உடலுக்குத் தோல் முக்கியமான பாதுகாப்புக் கவசமாகும். கோடை வெயிலால் வெப்பச் சூடு, வியர்வை, சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றால் தோலில் எரிச்சல், ஊரல், அரிப்பு போன்றவை ஏற்படும். தோலில் ஏற்படும் நெருடலைச் சமாளிக்க நகத்தால் சொறிந்துவிடுவோம்.
சிலருக்கு இதனால் ரத்தமும் வருவதுண்டு. கோடையில் தோலின் மேல் பரப்பில் நுண்ணுயிர்க் கிருமியான ‘ஸ்டெஃபைலோ காக்கஸ் ஆரியஸ்’ (staphylococcus aureus) என்கிற பாக்டீரியா அதிக எண்ணிக்கையில் காணப்படும். இக்கிருமி நகங்கள் ஏற்படுத்திய சிராய்ப்பு வழியாகத் தோலில் நுழைந்து, தோல் மயிர்க்கால்களில் தொற்றை ஏற்படுத்தும். இத்தொற்று சீழ்க்கட்டியாகத் தோலில் வீக்கத்துடன் வலியை ஏற்படுத்தும். சிலருக்குக் கொப்பளங்களும் ஏற்படும்.
கொதிப்புக் கொப்பளம்: இந்தக் கொதிப்புக் கொப்பளம் சீழ் நிறைந்து வலியை உண்டாக்கி ஓரிரு நாளில் உடைந்து சீழ் வெளியேறும். கொதிப்புக் கொப்பளம் சிலநேரம் பெரிய சீழ்க்கட்டியாக வளர்ந்து தோலில் திசுக்களை அழித்து, நாள்பட்ட புண்ணாக மாறி குணமாகப் பல வாரங்கள் எடுத்துக்கொள்ளும். உடனடி மருத்துவக் கண்காணிப்பு அளிக்கும்பட்சத்தில் சீழ்க்கட்டியாக உருமாறுவதைத் தடுக்கலாம். தோலில் முடி அதிகம் உள்ள பகுதிகளில் இவ்வகை பாக்டீரியாக்கள் கோடையில் அதிகமாகத் தோன்றி சீழ்த் தொற்றுக் கட்டியை ஏற்படுத்தும். அக்குள், மார்பு, முதுகு, மலவாய், தொடை, தொப்புள் போன்ற பகுதிகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும்.
ராஜபிளவு (Carbuncle) - தோலில் ஒற்றை மயிர்க்கால் பகுதியில் தொற்று ஏற்பட்டுக் கொதிப்புக் கொப்பளம் தோன்றும். குறைந்தது ஐந்து தோல் மயிர்க்கால்களில் ஒரே நேரத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு, ராஜபிளவு என்கிற சீழ்க்கட்டி உருவாகும். இந்தக் கட்டி சிவப்பு நிறத்தில் மிகுந்த வலியோடு, சூடாக, அரிப்புடன் காணப்படும். உடனடியாக மருத்துவ உதவியை நாடவில்லை என்றால், இந்தக் கட்டி தோலின் ஆழத்தையும் தாண்டி, குறுக்குவாட்டில் அதிகப் பரப்பளவிலும் ஏற்படும். ஆரம்ப நிலையில் இதைக் கண்டறிந்துவிட்டால் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்திக் குணப்படுத்திவிடலாம்.
கண்கட்டி (Stye) - கோடையின் தாக்கத்தால் பாக்டீரியாக்கள் வியர்வை வழியாகக் கண் இமைகளின் ஓரத்தில் உள்ள கண்முடி துவாரத்தில் நுழைந்து கண் இமையில் மிளகு அளவுக்குச் சிவந்த வீக்கக் கட்டியைத் தோன்றவைத்து வலியைக் கொடுக்கும். பொதுவாக மேல், கீழ் கண் இமைகளில் கண்கட்டித் தொற்று ஏற்படும். கண் இமையின் உள்புறம் சிவந்து வலி அதிகரிக்கும்.
