ஒரு மேடைக் கச்சேரி கடைசிவரை கேட்டு ரசிக்கும்படி இருக்க வேண்டுமென்றால், முதன்மைப் பாடகரின் வசீகரக் குரல் மட்டும் போதாது; பக்கவாத்தியங்களும் பிரமாதமாக அமைய வேண்டும். அதுபோலவே ஒருவருக்கு மாரடைப்பு சிகிச்சை சரியான பலனைத் தர வேண்டுமென்றால், இதயத் தமனியின் ரத்த அடைப்பை அகற்றும் முக்கிய சிகிச்சையுடன் அந்த அடைப்புக்குச் ‘சகுனி வேலை’ பார்த்த புகைபிடித்தல், ரத்த கொலஸ்டிரால், மன அழுத்தம் போன்ற சதிகாரர்களைச் சரணடைய வைக்கும் சிகிச்சைகளும் சீராக இருக்க வேண்டும்.
எந்தவொரு நோய்க்கும் இரண்டு வித சிகிச்சைகள் உண்டு. மருந்து, மாத்திரைகளைக் கொண்டு குணப்படுத்துவது ஒரு வழி; மருந்து, மாத்திரை இல்லாமல் குணப்படுத்துவது அடுத்தவழி. ‘மருந்து, மாத்திரை இல்லாமல் ஒரு சிகிச்சை முறையா?’ என்று புருவம் உயர்த்த வேண்டாம். நோயைக் குணப்படுத்தும் எந்தவொரு வழியும் சிகிச்சைமுறைதான் என்கிறது நவீன மருத்துவம். உதாரணத்துக்கு, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, உறக்கம், ஓய்வு போன்றவை பல நோய்களைத் தீர்த்து வைக்கின்றன. இவையும் சிகிச்சை முறையில்தான் சேர்த்தி. ஆனால், இந்தப் புரிதல் நமக்குக் குறைவாக இருப்பதால், நோயைத் தீர்ப்பதற்கு மருந்து, மாத்தி ரைகளை மட்டுமே நம்புகிறோம்; மாத்திரை அல்லாத இந்தத் துணைவழிகளை நம் வசதிக்கு மறந்து விடுகிறோம். இதனாலேயே பல நோய்களால் அவதிப்படுகிறோம். ‘ஆஞ்சைனா பெக்டோரிஸ்’ (Angina pectoris) என்னும் இதயவலியைப் பொறுத்தவரை மருந்து சிகிச்சை மட்டும் போதாது; மருந்து அல்லாத சிகிச்சையும் தேவை.
அது என்ன மருந்தில்லாச் சிகிச்சை?- ஒரு சம்பவம் சொல்கிறேன். அண்ணாமலை சென்னைவாசி. ஒருமுறை அவர் உறவினர் வீட்டுத் திருமணத்துக்கு ராஜபாளையம் வந்திருந்தபோது அவருக்கு நெஞ்சு வலி வந்ததால் என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். பரிசோதித்ததில் அவருக்கு ‘இதயவலி’ இருந்தது. சிகிச்சைக்குப்பிறகு, “நீங்கள் லிஃப்ட் உள்ளஅபார்ட்மென்ட்டுக்கு மாறிக்கொண் டால், உங்களுக்கு நெஞ்சுவலி வருவது குறைந்துவிடும்” என்றேன்.
அவர் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார். “லிஃப்ட் உள்ள அபார்ட் மென்ட்டுக்கும் என் நெஞ்சுவலிக்கும் என்ன சம்பந்தம்?” எனக் கேட்டார். “நீங்கள் நெஞ்சுவலி மாத்திரைகளைச் சரியாகச் சாப்பிட்டுவருகிறீர்கள். ஆனாலும், அது மறுபடி மறுபடி வருகிறது என்றால், இதயத்துக்கு ஏதோ ஒரு வழியில் நீங்கள் பளுவை ஏற்றுகிறீர்கள் என்று அர்த்தம். உங்களைப் பொறுத்தவரை உங்கள் அபார்ட்மென்ட்டில் லிஃப்ட் இல்லை. மூன்றாம் மாடிக்குப் போகப் படியில் ஏற வேண்டிய நிர்பந்தம். அதனால்தான் உங்களுக்கு நெஞ்சுவலி வருகிறது”என்றேன். அவர் என் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு லிஃப்ட் உள்ள அபார்ட்மென்ட்டுக்கு மாறிக்கொண் டார். இன்றுவரை அவருக்கு நெஞ்சுவலி திரும்பவில்லை என்று அவரது உள்ளூர் உறவினரைச் சமீபத்தில் சந்தித்தபோது தகவல் சொன்னார். அண்ணாமலைக்கு நான் சொன்னது மருந்தில்லாச் சிகிச்சை.
