நலம் வாழ

கலங்க வைக்கும் மாரடைப்பு | இதயம் போற்று 39

கு.கணேசன்

நெஞ்சில் வலி வந்தாலே ‘மாரடைப்பாக இருக்குமோ?’ என்று பயந்து, மருத்துவரைத் தேடி ஓடுகிறவர்கள் ஒரு ரகம். நடுநெஞ்சில் வலி தொடங்கி, அது இடது கைக்குப் பாய்ந்தாலும், ‘வாயுவாகத்தான் இருக்கும்’ என்று அலட்சியப்படுத்தி, பூண்டு மாத்திரை சாப்பிட்டு, நாள்களைக் கடத்துகிறவர்கள் இன்னொரு ரகம். முதல் ரகத்தில் பயனாளிக்குப் பயம்தான் பிரச்சினை. இரண்டாவதில் மாரடைப்பே பிரச்சினை. இப்படி இல்லாமல், மாரடைப்பின் முகாந்திரத்தைத் தெளிவாகத் தெரிந்துகொண்டால், ‘அச்சமும் இல்லை, ஆபத்தும் இல்லை!’ என்னும் தனி ரகத்தில் சேர்ந்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் தயாரா?

மக்களைப் பாதிக்கும் தொற்றா நோய்க் கூட்டத்தின் தலைவன் மாரடைப்பு. ஒரு புள்ளிவிவரப்படி சொன்னால், முதல்முறையாக மாரடைப்பு வந்தவர்களில் கால்வாசிப் பேர் சிகிச்சை பெறுவதற்கு முன்பே உயிரிழக்கின்றனர். அப்படியே எல்லா மருத்துவ வசதிகளும் இருக்கிற மருத்துவமனைகளில் இவர்கள் சிகிச்சை பெற்றால்கூட 5% முதல் 7% பேர் வரை சிகிச்சை பலனளிக்கா மல் உயிரிழக்கின்றனர். மாரடைப்பி லிருந்து மீண்டவர்கள்கூடக் காலமெல்லாம் மருந்துப் பொட்டலத்தோடு தான் அலைய வேண்டியிருக்கிறது. அதனாலேயே ‘மாரடைப்பு’ எனக் கேட்ட மாத்திரத்தில் எல்லாருக்கும் அடிவயிறு கலங்கிவிடுகிறது.

யாருக்கு வருகிறது? - சென்ற தலைமுறை தாத்தாக் களுக்கு 70 வயதுக்கு அப்புறம்தான் மாரடைப்பு வந்தது. ‘துரத்தலும் தப்பித்தலுமான’ தற்போதைய புத்தியல்பு வாழ்க்கைமுறையில் 25 வயது இளையோருக்கு மாரடைப்பு வருகிறது. இந்த இடத்தில் மருத்துவக் கல்லூரியில் நான் படித்தது நினைவுக்கு வருகிறது. 1900களில் ‘இதயநோய்த் தடுப்பு மருத்துவத்தின் தலைவ’ராகக் கருதப்பட்ட அமெரிக்க மருத்துவர் பால் டட்லே ஒய்ட் (Paul Dudley White), “வேலைகளைச் சுலபமாக்கி மனிதர்களைச் சோம்பேறியாக்கும் எந்திரங்கள்தான் மாரடைப்பைக் கொண்டு வருகின்றன” என்கிற கருத்தை முன்வைத்தார். அது இன்றைக்கு நிஜமாகி வருகிறது.

காட்டிலும் மேட்டிலும் வெயிலிலும் குளிரிலும் காலங்காலமாக உழைத்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட வில்லை; பணி நிமித்தமோ, நேர்த்திக் கடனுக்கோ பயணத் தொலைவு பல மைல்கள் என்றாலும் நடந்தே போன போது மாரடைப்பு என்கிற பேச்சு இன்றுபோல் பரவலாக இல்லை. குடித்தது அரை வயிற்றுக் கஞ்சிதான் என்றாலும் குடியானவர்கள் மாரடைப் பால் மரணம் அடைந்த வரலாறு குறைவு.

