ஏஐ படம் 
நலம் வாழ

குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு

க.தர்ஷினி பிரியா

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், குழந்தைகளுக்குச் சரியான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்துவது பெற்றோருக்குப் பெரும் சவாலாக உள்ளது. தாய்ப்பாலில் தொடங்கிக் குழந்தை வளர்ச்சியின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் உணவு முக்கியப் பங்கு வகிக்கிறது என்கிறது சித்த மருத்துவம். குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை முழுமையாகத் தாய்ப்பால் கொடுப்பதைச் சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடும். ஆறு மாதங்களுக்குப் பிறகு, குழந்தை யின் வயதுக்கேற்பக் கஞ்சி போன்ற உணவு வகையை அறிமுகப்படுத்த வேண்டும். இதில் கேழ்வரகுக் கஞ்சி அல்லது பாசிப்பருப்புக் கஞ்சி போன்றவை உடலுக்கு மிகுந்த சக்தி தரும். இதன்மூலம் குழந்தைக்குத் தேவையான அளவில் கால்சியம் சத்து கிடைக்கிறது.

பழங்கள் - காய்கறிகள்: ஆப்பிள், ஏலக்கி / நேந்திரம், மாதுளை ரசம் போன்றவை ரத்தம் அதிகரிக்க உதவும் எனச் சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. முருங்கைக் கீரை, பீர்க்கங்காய், சுரைக்காய் போன்றவற்றை உடல் ஆற்றலுக்கும் நரம்புவளர்ச்சிக்கும், கேரட், பீட்ரூட் போன்ற வற்றை ரத்தத்தில் சத்து சேர்வதற்கும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். துவரை/பயறு வகைகளை வெறும் நீரிலோ காய்கறிக் கலவையிலோ சேர்த்துக் கொடுக்கலாம்நாட்டு நெல்லில் இருந்து பெறப் படும் அரிசி, சித்த மருத்துவப் பாரம்பரியத்தில் சிறந்த சத்து உண வாகப் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த உணவு வகைகள் குழந்தையின் உடல், மூளை வளர்ச்சிக்குத் தேவையான நார்ச்சத்து, மற்ற சத்துக்கள், விட்டமின்களை வழங்குகின்றன.

பசும்பால்: வலுவான எலும்புகளை உருவாக்கப் பால் உதவுகிறது. இதில் கால்சியம், விட்டமின் டி ஆகியவை நிறைந்துள்ளன. கால் லிட்டர் பசும்பாலில் பாஸ்பரஸ், விட்டமின் பி 12, பொட்டாசியம் ஆகியவை அதிகமாக உள்ளன. மேலும் 8 கிராம் புரதமும் உள்ளது. குழந்தைகளுக்கு ஒரு வயதுவரை பசுவின் பால் கொடுக்கக் கூடாது. ஒரு வயது நிறைவடைந்த குழந்தைகளுக்குப் பசும்பால் கொடுக்கலாம். ஆனால், நாள் ஒன்றுக்கு அரை லிட்டருக்குக் குறைவாகக் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் (CDC) தெரிவிக்கிறது. சோயா பாலில் அதிக புரதம் உள்ளது; இதில் கால்சியம், விட்டமின் டி நிறைவாக உள்ளது.

பீன்ஸ்: பீன்ஸ் மிகவும் சத்தான உணவு. இது புரதம், நார்ச்சத்து நிறைந்தது. கறுப்பு பீன்ஸ், கொண்டைக் கடலை அல்லது கிட்னி பீன்ஸில் குறைந்த சோடியம் உள்ளதால் அதைப் பயன்படுத்தலாம். 4 முதல் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளுக்கு25 கிராம் நார்ச்சத்து தேவைப்படு கிறது. இது ஆரோக்கியமான செரிமானத்தைக் குழந்தைகளிடம் ஊக்குவிக்க உதவுகிறது.

காலத்துக்கேற்ற உணவு: உணவானது உடல்நிலை - காலநிலை அடிப்படையில் மாற்றப்பட வேண்டும் எனச் சித்த மருத்துவம் அறிவுறுத்து கிறது. எடுத்துக்காட்டாக, கோடையில் பானங்கள் - மோர்,காய்ச்சப் பட்டு ஆற வைக்கப்பட்ட வெந்நீர் / இளஞ்சூடான நீர், மழைக்காலத்தில் துளசி, இஞ்சி, மிளகு கலந்த கஷாயம்/ ரசம், குளிர் காலத்தில் எள், உளுந்து போன்ற சூட்டைத் தரும் உணவு வகைகள்.

தானியங்களும் தேவை: பெரும்பாலான குழந்தைகளின் உணவில் இல்லாத ஊட்டச்சத்தை முழு தானியங்கள் வழங்குகின்றன. முழு கோதுமை, பழுப்பு அரிசி, முழு கோதுமை ரொட்டி ஆகியவை மேம்பட்ட நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளன.

