‘இதயம் போற்று’ தொடரில் இதுவரை இதயத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிற உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், சர்க்கரை நோய், அதீத கொலஸ் டிரால் எனப் பல காரணிகளைத் தனித்தனியாகவும் விரிவாகவும் பார்த்தோம். ஏன் பார்த்தோம்?
இந்தக் காரணிகளைச் சரியாக நாம் எதிர்கொண்டால், இதயத்துக்கு ஆபத்து குறைந்துவிடும் என்பதைப் புரிந்துகொள்ளத்தான். ஆனால், இன்றைய துரித வாழ்வில் மாற்றக்கூடிய இந்த ஆபத்துக் காரணி களைக் (Modifiable risk factors) கட்டுக்குள் வைத்துக்கொள்ளப் பலரும் தவறி விடுகிறோம்.
பின்னர், இதயத்துக்கு ஆபத்து என்னும்போது பதறுகிறோம். அப்போதுகூட நாம் செய்த தவறை உணர மறந்து விடுகிறோம் அல்லது மறைத்துவிடுகிறோம். அடுத்ததிலோ, அடுத்தவர் மீதோதான் அதற்கான பழியைச் சுமத்துகிறோம். வலைதள வதந்திகளை நம்பிக்கொண்டு, கரோனா தடுப்பூசி போட்ட தால்தான் இதயத்துக்குப் பாதிப்பு வந்தது என்கிறோம். போலி அறிவியலை நம்பிக் கொண்டு, மருத்துவர்கள் தேவையில்லாமல் செலவு செய்ய வைக்கிறார்கள் என்று நவீன மருத்துவத்தைச் சந்தேகப்படுகிறோம்.
இம்மாதிரியான செயல்களால் அல்லும் பகலும் உழைப்பைத் தரும் ஆராய்ச்சியாளர்களையும், உயிர் காக்கும் மருத்துவர் களையும் அவமதிக்கிறோம். களவு போன வீட்டில் முன்கதவைப் பூட்டா மல் விட்டது நம் தவறு என்பதைப் புரிந்துகொள்ளாமல், தெருவின் மீது
குற்றம்சாட்டினால் எப்படி? யோசித்துப் பாருங்கள். நெருப்பையும் சக்கரத்தையும் மனிதன் கண்டறிந்திருக்கா விட்டால் இன்றைய திறன்பேசி கைகூடியிருக்குமா? விண்வெளியில் தங்கிய சுனிதா வில்லியம்ஸ், தரை இறங்கியிருக்க முடியுமா? மானுட வளர்ச்சி என்பது அறிவியல் வளர்ச்சியைச் சார்ந்தது. நவீன அறிவியல் முன்னேற்றம் மக்களுக்கானது. கரோனா தடுப்பூசியைக் கண்டறிந்ததும், அதைத் தொடர்ந்து கரோனா பெருந்தொற்று காலியானதும் சமீபத்திய உதாரணங்கள்.
இவற்றின் மீது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் பலவும் நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் மானுட உயிர்களைக் காப்பதிலும் வெற்றி பெற்றுள்ளன. நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் எந்தெந்த இதய நோய்களை எந்த மாதிரியெல் லாம் துவம்சம் செய்து நம்மைக் காப்பாற்று கின்றன என்பதை அடுத் தடுத்துப் பார்க்கப் போகி றோம். இந்த வரிசையில் முதலில் வருகிறது, இதயத்தின் குரலோசை! ‘என்ன, இதயத்துக்குக் குரல் உண்டா?’ என்று திகைக்க வேண்டாம். இதயம் படபடப்பாகத் துடிப்பதைத்தான் அப்படிச் சொல்கிறேன்.
படபடப்பு எப்படி இருக்கும்? - இதயம் இயல்புநிலை மாறி வேகமாகத் துடிப்பதைப் ‘படபடப்பு’ (Palpitation) என்கிறோம். நம் இதயத் துடிப்பை நாமே உணரும் அசாதாரண நிலை இது. உடலுக்குள் இருக்கும் எந்த வொரு பாகத்தையும் ஒருவர் உணராமல் இருப்பதே ஆரோக்கியம். அப்படி உணர்வதாக இருந்தால், ஏதோ பிரச்சினை இருக்கிறது என்றே அர்த்தம்.
எனக்கு அடிக்கடி படபடப்பாக இருக்கிறது, டாக்டர், திடீர் திடீரென்று கால் மணி நேரத்துக்கு இதயம் எக்குத்தப்பாகத் துடிக்கிறது. அப்போது இதயம் வெளியில் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது, படபடப்பு நின்ற பிறகு ரொம்ப தூரம் ஓடிக் களைத்த மாதிரி இருக்கிறது. சில நேரம் மயக்கம் வந்துவிடுகிறது! - படபடப்பு நோயாளிகளின் பொது வான பிரச்சினைகள் இவை.