ஸ்டெஃபைலோ பாக்டீரியா கண் இமைகளின் உள்புறம், கண்முடியின் ஆழத்தில் உள்ள சுரப்பிகளிலும் தொற்றை ஏற்படுத்தி கண் இமையை மேலும் வீக்கமடைய வைத்து வலியைக் கொடுக்கும். நோய் எதிர்ப்புத் திறன் இருக்கும்பட்சத்தில் கண்கட்டி எளிதில் குணமாகும். ஆன்டிபயாட்டிக்குகளை மருத்துவரின் பரிந்துரையின்படி எடுத்துக்கொண்டால் கண் இமையில் சீழ் பிடித்து, அதனால் ஏற்படும் பின்விளைவைத் தடுக்கலாம். ஆரம்பத்தில் சூடு ஒத்தடம் கொடுப்பது இந்தக் கட்டிகளைப் போக்க உதவும்.
நகச்சுற்று சீழ்க்கட்டி (Paronychia) - நகம் வெட்டும் போது, பூண்டு உரிக்கும் போது, பாத்திரம் கழுவும் போது நகத்துக்கும் நகத்தை ஒட்டிய விரல் திசுக்களுக்கும் இடையில் நுண்ணிய சிராய்ப்பு ஏற்படும். இயல்பாகவே நக விரல் சந்துகள்தான் ஸ்டெஃபைலோ காக்கஸ் பாக்டீரியாவின் இருப்பிடமாகும்.
கிழிபட்ட திசுக்களின் வழியே கிருமி நுழைந்து, தொற்றை ஏற்படுத்தும். ஓரிரு நாள்களில் நகத்தை ஒட்டிக் கிழிபட்ட திசுக்களின் அருகில் விரல் சிவந்து, வீக்கத்தை ஏற்படுத்தி, நகத்தைச் சுற்றிச் சீழ்பிடித்துத் துடிக்கும் அளவுக்கு வலியைத் தரும். இதை அலட்சியமாக விட்டுவிட்டால் விரல் நுனி சீழ்பிடித்து விரல் ஊனத்தை ஏற்படுத்திவிடும் ஆபத்தும் உண்டு.
திறன் வாய்ந்த ஆன்டிபயாடிக் துணையால் இதைக் குணப்படுத்தலாம். இல்லையேல் அறுவை சிகிச்சையின் மூலம் சீழ்த் தொற்று அகற்றப்படவேண்டிய கட்டாயம் ஏற்படும்.
நாசித்துவார முடிக் கொப்பளம்: நாசித்துவாரத்தின் முனை தோல் திசுக்களால் ஆனது. இந்தத் துவாரத்தில் முடிகள் நிரம்பி இருக்கும். இந்த முடிகள் காற்றில் உள்ள திட மாசுவை வடிகட்டி, தூயக் காற்றை நுரையீரலுக்கு அனுப்பும். நாசி முடி வேர்களில் ஸ்டெஃபைலோ காக்கஸ் பாக்டீரியாக்கள் இருப்ப தால் கோடையில் இங்கும் கொதிப்புக் கொப்பளங்கள் தோன்றும். மூக்கில் உள்ள முடியைக் கவனக்குறைவாகப் பிடித்து இழுப்பது, மூக்கை விரல்களால் தொல்லை செய்வது போன்ற காரணங்களால் கொதிப்புக் கொப்பளம் ஏற்பட்டு, மூக்கின் முனை சிவந்து தக்காளிப் பழம்போல் தோன்றும். இதைத் தொடர்ந்து காய்ச்சல், வீக்கம், வலி தோன்றும்.
காது துவாரக் கொப்பளம்: கொதிப்புக் கொப்பளத் தொற்றுகள் காதின் உள்வாட்டில் மறைந்து இருக்கும். பாதிப்புக்கு உள்ளானவரால் வலியை மட்டுமே உணரமுடியும். காதின் மடலை, காதின் துவாரத்திற்கு எதிர் திசையில் இழுத்தால் வலி அதிகரிக்கும். காதின் துவாரத்தில் தோல்முடி இருப்பதால் கொதிப்புக் கொப்பளம் ஏற்பட்டுச் சீழ் பிடித்து வலியைத் தரும்.