புகைபிடிக்காதவர்களைக் காட்டிலும் புகைபிடிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்குப் பல மடங்கு சாத்தியம் அதிகம் என்று பார்த்தோம். இது பலரைப் பயப்படவைத்தாலும் ஒரு நல்ல செய்தியும் உண்டு. புகை பிடிப்பவர்கள் அந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்டால், நான்கிலிருந்து ஐந்து ஆண்டுகளில் அவர்களுக்கு மாரடைப்பு வரும் சாத்தியம் பாதியாகக் குறைந்துவிடுகிறது; 50 வயதில் நிறுத்தினால்கூட ஆறு வருடங்கள் ‘போனஸ் வாழ்க்கை’ கிடைக்கிறது. எனவே, புகைப்பதை நிறுத்து வது என்பது இதயவலிக்கு மருந்தில்லாச் சிகிச்சை. மதுவை மறப்பதும் இதில்தான் சேர்த்தி. இதயவலி வந்தவர்கள் தங்கள் வாயையும் வயிற்றை யும் கட்ட வேண்டும் என்று சொல்வார்கள். பட்டினி கிடக்க வேண்டும் என்பதல்ல இதன் அர்த்தம்; வயிறு முட்ட மூன்று வேளைக்குச் சாப்பிடுவதைத் தவிர்த்து அரை வயிற்றுக்கு மூன்று வேளைக்குச் சாப்பிட் டால், இதயத்துக்குப் பளுஏறாது; நெஞ்சுவலி வராது.
இதேபோல் சாப்பிட்டவுடன் நடப்பது, கையில் அதிக பளுவோடு நடப்பது, அதிகக் குளிரில் நடப்பது, மலை ஏறுவது போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். இப்படிச் சின்ன சின்ன காரியங்களிலும் கருத்தாக இருந்தால், இதயவலியைச் சுலபத்தில் ‘கைது’ செய்துவிடலாம். கோபத்தைக் குறைப்பது, உணர்ச்சி வசப்படாமல் இருப்பது, உறக்கத்துக்கு வழி பார்ப்பது, நிம்மதியை நாடுவது போன்ற உளவியல் தீர்வுகளும் கைகூடினால் இதயவலியை மகிழ்ச்சியாக ‘வழியனுப்பி’ விடலாம். இது முக்கியம். ‘உணவு என்பதுபசிக்கானது; ருசிக்கானது அல்ல’எனும் உண்மையை இதயவலிக் காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அப்போதுதான் உணவு மோகம் குறையும். சுருக்கமாகச் சொல்வதென் றால், நிறை கொழுப்பு மிகுந்த உணவு வகைகளையும் துரித உணவு வகைகளையும் ஒதுக்கிவிடுவது, ‘நொறுவை’ என்கிற பெயரில் பேக்கரி உணவகங்களில் குவிந்திருக்கும் ஊடுகொழுப்பு (Trans fat) உணவு வகைகளைத் தவிர்ப்பது, செயற்கை உணவு வகைகளை மறந்து இயற்கை உணவு வகைகளுக்கு மாறுவது, அசைவத்தில் மீனுக்கு முன்னுரிமை கொடுப்பது, காய்கறிகள்/பழங்கள்/ கொட்டை உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுவது… இவற்றின் வழியாகத் தொப்பைக்கு இடம் தராமலும் இதயத்துக்குப் பளு கூடாமலும் பார்த்துக்கொண்டால் இதய நலம் கூடும்.
