மாரடைப்புக்கு முக்கிய அறிகுறி நெஞ்சுவலி என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், ‘எல்லா நெஞ்சு வலியும் மாரடைப்பா?’ என்று கேட் டால் ‘இல்லை’ என்பது தான் என் பதில். நெஞ்சில் வலி வருவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்க, அது மாரடைப்பு வலியா, மற்ற வலியா என்பதைத் தெரிந்து கொள்வது எப்படி? நெஞ்சில் வலி வரும்போது நீங்கள் அந்த இடத்தை ஒரு விரலால் தொட்டுக் காண்பித்தால், தொட்டால் வலி கூடுகிறது என்றால், தொப்புளுக்குக் கீழ் வலி பரவுகிறது என்றால் அது பெரும்பாலும் மாரடைப்பு வலியாக இருக்காது.
மாரடைப்பு வலியானது சுவரில் பல்லி ஓடுவதுபோல் மார்பில் இங்கும் அங்குமாக ஓடாது; ஊசிகுத்தும் வலியாகவோ, மின்னல் வெட்டுவதுபோலவோ, மின்சாரம் பாய்வதுபோலவோ அது இருக்காது. இருந்தாலும், வலி வருகிற நேரத்தில் இ.சி.ஜி. எடுத்துப் பார்த்துக்கொண்டால் சந்தேகம் தெளியும். முக்கியமாக, முதியோருக்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் பெண்களுக்கும் இந்த மாதிரி வலி வரும்போது இ.சி.ஜி. எடுத்துப் பார்ப்பது நல்லது.
எது ‘இதயவலி’? - மாரடைப்பின் ஆரம்பகட்ட அறிகுறி ‘ஆஞ்சைனா பெக்டோரிஸ்’ (Angina pectoris) என்னும் நெஞ்சுவலி. இதை ‘நெஞ்சுவலி’ என்று சொல்வது பொதுவானது; ‘இதயவலி’ என்று சொல்வதுதான் பொருத்தமானது. இதயத்தில், இதயத் தமனியின் (Coronary artery) குறுக்குப் பரப்பை கொலஸ்டிராலும் ரத்த உறைவுக் கரலும் இணைந்த படிமம் (Plaque) பாதிக்கு மேல் அடைத்தபிறகு அல்லது இதயத் தமனி இரும்புபோல் இறுகியதைத் தொடர்ந்து நெஞ்சில் ஏற்படும் ஓர்இடையூறுதான் இதய வலி.
இதயத்தசைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோ கம் தடைபடுவதன் விளைவாக இது வருகிறது. ‘இஸ்கீமியா’ (Ischemia) என்னும் நிலைமை இது. முழுமையான மாரடைப்புக்கு முன்னோட்டம் விடும் ஒரு ‘டீசர்’ இது. பால் பொங்குவதற்கு முன் வருகிற மெல்லிய சத்தம்போல, உடலில் எந்தவோர் அசாதாரண நிகழ்வுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை இருக்கும். நாம்தான் அதைக் கவனிப்பதில்லை.
மாரடைப்பு விஷயத்தில் இது நூற்றுக்கு நூறு நிஜம். எப்படி? குமட்டல், வாந்தி, மூச்சு முட்டுவது, நெஞ்செரிச்சல், ஓடிவந்ததுபோல் ஒருவிதக் களைப்பு, குறுமயக்கம்… இப்படி ஏதாவது ஒரு சாதாரண தொல்லையுடன்கூட இதய வலி ஆரம்பிக்கலாம். ‘நெஞ்சில் வலி வந்தால்தானே இதயவலி’ என்று எண்ணிக் கொண்டு, இதை நாம் ‘கண்டுகொள்ள’ மாட்டோம். வாய்வு வலி, செரிமானம் சரியில்லை என்று அதை அலட்சியப் படுத்தியிருப்போம். ‘இது மாரடைப்பின் ஆரம்பம்’ என்பதை உணரத் தவறியிருப்போம்.
இதய வலி எப்போது வரும்? - படியில் ஏறினாலோ, பளு தூக்கினாலோ, வேகமாக நடந்தாலோ, உணர்ச்சி வசப்பட்டாலோ, நிம்மதி தொலைந்தாலோ, நடுங்க வைக்கும் குளிர்க்காற்று பட்டாலோ நெஞ்சு கனமாக இருக்கும். பலருக்கு வெறும் வயிற்றில் நடக்கும்போது வராத நெஞ்சுவலி வயிறுமுட்டச் சாப்பிட்டு விட்டு நடக்கும்போது வரும். வேகமாக நடந்தால்/மாடி ஏறினால் நெஞ்சில் வலி வருகிறபோது, நடப்பதை/மாடிப்படி ஏறுவதை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்தால் வலி குறைந்துவிடும். அல்லது நைட்ரோகிளிசரின் மாத்திரையை நாக்கின் அடியில் வைத்தால் உடனே அந்த வலி குறைந்துவிடும். இந்த மாதிரியான நெஞ்சுவலி இதயவலியாகத்தான் இருக்கும்.