பாதவிரல் இடுக்குப் புண் - பாத உறை அணிந்து காலணி பயன்படுத்துபவர்களுக்கு அதிக வெப்பம், வியர்வை ஈரப்பதம் ஆகிய வற்றின் காரணமாகப் பாத விரல்கள் இடுக்கில் பூஞ்சைத் தொற்று ஏற்படும். பாதத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாதபட்சத்தில் பாத விரல் இடுக்கில் பூஞ்சை வளர்ந்து வெள்ளை நிறத்தில் தோலில் புண், ஈரப்பதத்துடன் காணப்படும். இந்தப் புண் வழியாக ஸ்டெஃபைலோ காக்கஸ் பாக்டீரியா நுழைந்து முதியவர்களையும் நீரிழிவு நோயாளியையும் பெரும் துன்பத்தில் ஆழ்த்தும்.
செல்லுலைட்டீஸ் (Cellulitis) - பாக்டீரியா நோய் எதிர்ப்புத் திறன் குன்றியவர்களுக்கு மேற்கூறப்பட்ட தொற்றுகளால் தோலின் அனைத்துத் திசைகளிலும் பக்கவாட்டாகவும் அடி ஆழத்திலும் கிருமி வேகமாகப் பரவி, தோலின் திசுக்களில் சிவப்பு நிறத்தில் பரவி, தோலில் திசு இழப்பை ஏற்படுத்தும்.
மலவாய்த் தோல்பகுதி சீழ்க்கட்டி: மலவாயில் முடிகள் நிறைந்து காணப் படுவதாலும் அதிக சூடான, ஈரப்பதமும் நிறைந்து இருப்பதாலும் தொடையில் உராய்வு ஏற்பட்டுச் சிராய்ப்பு வழியாக பாக்டீரியா எளிதில் பரவும். இதன் காரணமாகக் கொதிப்புக் கொப்பளம் ஏற்படும். தனிமனித சுகாதாரம் குறையும்பட்சத்தில் பாதிப்பு கோடையில் அதிகமாக இருக்கும்.
யாருக்கு ஏற்படும்? - முதியவர்கள், நீரிழிவு நோய், எச்.ஐ.வி. (HIV), ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்பவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள், அதிக பருமன் கொண்டவர்கள், கர்ப்பிணிகள், களப்பணியாளர்கள், அதிகம் பயணிக்கும் வியாபாரிகள், தனிமனித சுகாதாரக் குறைபாடுள்ளவர்கள் போன்றோரை மேற்கூறிய பாக்டீரியா எளிதில் தாக்கி, தோலில் சீழ்க்கட்டியை ஏற்படுத்தும்.
தடுப்பு நடவடிக்கை: கோடையில் காலை, மாலை இரண்டு வேளையும் தோல் சுத்தம் காக்கக் குளியல் அவசியம். நகங்கள், விரல்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவைப்படும் போதெல்லாம் கையைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். நகங்களைச் சீராக வெட்டி, சுத்தம் பேண வேண்டும். நகம் வெட்டும்போது விரல் திசுக்கள் காயப்படாமல் நகவெட்டியால் அதைச் செய்து முடிக்க வேண்டும். குறிப்பாக, கால் நகம் வெட்டும்போது நீரிழிவு நோயாளிகள் கவனத்துடன் இருக்க வேண்டும்.
கால் விரல் சந்துகளில் ஈரப்பதம் இல்லாமல் பருத்தித் துணியால் துடைத்துப் பராமரிக்க வேண்டும். கோடையில் மெல்லிய பருத்தி ஆடைகளை அணிந்து, தோல் நலன் காக்க வேண்டும். காது, மூக்குத் துவாரங்களை விரல் களால் சுத்தம் செய்யும்போது தேவையின்றி காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். அக்குள், மலவாய் பகுதிகளில் தேவையற்ற முடியை அகற்ற வேண்டும்.
முகத்திற்குக் கொடுக்கும் கவனத்தைக் கால்களுக்கும் உடல் தோலுக்கும் கொடுத்துக் கண்காணித்து, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நகச்சுற்று, சீழ்க்கட்டி உள்ளவர்கள் சமைக்கவோ உணவு பரிமாறவோ கூடாது. ஸ்டெஃபைலோ காக்கஸ் ஆரியஸ் பாக்டீரியாவின் நச்சு, உணவு வழிப் பயனாளிகளைத் தாக்கி வாந்தி, பேதியைப் பரப்பும். எனவே, கோடையில் தோலுக்குத் தனிக் கவனம் செலுத்தி, சுகாதாரம் காக்க வேண்டும்.
- கட்டுரையாளர், முதியோர் நல மருத்துவர்; dr.e.subbarayan53@gmail.com