும் இதயம் சார்ந்த நோய்களுக்கும் மற்றவற்றுக்கும் சரியான சிகிச்சை கிடைக்க மின்னஞ்சலில் வழிகாட்டியிருக்கிறேன்.

இதய நலம் தொடர்பான விழிப் புணர்வை ‘இதயம் போற்று’ தொடர் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை வாசகர்களின் ஏராளமான மின்னஞ்சல்களும் அலைபேசி அழைப்புகளும் உறுதிப்படுத்து கின்றன. உங்களுக்கு ஏற்பட்ட விழிப்புணர்வை மற்றவர்களுக்கும் கடத்துங்கள். இதய நலம் காக்க அனைவரும் இணைந்து செயல்படுவோம். நம் உயிரின் நாதமே இதய
நாதம். அதை என் றென்றும் போற்றுவோம்.

உயிர் காக்கும் மருந்துகள்: நெஞ்செரிச்சல், நெஞ்சுவலி, இதைத் தொடர்ந்து இடது புஜவலி, உடல் வியர்ப்பது, படபடப்பு, தலைசுற்றல், வாந்தி ஆகியவை இதயத்தின் ‘அபாயக் கூக்குரல்கள்’. இவற்றை அலட்சியப்படுத்தா தீர்கள். நெஞ்சுவலி வந்தவருக்கு ஆஸ்பிரின் 325 மி.கி., அட்டார்வாஸ்டேடின் 80 மி.கி., குளோபிடோகிரில் 300 மி.கி. ஆகிய மாத்திரைகளை அருகிலுள்ள மருத்துவர் அறிவுரையுடன் தர வேண்டும். மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு முதல் ஒரு மணி நேரம்தான் உயிர் காக்கும் பொன்னான நேரம். தாமதிக்காமல் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். அப்போதுதான் இதயத்துக்கு ஏற்படும் உயிர் ஆபத்தைத் தடுக்க முடியும்.

பொதுவான யோசனைகள்

* தினமும் 6 – 8 மணிநேர உறக்கத்துக்கும் மன அமைதிக்கும் வழி செய்யுங்கள்.
* 30 வயதுக்குப் பிறகு வருடத்துக்கு ஒருமுறையாவது ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை, கொலஸ்டிரால், தைராய்டு அளவுகள் ஆகியவற்றைப் பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
* 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்துக்கு ஒருமுறை இசிஜி, ‘ட்ரெட் மில்’ (Treadmill test) பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.
* இதய நலம் காப்பதற்குத் தொண்டை, பற்கள் ஆகியவற்றின் ஆரோக்கியமும் முக்கியம்.
* ஜிம், எடை தூக்குதல், தடகள விளையாட்டு, தீவிர விளையாட்டு போன்ற வற்றில் ஈடுபடுவதற்கு முன்பு இதயப் பரிசோதனைகளை மேற் கொள்ளுங்கள்.
* வம்சாவளியில் இதய பாதிப்புக்கு வாய்ப்புள்ளவர்கள் 20 வயதிலிருந்தே இதயப் பாதுகாப்புக்குத் தனி கவனம் செலுத்துங்கள்.
* உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்டிரால், இதய வலி மாரடைப்புக்குப் பிந்தைய ஆரோக்கியம் ஆகியவற்றுக்குரிய மாத்திரை களையும், இன்சுலின் ஊசி மருந்தையும் தொடர்ந்து பயன்படுத்துங்கள். மாத்திரைகளை மாற்றவோ, நிறுத்தவோ, அளவைக் குறைக்கவோ, கூட்டவோ மருத்துவர் யோசனையைக் கேட்டுக்கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் சுயமாகச் செயல்படாதீர்கள்.
* கர்ப்பிணிக்கு நான்காம் மாதத்தில் ‘கரு எக்கோகார்டியோகிராபி’ (Foetal echocardiography) பரிசோதனையை மேற்கொண்டால் குழந்தையின் இதய ஆரோக்கியத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

வேண்டாமே... புகைப்பழக்கம், மதுப்பழக்கம், பிற போதைப் பொருள்கள் பழக்கம், தசைவலுவூட்ட ஊசிகள் (Anabolic steroids) ஆகியவை வேண்டவே வேண்டாம்.

நன்றி: தொடரில் இடம்பெற்ற எல்லாக் கட்டுரைகளையும் அச்சுக்கு முன்பே வாசித்து மேம்படுத்திய இதயநல வல்லுநர்கள் டாக்டர் சு. தில்லை வள்ளல் (வெங்கடேஸ்வரா மருத்துவமனை, சென்னை), டாக்டர் எம். எஸ். விஷ்ணுதாஸ் (திருநெல்வேலி), டாக்டர் எஸ். ராஜேந்திர பிரசாத் (கோவில்பட்டி), மதுப்பழக்கம் தொடர்பான கட்டுரைகளை வாசித்து வளப்படுத்திய உளவியல் டாக்டர் எஸ். மோகன வெங்கடாசலபதி (சேலம்) ஆகியோருக்கும், 50 வாரங்கள் என்னோடு பயணித்த வாசகர்களுக்கும் என் நேசமிக்க நன்றி.

- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; gganesan95@gmail.com

SCROLL FOR NEXT