ஆனால் இன்று? சொகுசாக காரில் செல்லும் செல்வந்தருக்கும் மாரடைப்பு; சிகரெட்டும் கையுமாகத் திரியும் தொழிலாளிக்கும் மாரடைப்பு; கணினிக்கு முன்னால் வசதியாக அமர்ந்திருக்கும் மென்பொருள் பொறியாளருக்கும் மாரடைப்பு; பன்னாட்டு உணவுச்சந்தையின் வசீகர உணவு வகைகளால் ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட பதின்பருவத்தினருக்கும் மாரடைப்பு; செயற்கை உரங்களால் மலடாகிப்போன மண்ணில் விளைச்சல் இல்லாமல் தவிக்கிற விவசாயிக்கும் மாரடைப்பு.

மருத்துவர் ஒய்ட் இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார்: “மனிதனுக்கு 60 வயதுக்குள் மாரடைப்பு என்பது இயற்கையின் கட்டளை அல்ல; அவனே கொடுத்துக்கொள்ளும் தண்டனை!”. இதை அர்த்தமுள்ள பொன் மொழி என்கிறார்கள் மருத்துவர்கள். மனிதன் எப்போது உடலுழைப்பைக் குறைத்து, உடற்பயிற்சியைக் கைவிட்டு, உணவைக் கூட்டி, உடல் எடையை ஏற்றி, சோம்பேறி ஆனானோ, ஆசைகளைக் கூட்டி ஆடம்பரங்களைத் தேடி நுகர்வுக் கலாச்சாரத் துக்குள் நுழைந்தானோ, ஆர்ப்பாட்டம் இல்லாத பாரம்பரிய வாழ்க்கை முறையைத் துறந்து ஆர்ப்பரிக்கும் துரித வாழ்க்கை முறையை நுகர்ந்தானோ அப்போதே மாரடைப்பு என்னும் ‘புதைகுழி’க்குள் சிக்கிக் கொள்ள அவன் தயாராகிவிட்டான் என்பது இதன் அர்த்தம்.

உண்மைதானே! இன்றைக்குக் கிராமத்தில் வசிப்பவர்களைவிட, நகரத்தில் வசிப்பவர்களுக்கு மாரடைப்பு மூன்று மடங்கு அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். காரணம், கிராமத்து வாழ்க்கை அமைதி யானது; நிமிட முள்போல் நகர்வது. நகரத்து வாழ்க்கை இதற்கு நேர்மாறானது; நொடிக்கு நொடி ஆரவாரம் நிறைந்தது; பந்தயக் குதிரைபோல் பாய்வது. முன்னதில், ‘மன அழுத்தம் என்றால் என்ன?’ என்று கேட்கத் தோன்றும். பின்னதில், எல்லைக்கோட்டை எட்டும்வரை பாய்ச்சலில் இருக்கிற எல்லாருக்கும் மன அழுத்தம்தான் எகிறித்தள்ளும். இந்த அசுர வேகமும் அழுத்தமும்தான் நகரவாசிகளுக்கு மாரடைப்பைக் கொண்டுவரும் அதிவேக அஞ்சல்காரர்கள்.

