நலம் வாழ

மீண்டும் கரோனா: அச்சம் தேவையில்லை

டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா

தலைப்புச் செய்திகளில் மீண்டும் கரோனா இடம் பெற்றிருப்பது மக்களிடம் பீதியையும் பதற்றத் தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கரோனாவின் முதல், இரண்டாம் அலைகள் ஏற்படுத்திய உயிரிழப்புகளும் பொருளாதார இழப்புகளும்தான் இவற்றுக்கு முக்கியக் காரணங்கள்.

கரோனா வைரஸைப் பொறுத்த வரை அதன் முதல் அலையை 2020ஆம் ஆண்டின் மத்தியிலும் உக்கிரமான இரண்டாம் அலையை 2021ஆம் ஆண்டின் ஏப்ரல் - மே மாதங்களிலும் சந்தித்தோம். கரோனா வைரஸ் தன்னகத்தே சில, பல உரு மாற்றங்களை அடைந்து ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, ஓமைக்ரான் என்று பெயர் சூட்டப்பட்ட திரிபுகளாக ஆறு முதல் பத்து மாதங்களுக்கு ஒருமுறை தனக்கான சாதகமான சூழல் அமையும்போது மீண்டும் பரவத் தொடங்குகிறது.

இந்த ஆண்டும் அது போலவே: சீனா, இந்தியா, சிங்கப்பூர், தாய் லாந்து உள்ளிட்ட நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கரோனா வைரஸ் பரவல் இயற்கையான ஒன்றே; இந்தப் பரவலை நம்மால் எந்த நடவடிக்கைகள் கொண்டும் தடுத்திட முடியாது. இருப்பினும் தற்போதைய நிலை குறித்து நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளாக கரோனா வைரஸுடன் இணைந்து வாழப் பழகிவிட்டோம்.

உருமாற்றத் திரிபு: தற்போது உலகம் முழுவதும் கண் டறியப்படும் மாதிரிகளில் என்பி.1.8.1 (NB.1.8.1) என்கிற உருமாற்றத் திரிபு வகை 10.7% என்கிற அளவில் முதல் இடத்தில் உள்ளது. இதன் ஆதி மூதாதை யாரென்று பார்த்தால் ஜேஎன்.1 (JN.1) என்கிற திரிபு; அதன் மூதாதை, ஓமைக்ரான் திரிபாகும். நமது நோயெதிர்ப்புச் சக்திக்குப் புதிய சவாலைத் தரக்கூடிய திரிபு களாகத் தற்போது பரவிவரும் திரிபுகள் இல்லை என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தி.

கரோனா வைரஸின் உருமாற்றத் தைச் சர்வதேச அளவில் ஆராய்ச்சி செய்துவரும் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கமான TAG-VE (Technical Advisory Group Of Virus Evolution) ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது உலகின் முதன்மைத் திரிபுகளாகப் பரவிவரும் LP.8.1 மற்றும் NB.1.8.1 ஆகியவற்றை ஆராய்ச்சி செய்த வரை, இவற்றால் பொதுச் சுகாதார நிலைக்கு எந்தக் குந்தகமோ கேடோ அச்சுறுத்தலோ விளையும் வாய்ப்பு மிகக் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தி பெரும்பான்மையினருக்கு இருக்கிறது. ஓமைக்ரான், அதன் உருமாற்ற திரிபுகள் 2022இல் தொடங்கி இந்தியாவில் இடைவெளி விட்டுப் பரவி நமக்கு எதிர்ப்புச் சக்தியை வழங்கிவந்துள்ளன. இருப்பினும் இந்தியாவில் தொற்று அடைந்த வர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துவருவதன் காரணம், விடுமுறை காலத்தில் மக்கள் கூட்டமாகக் கூடியதாக இருக்கலாம்.

பாதிப்பற்ற அலை: உலகின் பல நாடுகளில் இருந்தும் கிடைக்கும் தரவுகளின்படி தற்போது பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு விகிதம் 11% ஆக உள்ளது. 2023க்குப் பிறகு வருடா வருடம், இதே போன்று ஆண்டின் மத்தியில் கரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்து, தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பதே தரவுகள் நமக்கு அளிக்கும் செய்தி. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் கடந்த ஜூலை 2024இல் உலகில் கரோனா எந்த நிலையில் இருந்ததோ அதேநிலையில்தான் இந்த ஆண்டும் உள்ளது.

எனவே, திடீரென இந்த ஆண்டு அதிகமாக கரோனா பரவிக்கொண்டிருக்கிறது என்று அச்சப்படத் தேவையில்லை. 2023க்குப் பிறகு இதே போன்ற நிலைதான் உலகம் முழுவதும் நீடித்துவருகிறது. எங்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அலை ஏற்பட்டதாகப் பதிவுகள் இல்லை. மேலும் 2020 முதல் 2023 வரை கரோனா ஏற்படுத்திய பாதிப்புகளை
2023க்குப் பிறகு அதனால் ஏற்படுத்த முடியவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தனது அறிக்கையில் பதிவு செய்துள்ளது.