இரண்டு வகை படபடப்பு: படபடப்பில் இயல் பானது (Physiological), ஆபத்தானது (Pathological) என இருவகை உண்டு. பெரும்பாலும் கவலை, பயம், பதற்றம், மன அழுத்தம் போன்றவற்றால் உடலில் ஏற்படுகிற ஒரு மெல்லிய நடுக்கத்தைப் படபடப்பு என்று சொல்ப வர்கள் உண்டு. இவர்களைச் சற்றே ஆசுவாசப்படுத்தி, குடிப்பதற்கு ஏதேனும் கொடுத்தால் சிறிது நேரத்தில் தெளிவடைந்து விடுவார்கள். இதை ‘மன அழுத்தம் சார்ந்த படபடப்பு’ எனச் சொல்லலாம். நம்மில் பலரும் அவ்வப்போது இந்தப் படபடப்பை அனுபவித் திருப்போம். இது இயல்பானது.
சிலருக்குச் சாதாரணமாக நின்றுகொண்டிருந்தாலும் படபடப்பு வரும்; உட்கார்ந்திருந்தாலும் படபடப்பு வரும். இவர்களுக்கு, நிமிடத்துக்கு 60 - 100 முறை துடிக்க வேண்டிய இதயம், சட்டென்று 150 - 200 முறை துடிக்கத் தொடங்கும். அப்போது, படபடப்பு வருவதோடு தலைசுற்றலும் மயக்கமும் வரலாம். சிலருக்குச் சுயநினைவு இல்லாமல் போகலாம். அரிதாகச் சிலருக்கு உயிருக்கு ஆபத்தையும் இது கொண்டுவரலாம்.
இதனால், இவர்கள்தான் உடனே கவனிக்கப்பட வேண்டியவர்கள். ‘இதயப் படபடப்பு’ (Arrhythmia) நோயாளிகள் இவர்கள். இவர்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? இதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், இதயம் எப்படித் துடிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இதயம் துடிக்கும் விதம்: நமக்குச் சராசரியாக நிமிடத்துக்கு 72 முறை இதயம் துடிக்கிறது. இந்தத் துடிப்புக்கான கட்டளை ஒரு மின்விசையாக வலது இதயத்தின் மேலறை (Right atrium) உச்சியில் இருக்கிற ‘எஸ்.ஏ.நோடு’ (Sinoatrial node) என்கிற சந்திப்பில் பிறக்கிறது. இந்தக் கட்டளை, வலது இதயத்தின் மேலறைக்குக் கீழ்ப்புறம் இருக்கிற ‘ஏ.வி.நோடு’ (Atrioventricular node) என்னும் இரண்டாவது சந்திப்பின் வழியாக ‘ஹிஸ் நார்க்கற்றை’களை (Bundle of His) அடைகிறது. பிறகு, இது கீழ்நோக்கி வலது, இடது கிளைகளாகப் பிரிந்து முறையே வலது கீழறைக்கும் (Right ventricle) இடது கீழறைக்கும் (Left ventricle) சென்று, அங்குள்ள ‘பர்க்கிஞ்சி நார்கள்’ (Purkinje fibres) வழியாக இதயத் தசைகளுக்குள் பயணிக்கிறது.
இப்படிப் பகிர்ந்துகொள்ளப்படும் மின்விசைக் கட்டளையால்தான் இதயம் சுருங்குகிறது. அப்போது ரத்தம் உடலுக்குள் பாய்கிறது. அந்தக் கட்டளை ஓய்ந்தவுடன் இதயம் தானாக விரிகிறது. அப்போது உடலின் பிற இடங்களில் இருந்து ரத்தம் இதயத்துக்கு வருகிறது. பின்னர், அடுத்த கட்டளை வரும்போது மறுபடியும் இதயம் சுருங்குகிறது. இப்படியான மின்விசைச் சுழற்சியால்தான் இதயத் துடிப்பு சாத்தியமாகிறது.
என்ன பிரச்சினை? - இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். இதயத்தில் ‘எஸ்.ஏ.நோடு’ தானே கட்ட ளையைப் பிறப்பிக்கிறது. அது நேரடியாகவே இதயத் தசைகளுக்குக் கட்டளையைக் கடத்தலாம் தானே! ‘ஏ.வி.நோடு’ தனியாகத் தேவையா? சந்தேகம் சரிதான். ஏ.வி.நோடு சந்திப்புக்கு ஓர் அர்த்தம் இருக்கிறது. ஓர் அரசியல் தலைவர் வீட்டுக்குத் தினமும் ஆயிரம் பேர்கூட வருவார்கள். எல்லாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க முடியாது.