உணர்ச்சிப் போராட்டங்கள்! - அலைகள் ஒவ்வொன்றும் ஒருவிதம். அதுபோல் மனிதர்களும் பல்வேறு விதம். யாருக்கு அளவுக்கு மீறி ஆத்திரம் வருகிறதோ, கடுகளவும் பொறுமை கிடையாதோ, தோல்வியை/அதிர்ச்சியைத் தாங்கும் துணிவு இல்லையோ, யாரெல்லாம் சின்ன சின்ன பிரச்சினைக்கெல்லாம் சினம்கொள்கிறார்களோ, சாலையில் செல்லும்போது சைக்கிள் சங்கிலி கழன்றுவிட்டால்கூடக் கப்பலே கவிழ்ந்துவிட்டதுபோல் கன்னத்தில் கைவைத்துக் கவலைப் படுகிறார்களோ, பயம், பதற்றம், போட்டி, பொறாமை, இழப்பு, சோகம், இலக்கு, அழுத்தம் போன்ற உணர்ச்சிப் போராட்டங்கள் மனசுக்குள் வெடித்துத் தூக்கத்தைத் தொலைக்கிறார்களோ அவர்களைத்தான் மாரடைப்புக்கு ரொம்பப் ‘பிடிக்கும்’. ஆகவே, அவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வாழ்க்கைமுறை தவறுகள்: உளவியல் காரணங்கள் ஒருபுறம் இருக்க, நம் வாழ்க்கைமுறை தவறுகளும் மாரடைப்பைத் தீர்மானிக்கும் விஷமிகள் என்பதை மறந்துவிடக் கூடாது. இவற்றைக் குறித்து ஏற்கெனவே நாம் பார்த்திருக் கிறோம். முக்கியமாகச் சொல்வதென்றால், நாள்பட்ட புகைப்பழக்கம் மாரடைப் பைச் சீக்கிரமே வரவேற்று கூரியர் அனுப்பும். புகையிலையில் புதைந்திருக்கும் ‘நிகோடின்’ விஷம் நம் ரத்தக்குழாய்களை நசுக்கி, ‘பி.பி’யை உயர்த்திவிடும். கொழுப்பு என்னும் ‘பேரிகார்டு’களைக் கொண்டு வந்து இதயத்துக்குப் போகும் ‘ரத்தச்சாலை’களை அடைத்துவிடும். அப்போது மாரடைப்பு வந்துசேரும்.

“நான் சிகரெட் பிடிப்பதேயில்லை; ஆகையால், எனக்கு மாரடைப்பு ஏற்படச் சாத்தியமே இல்லை!” என்று புகைப்பழக்கம் இல்லாதவர்கள் மகிழ்ச்சி யடையவும் முடியாது. நீங்கள் புகைபிடிப்பவரின் அருகில் இருந்தால் போதும், புகை பிடிக்கும் அளவுக்கு ஆபத்து காத்திருக்கிறது என்பதுதான் புகைப்பதில் உள்ள கொடுமை. அளவில்லாமல் மது குடிப்பது மாரடைப்புக்கு அடுத்த விஷமி. அதேபோல் உடலுழைப்பும் உடற் பயிற்சியும் இல்லாத உடம்புக்கு மாரடைப்புக்கான அபாயம் காட்டுத்தீ போல் நெருங்குகிறது.

கொலஸ்ட்ரால் கொள்ளி: நீங்கள் ‘இதயம் போற்று’ தொடரின் வாசகராக இருந்தால், எப்போதா வது உங்கள் குடும்ப மருத்துவர், “உங்கள் ரத்தத்தில் ‘எல்.டி.எல்.’ கூடுதலாக இருக்கிறது. இனிமேல் கொழுப்பு உணவு வகையைக் குறைத்துக் கொள்வது நல்லது” என்று எச்சரித்திருந்தால், “ஆமாம், டாக்டர். ‘இதயம் போற்று’ தொடரில் இதை நான் அறிந்திருக்கிறேன்” என்று சொல்லியிருப்பீர்கள். இப்போது, புதிய வாசகர்களுக்காகக் கொழுப்பு குறித்துச் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்.

கொழுப்பில் கொலஸ்ட்ரால் ஒரு வகை. இது மாரடைப்பைக் கொழுந்துவிட்டு எரியச் செய்யும் கொள்ளி. கொள்ளியால் விளக்கையும் ஏற்றலாம்; வீட்டையும் கொளுத்தலாம். அதுமாதிரி கொலஸ்ட்ரால் கொள்ளியால் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு. கொலஸ்ட்ராலில் ஹெச்.டி.எல். (HDL), எல்.டி.எல். (LDL) என்று இரண்டு வகை. இவற்றில் ஹெச்.டி.எல். இதயத்தில் உள்ள கொழுப்பை அகற்றுகிறது.

