நலம் வாழ

மாதவிடாய் நின்ற பிறகு...

டாக்டர் சு.முத்துச்செல்லக்குமார்

பெண்கள் பொதுவாக 15-16 வயதில் பூப்படை வார்கள்; சிலருக்கு 12-13 வயதில்கூட இது ஏற்படலாம். மாதவிடாய் வருதல் என்பது எப்படி இயற்கையானதோ, அதேபோல் 45 வயதைக் கடந்த பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதும் இயல்பானது. மாதவிடாய் சுழற்சி நிரந்தரமாக முடிவடைவது என்பது இயல்பான நிலையாகும். பெண்ணின ஹார்மோன்களின் உற்பத்தி படிப்படியாகக் குறைந்து கடைசியில் முற்றுப்புள்ளி வைத்து ‘குட்பை’ சொல்வதே அது. இதை ஆங்கிலத்தில் Menopause என அழைக்கிறோம்.

எப்படி ஏற்படுகிறது? - மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்களின் சினைப்பையில் கரு உற்பத்தியாகாது. சிலருக்கு இது 45 வயதுக்கு முன்னரே ஏற்படலாம். சிலருக்கு 50ஐக் கடந்து 55 வயது வரைகூட நீடிக்கலாம். கருப்பையில் இந்த வயதில் ஏற்படும் சில மாற்றங்களாலும் அவற்றின் செயல்பாடு குறைவாலும் ஈஸ்ட் ரோஜன் எனப்படும் பெண்ணின் ஹார்மோன் அளவு குறைந்து கொண்டே செல்கிறது; ஹார்மோன் போதுமானதாக இல்லாத நிலையில், கருத்தரிப்பதற்காக முட்டை களைச் சினைப்பைகளால் உருவாக்க முடியாது. இந்த நிலையில் பெண் களுக்கு ‘மாதவிடாய் நிறுத்தம்' ஏற்படுகிறது.

எப்படி அறிவது? - தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு மேலாக, மாத விடாய் இல்லாமலேயே இருக்கும். இதுவே மெனோபாஸ் நிலையைப் பெண்கள் அடைந்து விட்டதற் கான முதல் அறிகுறி. ஆனால் சிலருக்கு, மெனோபாஸ் நிலைக்குப் பிறகும் உதிரப்போக்கு இருந்தால் அது வேறு ஏதோ நோயின் அறிகுறி என்பதைப் பெண்கள் புரிந்துகொண்டு, அதற்கு உரிய பரிசோதனை களை மேற்கொள்ள வேண்டும்.

பரிசோதனைகள் தேவைப்படுமா ? - பொதுவாக, மெனோ பாஸைக் கண்டறிய பரிசோதனைகள் தேவையில்லை. பிற நோய்களினாலோ, பிற காரணங்களினாலோ மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டதைக் கண்டறிய ஹார்மோன் அளவுகளைக் கணக் கிடலாம். மேலும், இவர்களுக்குப் பொதுவான ரத்தப் பரிசோதனைகள், சிறுநீர் பரிசோதனை ஆகியவற்றுடன் ஒரு மாஸ்டர் ஹெல்த் பரிசோதனை, மார்பக, கருப்பை வாய்ப்பகுதி பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனைகள் ஆகிய வற்றையும் செய்துகொள்ளலாம். எலும்பு அடர்த்தி அளவீடு பரிசோத னையும் தேவைப்படலாம்.

பிற காரணங்கள்: இரண்டு சினைப்பைகளையும் அறுவைசிகிச்சை (Oophorectomy) செய்துகொண்டவர்கள், என்டோ மெட்ரியோசிஸ் (Endometriosis), புற்றுநோய் சிகிச்சை பெற்றவர்கள், கதிர்வீச்சு சிகிச்சை பெற்றவர்கள், எச்.ஐ.வி.-எய்ட்ஸ் போன்ற நாள்பட்ட நோய்கள் அல்லது ஈஸ்ட்ரோஜென் செயல்பாட்டைக் குறைக் கும் சிகிச்சை பெற்றவர்கள் ஆகியோருக்கு மாதவிடாய் நிறுத்தம் ஏற்படலாம்.

உடல்நலப் பிரச்சினைகள்: மாதவிடாய் நின்ற பிறகு பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகளும் தொந்தரவு களும் இருப்பதில்லை. ஆனால், இவை நபருக்கு நபர் வேறுபடலாம்.