அச்சம் தேவையில்லை: ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள், அவசர சிகிச்சைப் பிரிவில் அனு மதிக்கப்படுவோர், இறப்பவர்கள், தொற்றாளர்கள் உள்ளிட்டவர்களின் எண்ணிக்கை நாம் அச்சம் கொள்ளும் அளவில் உயரவில்லை. ‘இப்போது கரோனா மரணங்கள் என்று செய்திகள் வருகின்றனவே, அதற்கு நாம் அச்சப்பட வேண்டுமா?’ என்றால் உங்களுக்கு ஓர் உண்மையைக் கூறுகிறேன்: நாள் ஒன்றுக்குக் காசநோய்க்கு (Tuberculosis) நம் நாட்டில் 900 பேர் மரணிக்கின்றனர்; நாள் ஒன்றுக்கு 300க்கும் அதிகமானோர் வயிற்றுப்போக்கு நோயினால் மட்டுமே மரணிக்கின்றனர்.

இதை நான் கூறக் காரணம் தொற்றுநோய் என்றால் அதற்கெனக் கட்டாயம் மரண விகிதங்கள் இருந்தே தீரும். ஆனால், அது பொதுச் சுகாதாரத்தை அச்சுறுத்தும் வகையில் இல்லாத வரை நாம் அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. எனவே கரோனா பரவலைக் கண்டு மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.

முன்னெச்சரிக்கைகள் அவசியம்: சுவாசப் பாதைத் தொற்று பரவும் போது அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், கைகளை சோப்பு போட்டுக் கழுவுதல், தும்மும்போதும் இருமும் போதும் கைக்குட்டை வைத்துக் கொள்ளுதல், முதியோர், எதிர்ப்புச்சக்தி குன்றியோர் ஆகியோர் கட்டாயம் முகக்கவசம் அணிதல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை வழக்கம் போலக் கடைப் பிடிக்க வேண்டும்.

முதியோர், எதிர்ப்புச் சக்தி குன்றியோர், சிறுநீரக நோய், கல்லீரல் நோய், இதய நோய், நுரையீரல் நோய் உள்ளிட்ட பல இணைநோய்கள் கொண்டவர்கள், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், எதிர்ப்புச் சக்தி குன்றச் செய்யும் மருந்துகளை உட்கொள்பவர்கள் போன்றோர் தொற்றுப் பரவும் இவ்வேளையில் கூட்ட நெரிசலான இடங்களைத் தவிர்க்கலாம். பொது இடங்களில் முகக்கவசம் அணியலாம்.

தடுப்பூசிகளே கவசம்: மேற்கத்திய நாடுகளில் புளூ வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை வருடா வருடம் செலுத்திக்கொள்வது வழக்கத்தில் இருக்கும் ஒன்று. அது போல, இங்கும் முதியோர்கள், இணை நோய் இருப்பவர்கள் பருவகால வைரஸ் தொற்றுகள் தீவிர மாக ஏற்படாதவண்ணம், புளூ வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். கரோனா வைரஸ் தடுப்பூசிகளை 2021-2022 ஆண்டுகளில் பெற்றவர்களுக்கு தற்போது வரை புதிய திரிபுகளால் ஏற்படும் தீவிரத் தொற்றுநிலையில் இருந்தும் பாதுகாப்பு கிடைக் கிறது என்று ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன. அதனால், கோவிட் தொற்றின் தற்போதைய நிலையைப் பொறுத்தவரை நாம் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டுமே அன்றி பீதி அடையத் தேவையில்லை.

அறிகுறிகள்: தற்போது பரவும் கரோனா திரிபுத் தொற் றுக்கான அறிகுறிகள் பெரும்பாலும் இளவயதினரிடையே தொற்று கண்டறியப் பட்டு வருகிறது. இதில் பலருக்கும் சாதாரண சளி, காய்ச்சல் என்கிற அளவில் தொற்று குணமடைந்து வருகிறது. சுவாசப் பாதை வைரஸ் தொற்றுகள் பொதுவாகவே ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள சிறுவர் - சிறுமியர், பல்வேறு இணை நோய் கொண்டோர், எதிர்ப்புச் சக்தி குன்றியோர், முதியோர்களுக்குச் சற்று தீவிரமாக ஏற்படும்.

எனவே, மேற்கூறிய அறிகுறிகள் இருப்பின் இவர்கள் அனைவருமே எச்சரிக்கையுடன் முறையான மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மூன்று நாள்களுக்கு மேல் தீவிரமான காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, நெஞ்சுப் பகுதியில் அழுத்தம், நின்றால் -நடந்தால் தலைசுற்றல் போன்றவை நிமோனியாவின் அறிகுறிகளாக இருக்கலாம். இதற்கு உடனடியான மருத்துவ சிகிச்சை அவசியம்.

- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; drfarookab@gmail.com

SCROLL FOR NEXT