முட்டை ஏன் அவசியம்? - குழந்தைகளுக்குச் சிறந்த காலை உணவாக முட்டை அமையும். முட்டையில் 6 கிராம் புரதச் சத்து உள்ளது. மேலும் விட்டமின் டி, விட்டமின் பி12, இரும்புஆகியவை அடங்கியுள்ளன. குழந்தை களின் மூளை வளர்ச்சிக்கு உதவும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் முட்டையில் உள்ளன. கொழுப்பு பற்றிக் கவலை தேவை யில்லை. எனினும், ஒரு வயதுவரை குழந்தைக்கு முட்டை கொடுக்க வேண்டாம் என்கிறார் கள் மருத்துவர்கள். அதேநேரம் 2020இல் அமெரிக்கன் அகாடமி ஆஃப் அலர்ஜி ஆஸ்துமா & இம்யூனாலஜி ( American Academy of Allergy, Asthma & Immunology) கூறுவதன்படி திட உணவு வகைகளுக்குக் குழந்தைகள் தயாராக இருக்கும் போது முட்டையை அறிமுகப்படுத்தலாம் என்கிறது. ஏனெனில் உணவு ஒவ்வாமை யைத் தடுக்க முட்டை உதவும் என்கிறது.

வள்ளிக்கிழங்கு சாப்பிடலாமா? - குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆகும் போதே சர்க்கரை வள்ளிக்கிழங்கைக் கொடுக்கலாம். வளர்ந்த பிறகு அதை விரும்பிச் சாப்பிடுவார்கள். சர்க்கரை வள்ளிக்கிழங்கில் விட்டமின் ஏ, நார்ச்சத்து, பொட்டாசியம் ஆகியவற்றை உருவாக்கும் பீட்டா கரோட்டின் நிரம்பியுள்ளது; இதில் போதுமான அளவு பொட்டாசியம் உள்ளதால் வருங்காலத்தில் குழந்தையின் ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவு கிறது. இக்கிழங்கை நீராவியில் வேக வைத்துக் கொடுப்பது நல்லது.

கொட்டைகள், விதைகள்: கொட்டைகள், விதைகளைச் சேர்த்து வறுத்து உருண்டையாக்கிக் கொடுப்பது நன்மை தரும். முந்திரி, வால்நட், பாதாம், சூரியகாந்தி விதைகள் போன்றவற்றைக் கலக்கி எடுக்கவும். குழந்தைக்குக் கொட்டை, விதை ஒவ்வாமை இருந்தால், பாதுகாப்பானவற்றை மட்டும் தேர்வு செய்யுங்கள். இது நார்ச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்பு அடங்கிய மூன்றையும் வழங்க சிறந்த வழி. மொறுமொறுப்பான இந்த உருண்டை குழந்தைகளின் உடலுக்கு நன்மை தரும். கொட்டைகளில் மக்னீசியம் அதிகமாக உள்ளது; இது எலும்பு வளர்ச்சி, ஆற்றல் உற்பத்திக்கு முக்கியமான கனிமம். வால்நட், ஆளிவிதைகளில் ஆல்ஃபா - லினொலெனிக் அமிலம் அதிகமாக உள்ளது. இது ஒமேகா 3 கொழுப்பு வகைகளையும் உள்ளடக் கியது.

தயிரைச் சேருங்கள்: தயிர் புரோபயாடிக்காகச் செயல்படுகிறது. ஆரோக்கியமான குடலைப் பராமரிக்க நல்ல பாக்டீரியா அவசியம். தயிரில் இரண்டு மடங்கு புரதம் உள்ளது. எனவே பசுந்தயிர் குழந்தைக்கு நல்லது.

குழந்தைகளுக்கு மூலிகைகள்

தவிர்க்க வேண்டியவை: செயற்கை ருசி, வண்ணம் சேர்க்கப்பட்ட இனிப்புகள், அதிக எண்ணெய், உப்பு, சர்க்கரை கொண்ட பொருட்கள் போன்றவை குழந்தையின் உடல் வளர்ச்சியைக் குறைப்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் உடல் பருமன், ஆரோக்கியச் சிக்கல்கள் ஏற்படும் சாத்தியத்தை அதிகரிக்கும். இயற்கை உணவு வகைகளுடன் முறையான தூக்கம், மிதமான உடற்பயிற்சி (பசுமையான இடங்களில் நடத்தல், விளையாடுதல்), வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய்க் குளியல் போன்ற இயற்கை சார்ந்த பழக்கங்களும் குழந்தைகளின் சீரான வளர்ச்சியில் பங்காற்றுகின்றன.
குழந்தைகளுக்கு நாம் தேர்வுசெய்யும் உணவு, அவர்களது எதிர்கால வாழ்க்கையின் அடையாளமாக மாறும். சிறு வயதில் இருந்தே இயற்கையோடு இணைந்த உணவுப் பழக்கத்தை வளர்த்தல், ஒரு தலைமுறையின் உடல்நலம் மட்டுமல்ல, அதன் அறிவாற்றலையும் மேம்படுத்தும். உணவே மருந்தாக இருக்கட்டும்; மருந்தே உணவாக இருக்க வேண்டாம்.

கட்டுரையாளார், சித்த மருத்துவர்.

SCROLL FOR NEXT