இளம்பெண் ஒருவர் தன் பெற்றோருடன் என் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவருக்குச் சமீபத்தில் தான் திருமணம் ஆகியிருக்க வேண்டும். மகிழ்ச்சி ததும்பவேண்டிய அந்த மூவரது முகங்களில் கவலை ரேகைகள். என்னவென்று விசாரித்தேன். பெற்றோர்தான் பேசினார்கள். “இவள் எங்களுக்கு ஒரே மகள். எந்தக் குறையும் இல்லாமல் வளர்த்தோம். திருமணமும் செய்துவைத் தோம். அவள் ‘உண்டாகியிருக்கிற’ செய்தி கேட்டுச் சம்மந்தி வீட்டுக்குப்போனோம்.
‘உங்கள் பெண்ணுக்கு இதயநோய் இருப்பதை மறைத்து விட்டீர்கள்’ என்று எங்கள் மீது பழியைப் போட்டார்கள். விசாரித்த போது, மருமகள் கர்ப்பமானதும் ஒரு மருத்து வரிடம் அவர்கள் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
அந்த மருத்துவர்தான் எங்கள் மகளுக்கு இதய நோய் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். எங்கள் வீட்டில் வளர்ந்தவரைக்கும் அவளுக்குப் பெரிதாக நோய்வந்ததாக நினைவில்லை. உண்மையிலேயே அவளுக்கு இதய நோய் இருக்கிறதா, இல்லையா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும், டாக்டர்” என்றார்கள் உடைந்த குரலில்.
எனக்குப் புரிந்துவிட்டது. அந்த இளம்பெண்ணுக்குக் குழந்தைப் பருவத்தில் ‘கீல்வாதக் காய்ச்சல்’ (Rheumatic fever) வந்திருக்க வேண்டும். அது அவர் இதயத்தைப் பாதித்திருக்க வேண்டும். அதன்விளைவு இப்போதுதான் வெளிப் பட்டிருக்க வேண்டும். நான் நினைத்ததை அவருடைய ‘எக்கோ’ பரிசோதனை உறுதிப்படுத்தியது.
அவருடைய இதயத்தில் ‘மைட்ரல் வால்வு’ (Mitral valve) சுருங்கியிருந்தது. இடது இதயத்தின் மேலறையிலிருந்து (Left atrium) இடது கீழறைக்கு (Left ventricle) ரத்தத்தை அனுப்பும்போது இந்த வால்வு 4 - 5 ச.செ.மீ. வரை திறக்க வேண்டும்.
அந்தப் பெண்ணுக்கோ ஒரு ச.செ.மீ.கூடத் திறக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தது. இந்தக் ‘கீல்வாத இதய நோய்’ (Rheumatic Heart Disease - RHD) பலருக்கும் பதின் பருவத்தில்தான் வெளியே தெரிய வருகிறது. ஆனாலும், இதற்கான அடித்தளம் சிறுவயதிலேயே போடப் பட்டுவிடுகிறது.
இதயத்தைக் கடிக்கும் காய்ச்சல்: ‘பீட்டா ஹீமோலைட்டிக் ஸ்ட்ரெப்டோகாக்கஸ்’ (Beta-haemolytic streptococcus) என்னும் பாக்டீரியத்தின் தாக்குதல்தான் கீல்வாதக் காய்ச்சலுக்கு அடிப்படைக் காரணம். குழந்தைப் பருவத்தில் தொண்டையில் புண் ஏற்படுவது இதன் முதல் அறிகுறி. பெரும்பாலானோருக்கு இந்தப் புண் தொண்டை யோடு நின்றுவிடும். 10,000 பேரில் 3லிருந்து 6 பேருக்கு இதன் தாக்குதல் இதயநோய் வரை இழுத்துவரும்.
கடுமையான காய்ச்ச லோடு முழங்கால், முழங்கை, மணிக்கட்டு, கணுக்கால் போன்ற பெரிய மூட்டுகளில் மாறி மாறி வீக்கமும் வலியும் தொல்லை கொடுக்கும். இந்தத் தொல்லைகள் பெரும்பாலான வைரஸ் காய்ச்சலின் போதும் உண்டாவதால், கீல்வாதக் காய்ச்சலைப் பலரும் அலட்சியப் படுத்திவிடுவார்கள். அடுத்து, மூட்டுகளைப் பாதித்த கிருமி இதயத் தைத் தாக்குகிறது. முதலில் மூன்றடுக்கு இதயச்சுவர்களை இது பதம் பார்க்கிறது.
இந்தத் தாக்குதலில் இதன் வீரியம் குறைவாக இருப்பதால், இதையும் பலர் அலட்சியப்படுத்து வார்கள். ஆனால், அதற்குப் பிறகு கீல்வாதக் காய்ச்சல் அடிக்கடி வந்து இதய வால்வுகளைத் தாக்கத் தொடங்கும். இதனால், அந்த வால்வுகள் நிரந்தரமாகவே பழுதாகிவிடும். இந்த நோய்க்கு மருத்துவத் துறையில் சிறப்பு வர்ணனை ஒன்று உண்டு. ‘கீல்வாதக் காய்ச்சல், மூட்டுகளை முகர்ந்து பார்த்துவிட்டு இதயத்தைக் கடித்துவிடுகிறது’ (Rheumatic fever licks the joints, but bites the heart) என்பதே அந்த வர்ணனை.