இவர்கள் போகப்போகச் சொல் லும் ‘வலி வார்த்தைகள்’ இவை: “நடுநெஞ்சில் எரிச்சல் தாங்க முடிய வில்லை”; “வலியோடு ஏப்பம் ஏப்பமாக வருகிறது”. இவற்றோடு “மூச்சு விட முடியவில்லை” என்பார்கள். வலிக்கும் இடத்தைக் காட்டச் சொன்னால், இவர்கள் உள்ளங்கையை விரித்து நடுநெஞ்சில் பரப்புவார்கள் அல்லது முஷ்டியால் நடுநெஞ்சைக்குத்துவதுபோல் காட்டுவார்கள்.
பிறகு, அந்த வலி கழுத்துக்கு, தாடைக்கு, இடது கைக்கு, பல்லுக்குப் பரவுவதாகச் சொல்வார்கள். “உடம்பு அதிகமாக வியர்க்கிறது” என்பார்கள். இவர்களுக்கு இ.சி.ஜி.,டிரெட் மில், எக்கோ, ட்ரோப்போனின் ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டால் ‘இதயவலி’ இருப்பது புலப்படும். கரோனரி ஆஞ்சியோ கிராபி அதை உறுதி செய்யும். மாரடைப்பின் முதலா வது முகம் இதுதான்.
நிலையில்லா இதயவலி: மாரடைப்புக்கு இன்னொரு முகமும் உண்டு. அதற்குப் பெயர், ‘நிலை யில்லா இதயவலி’ (Unstable Angina). இது சார்ந்துதான் எல்லாரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏன்? திருடுவதற்குச் சமயம் பார்த்து இருட்டில் மறைந்திருக்கும் திருடனைப்போல் இதயத் தமனியில் சிறு ரத்த உறைவுக் கரல் வெடித்து (Embolus) ஒதுங்கி நிற்கும்; அவ்வப்போது இது நகர்ந்து இதயத் தமனியை அடைக்கும். அப்போதெல்லாம் வருவது நிலையில்லா இதயவலி.
இதை எப்படி அறிவது? - ஓய்வாக இருக்கும்போதும் நடு நெஞ்சில் வலி வருகிறது; சின்னசின்ன வேலைகள் செய்தால்கூட வலி கடுமையாகிறது; ஒரு மாதத்துக்குள் வலி மறுபடியும் வருகிறது என்றால், அது நிலையில்லா இதயவலியாக இருக்கலாம். இவர்களுக்கு நெஞ்சு வலி இருக்கும்போது இ.சி.ஜி. எடுத்தால்தான் இதயவலி புலப்படும். மற்ற நேரத்தில் இ.சி.ஜி. இயல்பாகவே இருக்கும். மேலும், இவர்களுக்கு முதல்முறை யாக எடுக்கப்படும் இ.சி.ஜி. இயல்பாக இருந்து, நெஞ்சுவலி தொடருமானால், 15 நிமிடம், 30 நிமிடம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் கழித்தும் இ.சி.ஜி. (Serial ECG) எடுத்துப் பார்க்க வேண்டும்.
ட்ரோப்போனின் பரிசோதனையும் தேவைப்படும். இவை எல்லாமே இயல்பாக இருந்து, பயனாளிக்கு நெஞ்சுவலி தொடருமானால், கரோனரி ஆஞ்சியோகிராபி பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். இதில்தான் நெஞ்சு வலிக்குக் காரணம் இதயவலியா என்பது 100% உறுதிப்படும். மாரடைப் பின் இரண்டாவது முகம் இது.
பேராபத்தான மாரடைப்பு: இதயவலிக்கு முறைப்படி சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஆபத்தில்லை. அப்படிச் செய்யாதவர்களுக்கு, திடீரென்று நெஞ்சுவலி கடுமையாகும். இதுவரை சிறிதாக இருந்த ரத்த உறைவுக் கரல் வளர்ந்து முதன்மை இதயத் தமனியை முழு வதுமாக அடைத்து விடுவதுதான் இதற்குக் காரணம்.
இதனால், இதயத் தசை களுக்கு ரத்த ஓட்டம் தடைபட்டு, ஆக்ஸிஜன் உள்ளிட்ட உணவுச்சத்து கிடைக்காமல் இதயத்தசைகள் அழிந்துபோகும். அப்போது, ‘திடீர் இதயத்தசை அழிவு நோய்’ (Acute Myocardial Infarction) என்னும் பேராபத்து வரும். இதற்கு இன்னொரு மருத்துவமொழி ‘STEMI’ (ST- elevation myocardial infarction – STEMI). மாரடைப்பின் மூன்றாவது முகம் இது.