அது மாதிரிதான், எஸ்.ஏ.நோடில் பிறக்கும் கட்டளையை இதயத் தசைகளுக்குக் கடத்துவதுதான் ஏ.வி. நோடின் வேலை என்றாலும், அதை அப்படியே கண்ணை மூடிக் கொண்டு செய்யக் கூடாது என்பது அதற்கு இடப்பட்ட உத்தரவு. தலைவர் வீட்டுக்கு வருபவர்களைப் பாதுகாவலர் விசாரித்து அனுப்புகிற மாதிரி, எஸ்.ஏ.நோடிலிருந்து வரும் கட்டளைகளை வடிகட்டித்தான் ஏ.வி.நோடு அனுப்ப வேண்டும். என்ன காரணம்?
வழக்கத்துக்கு மாறாக, எஸ்.ஏ.நோடிலிருந்து அளவுக்கு மீறிய கட்டளைகள் வருவதாக வைத்துக் கொள்வோம். அவற்றை அப்படியே இதயத் தசைகளுக்கு ஏ.வி.நோடு அனுப்பினால் என்ன ஆகும்? துடிப்பு 200 வரைகூட எகிறிவிடலாம். அப்போது, உடலுக்குள் ரத்தச் சுழற்சி அவசர அவசரமாக நிகழும். முழுமை அடையாது. வழக்கமான நேரத்தில் மூன்றில் ஒரு பங்கு நேரத்துக்குள்ளேயே ரத்தத்தை உள் வாங்கி வெளியே அனுப்ப வேண்டிய கட்டாயத்துக்கு இதயம் தள்ளப்படும்.
ரயில் பத்து நிமிடம் நிற்பதாக இருந்தால், பிளாட்பாரத்தில் இறங்கி காபி சாப்பிட முடியும். இரண்டு நிமிடம்தான் நிற்கிறது என்றால் அது முடியாதல்லவா? அதுமாதிரிதான், அதிவேகமாகத் துடிக்கிற இதயத்தால் உடலுக்குத் தேவையான ரத்தத்தைச் செலுத்த முடியாது. அப்போது மயக்கம் வரும். இந்த நிலைமையைத் தடுக்கவே ஏ.வி.நோடு இருக்கிறது.
எக்ஸ்பிரஸ் வேகம்! - இதயப் படபடப்பு நோயாளிகளுக்கு ஏ.வி.நோடு பாதிப்படைவதுதான் வினையாகிவிடுகிறது. இதயத்தில் மின்விசைப் பயணம் எஸ்.ஏ.நோடு – ஏ.வி.நோடு – ஹிஸ் நார்க்கற்றைகள் – பர்க்கிஞ்சி நார்கள் – இதயத் தசைகள் என்னும் வழியில்தான் நடக்க வேண்டும். ஏ.வி.நோடு பழுதாவதால், மின்விசைக் கட்டளைகள் எஸ்.ஏ.நோடிலிருந்து நேரடியாக ஹிஸ் நார்க்கற்றைகளுக்குச் சென்றுவிடும்.
ஹிஸ் நார்க்கற்றைகள் அவற்றை வடிகட்டாமல் இதயத் தசைகளுக்கு அனுப்பிவிடுகின்றன. பாசஞ்சர் ரயில் வேகத்தில் செல்ல வேண்டிய கட்டளைகள், இப்போது எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்தில் செல்கின்றன. இதனால், இதயமும் அதேவேகத்தில் துடிக்கிறது. இதன் விளைவுதான், இதயப் படபடப்பு.
சிலருக்கு, அவசியமில்லாத மற்றொரு பாதை பிறவிக்கோளாறாக அமைந்திருக்கும். திடீரென்று இந்த இரண்டாவது பாதையிலும் மின்விசை பாயத் தொடங்கும். அப்போதும் இதயத் துடிப்பு சட்டென்று எகிறும். இவை தவிர, இதயத்தின் மேல் அறைகளில் அதிக மின்விசை உற்பத்தியாவதும் உண்டு.
இந்தப் பிரச்சினையை ‘எஸ்.வி.டி.’ (Supraventricular tachycardia) என்கிறோம். இந்த நோய் உள்ளவர்களுக்கு நிமிடத்துக்கு 180 முதல் 220 வரைகூட இதயம் துடிக்கும். இந்தத் தவறு இதயத்தின் கீழ் அறைகளில் நிகழும்பட்சத்தில் அதனை ‘வி.டி.’ (Ventricular tachycardia) என்கிறோம். இன்னொன்று, இதயத் துடிப்பு வேகம் எடுப்பதற்கு மாறாக, நிமிடத்துக்கு 40 முறை எனக் குறைந்தாலும் ஆபத்துதான். இதை ‘இதய அடைப்பு’ (Heart block) என்போம். இதுவும் படபடப்பை ஏற்படுத்தும்.
(போற்றுவோம்)
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; gganesan95@gmail.com