குழந்தைகளைத் தாக்கும் கீல் வாதக் காய்ச்சல் பெரும்பாலும் மைட்ரல் வால்வைத்தான் முதலில் குறிவைக்கும். பிறகு, அயோர்ட்டிக் வால்வு (Aortic valve), அடுத்ததாக, ட்ரைகஸ்பிட் வால்வு (Tricuspid valve) என மற்ற வால்வுகளையும் இது பழுதாக்கும். சிலருக்கு ஒரு வால்வு பழுதாகும்.
இன்னும் சிலருக்கு இரண்டு வால்வுகளும், வெகு அரிதாகச் சிலருக்கு மூன்று வால்வுகளும் பழுதாகலாம். பத்து வயதி லிருந்தே இதய வால்வுகள் பழுதாகத் தொடங்குவதால், அதன் விளைவுகள் 15லிருந்து 35 வயதுக்குள் தெரிய ஆரம்பிக் கலாம்.
விளைவுகள் என்னென்ன? - முதலில், ‘விளையாட முடிய வில்லை, மூச்சுவாங்குகிறது’ என்று தான் பெரும்பாலான குழந்தைகள் மருத்துவர்களிடம் வருவார்கள். இன்னும் சிலர் ‘கொஞ்சம்கூட நடக்க முடியவில்லை, டாக்டர். மூச்சுமுட்டு கிறது’ என்பார்கள். சிலருக்கு இருமும் போது சளியில் ரத்தம் வரலாம். இன்னும் சிலர் இந்தக் கட்டங்களை யெல்லாம் கடந்து முகம், பாதம், வயிறு ஆகியவை வீங்கிப்போன நிலைமையில்கூட மருத்துவரிடம் வருவார்கள்.
பெண்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் கர்ப்பமடையும்போது தான் இதய வால்வுப் பிரச்சினை வெளிப்படும். காரணம், இதயம் அதிகமாக வேலை செய்ய வேண்டிய காலம் அது; வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சேர்த்து அதிக அளவு ரத்தத்தை உடலுக்கு அனுப்ப வேண்டிய பருவம் அது.
அதுவரை இப்படி ஓர் இதயநோய் தங்களுக்கு இருப்பது பல பெண்களுக்குத் தெரியாத காரணத்தால், கட்டுரை யின் ஆரம்பத்தில் பார்த்த பெண்ணைப் போல் ‘இதயநோய் இருப்பதை மறைத்துத் திருமணம் செய்துவிட்டீர்கள்’ என்று மாப்பிள்ளை வீட்டில் குற்றஞ்சாட்டப்படுவது உண்டு.
பயம் தேவையில்லை: ‘இந்த நோய் நீங்கள் நினைக்கும் அளவுக்குப் பயப்படும் நோய் அல்ல. இதற்குச் சிகிச்சை இருக்கிறது’ என்று தைரியம் சொல்லி, சென்னையில் இதற்கெனப் புகழ்பெற்ற ஒரு மருத்துவமனையில் அந்தப் பெண் சிகிச்சை பெற ஏற்பாடு செய்தேன். இன்றைக்கு அந்தப் பெண் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி, வெளிநாட்டில் வேலை செய்கிறார்.
இதய வால்வுகள் பாதிக்கப்படு வதால் அவர்களின் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக அர்த்தமில்லை. சரியான விழிப்புணர்வு இருந்தால், இந்த வகை இதயநோயையும் சமாளித்து விடலாம். ஐம்பதாண்டுகளுக்கு முன்பு கீல்வாதக் காய்ச்சல் அதிக அளவில் பாதித்தது. நவீன மருத்துவத்தில், பல வகை ஆன்டிபயாட்டிக்குகள் வந்த பிறகு இந்தப் பாதிப்பு உலக அளவில் குறைந்திருக்கிறது.
வளர்ந்த நாடுகளில் இதை ஒழித்தேவிட்டார்கள். இந்தியாவில் இது இன்னமும் இருக்கிறது. தமிழ்நாட்டில், அரசுப்பள்ளிகளில் மருத்துவப் பரிசோதனை கள் கட்டாயமாக்கப்பட்டதால், மாணவரிடம் ஏற்படுகிற இந்த வால்வு பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிய முடிகிறது.
என்ன சிகிச்சை உள்ளது? - சிகிச்சையைச் சொல்வதற்கு முன்னால், இந்த நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏன் ஏற்படுகிறது என்பதைச் சொல்லிவிடுகிறேன். ‘மைட்ரல் வால்வுச் சுருக்கம்’ (MitralStenosis) என்பது இந்த நோயின் பெயர். மைட்ரல் வால்வு சுருங்கி விடும்போது, இடது இதய மேலறை, நுரையீரல் ஆகியவற்றில் ரத்தம் தேங்கிவிடுகிறது.