இதை அதிகப்படுத்தினால் மாரடைப்புக்கான சாத்தியம் குறைகிறது. எனவே, இது நல்ல கொலஸ்ட்ரால். இதற்கு நேர் எதிர் எல்.டி.எல். இது அதிகமானால் இதயத்தமனிகளில் (Coronary arteries) அடைப்பை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது. அதனால் இது கெட்ட கொலஸ்ட்ரால். இது குறைவாக இருப் பதுதான் இதயத்துக்குப் பாதுகாப்பு.

உடல் கோளாறுகள்: மாரடைப்புக்கு முக்கியக் கூட்டாளி உடல் பருமன் என்றும் பார்த்திருக்கிறோம். இருக்கவேண்டிய எடையைவிட 20% அதிக எடை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் அதிகம். தவிர, சர்க்கரை நோயும் ரத்தக் கொதிப்பும் மாரடைப்புக்குப் ‘பால்ய’ நண்பர்கள்.

ரத்தத்தில் மிதக்கும் அளவுக்கு அதிக மான சர்க்கரை யானது ரத்தக் குழாய்களில் குழி தோண்டி கொலஸ்ட்ரால் படுத்துக் கொள்ள இடம் கொடுக்கிறது. உறங்கிக் கொண்டிருக்கும் கொலஸ்ட்ராலைத் தட்டி எழுப்பி, இதயத்துக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள தமனிக் குழாய்களை அடைத்துவிடுகிறது ரத்தக்கொதிப்பு. இதன் விளைவால் மாரடைப்பு ஏற்படுகிறது.

அடுத்து, வம்சாவளியில் வரும் நோய் வரிசையில் மாரடைப்பும் இருக்கிறது. ஆகையால், அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா இவர்களில் யாருக்காவது மாரடைப்பு வந்திருந்தால், அந்தக் குடும்பத்தின் வாரிசுகளுக்கும் மாரடைப்பு ஏற்படு வதற்கு அதிக சாத்தியமுண்டு. இவர்கள் பதின்பருவத்திலிருந்தே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இத்தனை காரணிகளையும் ஓரம்கட்டி விட்டு, கரோனா தடுப்பூசியால்தான் மாரடைப்பு வருகிறது என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்றால், உங்கள் நம்பிக்கைக்கு அறிவியல் ஆதாரம் இல்லை.

எது மாரடைப்பு? - உடல் முழுமைக்கும் ரத்தம் வழங்குகிற இதயம், தன் தசைகளுக்குத் தேவையான ரத்தத்தை மூன்று ரத்தக்குழாய்கள் மூலம் எடுத்துக்கொள்கிறது. அவற்றுக்கு இதயத் தமனிகள் (Coronary arteries) என்று பெயர். இவை இதயத்தைச் சுற்றி ஒரு மகுடம்போல் அமைந்துள்ளதால் இந்தப் பெயர். ‘சிம்’ சிறிதாக இருந்தாலும் ‘அரை லகர’ ஆண்ட்ராய்ட் போனுக்கு அதுதானே ஆதாரம். அதேபோல் இதயத் தமனிகள் பார்ப்பதற்கு ரொம்பப் பொடிசாகத் தெரிந்தாலும் அவைதான் நம் உயிருக்கு உத்தரவாதம்.

நாம் ஏற்கெனவே விரிவாகப் பார்த்த உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புகைபிடிப்பது போன்ற இதய ஆபத்துக் காரணிகளில் ஒன்றோ பலவோ சேர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாகத் தமனித் தடிப்பை (Atherosclerosis) உண்டாக்கும். ஒருகட்டத்தில் அது இதயத் தமனிகளை அடைத்துவிடும்.

இதனால், ஆக்ஸிஜன் உள்ளிட்ட உணவுச்சத்து கிடைக்காமல் இதயத்தசை அழிந்துபோகும். அப்போது தண்ணீரிலிருந்து தரைக்குத் தாவிய மீன்போல இதயம் துடிப்பதற்குச் சிரமப்படும். அதுதான் ‘இதயத்தசை அழிவு நோய்’ (Myocardial Infarction) என்னும் மாரடைப்பு.

(போற்றுவோம்)

- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; gganesan95@gmail.com

SCROLL FOR NEXT