வெப்ப அலைகள் (Hot flashes) - உடல் முழுவதும் திடீரென வெப்ப உணர்வு பரவுதல்; இது பெரும்பாலும் முகம், கழுத்து, மார்பில் ஏற்படுகிறது. சிலருக்கு உடல் வெப்ப இழப்பு காரணமாக, உடல் சூட்டிற்குப் பிறகு குளிர்ச்சியாக உணரலாம்.

எலும்புப் புரை (Osteoporosis) - ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டினால் எலும்புகளின் அடர்த்தி குறையும். இதனால் சிலருக்குச் சிறு காயம்கூட எலும்பு முறிவை ஏற்படுத்திவிடும்.

இதய நோய்கள்: ரத்த அழுத்தம் அதிகரித்தல், மார டைப்பு ஏற்படுதல். மெனோபாஸ் வந்த பிறகு பெண்களுக்கும் ஆண்களைப் போல இதய நோய்களின் பாதிப்புகள் அதிகரிக்கலாம்.

தொற்றுப் பிரச்சினைகள்: சிறுநீர் தொற்றுப் பிரச்சினைகள் ஏற்படலாம். தாம்பத்தியத்தில் ஈடுபாடு குறையலாம்; பெண்ணுறுப்பு வறட்சி யால் உடலுறவு வலி மிகுந்ததாக மாறும்.

உளவியல் பிரச்சினைகள்: எதிலும் ஆர்வம் இல்லாமை, கவனம் செலுத்துவதில் சிரமம், பதற்றம், மனச்சோர்வு, தூங்குவதில் சிரமம், தேவையற்ற கோபம், எரிச்சல் போன்ற மனநிலை மாற்றங்கள் பெண்களுக்கு ஏற்படலாம்.

சிகிச்சைகள் என்னென்ன? - மெனோபாஸ் என்பது நோய் அல்ல; எனவே, எல்லாருக்கும் சிகிச்சை அவசிய மில்லை. எனினும் சில தொந்தரவுகளும் பாதிப்புகளும் இருப்ப வர்களுக்குச் சில சிகிச்சைகள் தேவைப் படலாம்.

ஹார்மோன் சிகிச்சைகள்: ஹார்மோன் சிகிச்சை முறையில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன.

* ஈஸ்ட்ரோஜன் மட்டும் தரும் சிகிச்சை (ET): இந்தச் சிகிச்சையில் ஈஸ்ட்ரோஜன் குறைந்த அளவில் தரப்படும். இது ஈஸ்ட்ரோஜன் பேட்ச், மாத்திரை, கிரீம், பிறப்புறுப்பு வளையம், ஜெல் அல்லது ஸ்பிரே போன்ற பல்வேறு முறை களிலும் பயன்படுத்தப்படுகிறது.

* சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன் - புரொ ஜெஸ்டரோன் சிகிச்சை (EPT) என்கிற ‘கூட்டுச் சிகிச்சை’ அளிக்கப்படுகிறது. ஹார்மோன் சிகிச்சையினாலும் சில பாதிப்பு கள் ஏற்படலாம். எனவே, மருத்துவரின் ஆலோச னையைக் கேட்டு அவரது மேற்பார்வையில் மிகுந்த கவனத்துடன் இந்தச் சிகிச்சையை பெற வேண்டும்.

ஹார்மோன் அல்லாத மருந்துகள் - சிகிச்சைகள்

* காஃபின் (Caffeine) அளவைக் கட்டுப்படுத்துவது, சரிவிகித உணவுடன் போதுமான விட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்த நார்ச் சத்துள்ள காய்கறி, கீரை, பழங்கள் ஆகியவற்றையும் உட்கொள்ள வேண்டும்.

* படுக்கையறையைக் குளிர்ச்சியாக வைத்திருப்பது, உடற்பயிற்சி செய்தல், இசையை ரசித்தல், போதுமான உறக்கம், புகை - மது தவிர்த்தல், கிரீம்களைப் பயன்படுத்திப் பிறப்புறுப்பு வறட்சியைப் போக்குதல் போன்றவை தேவை.

* சிறுநீர்ப்பைப் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கவனித்தல், போதுமான அளவு நீர் அருந்துதல் ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, மகளிரியல் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்றுச் சிகிச்சை பெற வேண்டும்.

- கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர்; muthuchellakumar@gmail.com

SCROLL FOR NEXT