அதன் தொடர்ச்சியாக அங்கெல்லாம் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதன் விளைவால், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இருமும்போது அதிக அழுத்தத் துடன் இருமுவதால், நுரையீரலில் நுண் ரத்தக்குழாய்கள் வெடித்துச் சளியுடன் ரத்தமும் வெளியேறுகிறது.
இப்போது சிகிச்சைக்கு வரு வோம். மைட்ரல் வால்வைச் சரிப் படுத்துகிற சிகிச்சைகளில் பல வகை உண்டு. நோயாளியின் வயது, வால்வுப் பாதிப்பு, இதயத் திறனிழப்பு (Heart failure), உதறல் துடிப்பு (Atrial fibrillation) ஆகியவற்றைப் பொறுத்து சிகிச்சை தேர்ந்தெடுக்கப்படும். சுருங்கிப்போன வால்வை விரிவடையச் செய்ய வேண்டும். அல்லது பழுதான வால்வை மாற்ற வேண்டும். இந்த இரண்டுவிதச் சிகிச்சைகள்தான் இந்த நோயாளிகளைக் காப்பாற்றும்.
மைட்ரல் வால்வு உள்ளிட்ட இதய வால்வுப் பிரச்சினைகளை ‘எக்கோ’ (Echocardiogram) பரிசோதனையில் தெரிந்துகொள்ளலாம். ‘பலூன் மைட்ரல் வால்வுலோபிளாஸ்டி’ (Balloon mitral valvuloplasty) என்னும் சிகிச்சையில் மைட்ரல் வால்வை விரித்துவிடலாம். நோயாளியின் வலது தொடையிலுள்ள சிரை வழியாக, ஒரு வளைக்குழாயையும் ஒரு வளைக்கம்பியையும் நுழைத்து, சுருங்கிப்போன மைட்ரல் வால்வு வழியாக இடது கீழறைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். பிறகு.
அந்தக் கம்பி வழியாக விரியும் தன்மையுள்ள ஒரு பலூனை மைட்ரல் வால்வுக்கு அனுப்ப வேண்டும். நோயாளியின் உயரத்துக்கு ஏற்ப இந்த பலூனின் அளவு தீர்மானிக்கப்படும். பொதுவாக 2 – 2.8 செ.மீ அளவுள்ள பலூனை அனுப்புவார்கள். அது மைட்ரல் வால்வைக் கடக்கும்போது பலூனை விரிவடையச் செய்வார் கள்.
இப்போது பலூனோடு மைட்ரல் வால்வும் விரிவடையும். பின்னர், பலூன், வளைக்கம்பி, வளைக் குழாய் ஆகியவற்றை உருவிவிட்டால், மைட்ரல் வால்வு இயல்பாக இயங்க ஆரம்பித்துவிடும். ஆனால், இது எல்லாருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது.
வால்வு மட்டும் சுருங்கியிருந்து, அதன்மீது கால்சியம் படியாமலும், ரத்தக்கசிவு இல்லாமலும், வால்வின் மூடும் திறன் நன்றாகவும் இருந்தால் இதை மேற்கொள்ளலாம். இந்தச் சிகிச்சை பொருந்தாதவர் களுக்கு மைட்ரல் வால்வை மாற்றுவதுதான் (Mitral Valve Replacement - MVR) சிறந்த தீர்வு. இதயத்தைத் திறந்தும் இதை மேற்கொள்ளலாம்; இதயத்தைத் திறக்காமலும் மேற் கொள்ளலாம்.
அறுபது வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு இதயத்தைத் திறந்து மேற்கொள்ளப்படும் சிகிச்சையில், பழுதான மைட்ரல் வால்வுக்குப் பதிலாக ஓர் உலோக வால்வைப் (Metallic mechanical valve) பொருத்து கிறார்கள். ரத்த உறைவைத் தடுக் கும் மாத்திரைகளை எடுக்க முடியாத அறுபது வயதுக்கு மேற்பட்டவர் களுக்கும், ரத்தக்கசிவு பிரச்சினை உள்ளவர்களுக்கும் ஓர் உயிரி செயற்கை வால்வைப் (Biological valve) பொருத்துகிறார்கள்.
மைட்ரல் வால்வு எங்கே இருக்கிறது? - இதயத்தில், இடது பக்க மேலறைக்கும் கீழறைக்கும் நடுவில் மைட்ரல் வால்வு இருக்கிறது. இதயத்தில் ரத்தப் பாதைக்கு வழிவிடுகிற வால்வு இது. ஆக்ஸிஜன் நிரம்பிய ரத்தம், இடது மேலறையிலிருந்து இடது கீழறைக்கு வரும்போது திறந்து வழிவிடுவதும், பிறகு அந்த ரத்தம் இடது கீழறையிலிருந்து மகா தமனிக்குச் (Aorta) செல்லும்போது இடது மேலறைக்கு ரத்தம் திரும்பிவிடாதபடி மூடிக்கொள்வதும்தான் மைட்ரல் வால்வின் முக்கிய வேலை.
(போற்றுவோம்)
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; gganesan95@gmail.com