இந்த நோயாளிகள் பெரும்பாலும், ‘டாக்டர், என் நெஞ்சின் மீது பாறாங் கல்லை ஏற்றிவைத்த மாதிரி இருக்கிறது’; ‘நெஞ்சுக்கூட்டையே நெரிக்கிற மாதிரி இருக்கிறது’; ‘நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி இறுக்குவதுபோல இருக்கிறது’ என்பார்கள். ‘நடுநெஞ்சில் ஏற்படுகிற வலி கழுத்து, தாடை, இடது புஜம், இடது கையின் உள்புறம் ஆகிய இடங்களுக்கும் பரவுகிறது’ என்பார்கள். சிலருக்கு வலது கைக்கும், முதுகுக்கும் கூட வலி பரவலாம். பலரும் உடல் முழுவதும் வியர்வையில் நனைவார்கள்.
படுத்தாலும் ஓய்வெடுத்தாலும் இந்த நெஞ்சுவலி குறையாது. நைட்ரோ கிளிசரின் மாத்திரையை நாக்குக்கு அடியில் வைத்தாலும் பலன் கிடைக்காது. நேரம் ஆகஆக வலி அதிகரித்துக்கொண்டே போகும். எதிராளி கழுத்தை நெரிக்கிற மாதிரி மூச்சுத் திணறும். மயக்கம் வரும். மாரடைப்பின் கோர முகம் இது. பயனாளியின் திடீர் உயிரிழப்புக்கு முக்கியக் காரணம் இதுதான். இந்தப் பாதிப்பில் சிக்கிக் கொண்டவரை இதயநல மருத்துவமனைக்கு உடனே அழைத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் பயனாளியின் உயிரைக் காப்பற்ற முடியும்.
மாரடைப்பை உறுதி செய்ய… முதலில் இ.சி.ஜி. பரிசோதனை அவசியம். அதைத் தொடர்ந்து, எக்கோ, ட்ரோப்போனின், கரோனரி ஆஞ்சியோகிராபி ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். சிலருக்கு சி.டி. கரோனரி ஆஞ்சியோகிராபி மூலம் ‘கரோனரி கால்சியம் ஸ்கோர்’ (Coronary artery calcium - CAC) பரிசோதிக்கப்படும். இவற்றின் மூலம் நெஞ்சுவலிக்குக் காரணம் மாரடைப்பா என்பதை 100% உறுதிப்படுத்தலாம்.
கரோனாவால் இதய பாதிப்பு - இது உண்மையா? - கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலக அளவில் மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்திருக்கிறது என்கிறார்களே, அது உண்மையா? உண்மைதான். என்ன காரணம்? கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு இதய உறைகளில் கரோனா வைரஸ் நாள்பட்ட அழற்சியை (Inflammation உண்டாக்கிவிடுகிறது. இதனால், இதயத்தசை அழற்சி (Myocarditis), இதய வெளிஉறை அழற்சி (Pericarditis) என்னும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவை இதயத்தின் முறைகேடான துடிப்புக்கு (Arrhythmia) விதை போடுகின்றன.
அடுத்து, இதயத் தசைகளை வீங்கவைக்கின்றன. இதனால் இதயத்தசை நோய் (Cardiomyopathy) வருகிறது. இது இதயத்தின் செயல்திறனைக் குறைத்து, இதயச் செயலிழப்பை வரவேற்கிறது. மேலும், கரோனா தொற்று ‘சைட்டோகைன்’ (Cytokine) என்னும் அழற்சிப் புரதங்களை ரத்தத்தில் சுரக்கவைக்கின்றன.
இவை அளவுக்கு மிஞ்சும்போது தமனிக் குழாய்களில் ரத்தம் உறைவதைத் தூண்டுகின்றன. இம்மாதிரியான ரத்த உறைவுக் கரல்கள் இதயத் தமனி நோய்க்கும் (CAD) நுரையீரல் தமனி அடைப்புக்கும் (Pulmonary embolism) வழிவகுக்கின்றன. இந்த நிலைமைகளை கரோனாவுக்குப் பிந்தைய இதயப் பாதிப்புகள் (Post Covid Syndrome) என்கிறோம்.
அதேநேரம், கரோனா தொற்றாளர்கள் எல்லாருக்கும் இந்த ஆபத்துகள் ஏற்படுவதில்லை என்பது ஓர் ஆறுதல். ஏற்கெனவே இதய பாதிப்பு இருக்கிறவர்களுக்கும், ரத்தக்கொதிப்பு, நீரிழிவு போன்ற இணை நோய்களைச் சரியாகக் கவனிக்கத் தவறியவர்களுக்கும்தான் மாரடைப்பு மூலம் திடீர் உயிரிழப்பு ஏற்படுகிற சாத்தியம் அதிகரிக்கிறது. இவர்கள்கூட முறைப்படி இதயப் பரிசோதனைகளை மேற்கொண்டால் இந்த ஆபத்திலிருந்து தப்பிக்கவும் முடியும்.
(போற்றுவோம்)
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; gganesan95@gmail.com