நலம் வாழ

புகை நுரையீரலுக்குப் பெரும் பகை

டாக்டர் வி.பி.துரை

மனிதன் ஒரு நாளைக்குச் சுமார் 21,000 முறை சுவாசிக்கிறான்; சுவாசம் நம் உணர்வின்றித் தானாகவே நடை பெறுகிறது. சுவாச விகிதம் கூடும்போது மட்டுமே நாம் அதை உணர்கிறோம். உடலின் இயக்கம் அதிகரிக்கும்போது இயல்பாகவே சுவாச விகிதம் அதிகரிக்கும். அவ்வாறு இன்றிச் சுவாசம் அதிகரித்தால், அது உடலில் உள்ள நோயைக் குறிக்கும். ஒய்வில் இருக்கும்போது சுவாசம் அதிகரித்தல், சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல் என்பது மருத்துவக் காரணங்களால் ஏற்படுகிறது.

மூச்சுத் திணறல் மனிதனைப் பயமுறுத்தி இயல்பு வாழ்க்கையில் இருந்தே முடக்கி விடும். மூச்சுத் திணறலுக்குப் பல மருத்துவக் காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமாக இருப்பது உயிருக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய COPD (chronic obstructive pulmonary disease) என்று அழைக்கப்படும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 35 லட்சம் பேருக்கு மேல் இந்த நோயால் இறக்கின்றனர்.

ஏன் ஏற்படுகிறது? - ஆக்கமும் அழித்தலும் மனித உடலின் இயற்பண்பு. அழித்தலும் ஆக்கமும் சமநிலையில் இருந்தால்தான் உடல் இயல்பாக இயங்கும். உடலில் உள்ள புரதங்கள், திசுக்களை அழிக்கச் சில நொதிகள் தொடர்ந்து சுரந்துகொண்டிருக்கும். இந்த நொதிகளைக் கட்டுப்படுத்த எதிர் வேதி திரவங்களும் சுரந்து கொண்டிருக்கும்.

உடலுக்கு இது என்ன வேண்டாத வேலை... இரண்டையும் சுரக்காமல் விட்டுவிட்டால் போதுமே என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா? மேற்சொன்ன நொதிகளுக்கு அழித்தல் மட்டுமன்றி, உடலுக்கு நன்மை செய்ய வேண்டிய வேறு வேலைகளும் உண்டு. உதாரணமாக, நோய் எதிர்ப்பாற்றலில் அவை முக்கியப் பங்காற்றுகின்றன.

அவ்வாறு சுரக்கப்படும் நொதிகளில் நுரையீரலில் செயல்படும் முக்கியத் திரவம் எலாஸ்டேஸ் என்பது. இது நுரையீரல் சுருங்கி விரியக் காரணமாக இருக்கும் எலாஸ்டடின் என்கிற புரதம், திசுக்களை அழிக்க வல்லது. இது அதிகமாகச் சுரந்தால் நுரையீரல் திசுக்கள் அழிக்கப்பட்டு நுரையீரல் சுருங்கி விரியும் தன்மையை இழக்கும்.

ஏன் அதிகமாகச் சுரக்கிறது? - சிகரெட், பீடிப் புகையில் உள்ள நச்சுப் பொருள்கள் இந்த எலாஸ்டேஸை அதிகமாகச் சுரக்க வைத்து நுரையீரல் திசுக்களைச் சிதைக்க வைக்கின்றன. மற்ற வகைப் புகையும் இந்த நாச வேலையைச் செய்தாலும், சிகரெட் புகை அளவுக்கு இல்லை எனலாம். இதனால் நுரையீரல் தன் இயல்புத்தன்மையை இழந்து முழுவதும் சுருங்க முடியாமல் சற்று வீக்கமாகவே இருக்கும்.

அது மட்டுமல்லாது சிகரெட் புகையில் உள்ள கோடிக்கணக்கான ஃபிரீ ராடிகல்ஸ் (இயங்கும் அயனிகள்) நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளைச் சிதைப்பதோடு மூச்சுக் குழாய்களில் ஒருவித அழற்சியை ஏற்படுத்தி, பிறகு தழும்புகளை ஏற்படுத்தும். ரப்பர் டியூபைப்போல் இருக்க வேண்டிய மூச்சுக் குழாய் ஒரு பிளாஸ்டிக் டியூபைப் போல மாறிவிடும். சுருங்கிய மூச்சுக் குழாய், வீங்கிய நுரையீரல் என்கிற இரட்டைப் பழுது தூயக் காற்று உள்ளே செல்லவும் அசுத்தக் காற்று வெளியேறவும் இடைஞ்சலாக இருக்கும்.

இதனால், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்தும் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகமாகவும் இருக்கும். இதன் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்படும்; சிதைக்கப்பட்ட நுரையீரல், மூச்சுக் குழாய்கள் தொற்று நோய் ஏற்படுவதற்கு அடித்தளம் அமைக்கும். அவ்வாறு தொற்று ஏற்பட்டால் இருமலும் மூச்சுத் திணறலும் அதிகமாகும்; காய்ச்சல் வரும்.

மூச்சுக் குழாய்களில் உள்ள சுரப்பிகள் வீக்கமடைந்து சளியை அதிகமாகச் சுரக் கும். அதனால், நோயாளி எப்போதும் சளியைத் துப்பிக்கொண்டே இருப்பார். இது தவிர மார்பு இறுக்கம், எடை குறைதல் போன்ற அறிகுறி களும் இருக்கும். இந்நோயைக் கண்டறிய ஸ்பைரோமெட்ரி என்கிற பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இந்த நோயை, அதன் தீவிரத்தை வைத்து நான்கு படிநிலைகளாக வகைப்படுத்தியுள்ளனர்.

சிகிச்சை முறைகள்: நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமான அசௌகரியங்களுக்கு ஆட்படுவர். மூச்சுக் குழாயை விரிவடையச் செய்யும் இன்ஹேலர் மருந்துகள், சளி அதிகம் சுரப்பதைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் ஆகியவை நோயின் தாக்கத்தைக் குறைக்கும். எனினும் முற்றிலுமாகக் குணமாக்காது. நோய் அறிகுறிகளை மட்டுப்படுத்துவதும், நோயின் தாக்கம் அதிகரிக்காமல் தடுப்பதுமே சிகிச்சையின் நோக்கமாக இருக்கும்.

புகைப்பழக்கம் வேண்டாம்: நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயிலிருந்து தப்பிக்கச் சிறந்த வழி தடுப்பு முறை மட்டுமே. புகைப்பழக்கம் உள்ளவர்கள் உடனே அதை நிறுத்தியாக வேண்டும். பழக்கம் இல்லாதவர்கள் எக்காரணம் கொண்டும் அதைத் தொடங்கிவிடக் கூடாது. புகைப்பழக்கம் உங்களையும் பாதித்து, உங்கள் குடும்பத்தினரையும் பாதிக்கும். சிகரெட்டின் நுனியில் உள்ள நெருப்பு கருக்குவது சிகரெட்டை மட்டுமல்ல, உங்கள் நுரையீரலையும்தான் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். உதட்டில் தவழும் புகையிலைச் சுருள் நுரையீரலுக்குள் சென்று இரங்கற்பா எழுதும் முன் அதைத் தூக்கி எறியுங்கள்.

- கட்டுரையாளர், நெஞ்சக நோய்கள் நிபுணர்; drpdorai@gmail.com

SCROLL FOR NEXT