உணவு வரிசையில் இத யத்துக்கு ஆபத்தாகிற ஒரு முக்கியமான விஷயத்தை நினைவுபடுத்தியே ஆகவேண்டும். சுத்தி கரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்தான் அது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் யில் உள்ள ரசாயனங்கள் நம் ரத்தக் குழாய்களில் பசைபோல் ஒட்டிக்கொள்வதால் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதுவே இதயத் தமனிக் குழாய்களில் நேர்ந்தால் இதயவலிக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. இந்த ஆபத்தைத் தடுக்க செக்கு எண்ணெய்க்கு மாறிக்கொள்வது நல்லது. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 3 தேக்கரண்டி எண்ணெய் போதும்.
இன்றைய அவசர வாழ்வில் இதயவலிக்காரர்களுக்குப் பலவித அழுத்தங்களைச் சமாளிப்பதுதான் பெரிய சவாலாக இருக்கிறது. தினமும் காலையில் 40 நிமிடம் நடந்தால் இதயத்துக்குப் பலம் கூடிவிடும்; அப்போது இதயவலிக்கு வழி இல்லாமல் போய்விடும். மாலையில் 40 நிமிடம் யோகாவும் 20 நிமிடம் தியானமும் மேற்கொண்டால் இன்னும் நல்லது. இதயத்தைப் பாதுகாக்கும் மருந்தில்லாச் சிகிச்சையில் இனி மிச்சம் இருப்பது உறக்கம் மட்டுமே. தினமும் குறைந்தது 7 மணி நேரம் உறக்கம் முக்கியம்.
இதயவலிக்கு மருந்து சிகிச்சை: மருந்து என்று எடுத்துக்கொண்டால், இதயவலிக்கு நாளொரு மாத்திரை, நவீன ஊசிகள் அறிமுக மாகிக்கொண்டே இருக்கின்றன. இருந்தாலும், முக்கியமான சில மாத்திரைகளை/ஊசிகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். நெஞ்சில் ஏற்படும் வலியானது இதயவலி யாக இருக்கும்பட்சத்தில் நாக்குக்கு அடியில் நைட்ரேட் மாத்திரையை வைத்தால் வலி உடனே மறைந்துவிடும். இதுதான் இதயவலிக்கு அற்புத மருந்து. அடுத்தது ஆஸ்பிரின். ரத்தத்தில் தனித்தனியாகச் சுற்றிக்கொண்டிருக்கும் தட்டணுக்கள் திடீரென்று திராட்சைக் குலைபோல் கொத்தாகக் குவிந்து இதயத்தின் ரத்த ஓட்டத்தை அடைத்துவிடுகின்றன. அப்போது இதயவலி ஏற்படுகிறது. தட்டணுக்கள் இப்படித் ‘தர்ணா’ செய்வதற்கு ஆஸ்பிரின் ‘144 தடை உத்தரவு’ போட்டுவிடுகிறது. இதனால் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. என்றாலும் இரைப்பையில் புண் உள்ளவர்கள் இதைச் சாப்பிட்டால், அந்தப் புண் அதிகமாவதற்கு வாய்ப்புண்டு. அதைத்தடுக்க அல்சர் மாத்திரை ஒன்றையும் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.
தட்டணுக்களால் ரத்தம் கட்டியா வதைத் தடுக்க குளோபிடோகிரில் (Clopidogrel), பிரசுகிரில் (Prasugrel), டிக்காகிரிலார் (Ticagrelor) என மேம்பட்ட மாத்திரைகள் பலவும் உள்ளன. நோயாளியின் தேவை யைப் பொறுத்து இவற்றில் ஒன்றை மருத்துவர் தேர்வு செய்து கொடுப் பார். இதயத் தமனிகளில் ரத்தம் உறை வதைத் தடுக்க LMW ஹெப்பாரின் (Low Molecular Weight Heparin) ஊசிகள் போடப்படுவதும் வழக்கம். இதயவலிக்கு அடுத்ததொரு முக்கிய மருந்தாக பீட்டா பிளாக்கர்கள் (Beta blockers) இருக்கின்றன; கால்சியம் சேனல் பிளாக்கர்களும் (CCB) வந்துள் ளன. இவை இதயத் துடிப்பைச் சீராக்குவதுடன் ஆக்ஸிஜன் தேவையையும் குறைத்துவிடுகின்றன. இதனால் இதய வலிக்கான ஆபத்து குறைகிறது.
(போற்றுவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.