நலம் வாழ

வெயிலிலிருந்து கண்களைப் பாதுகாக்க 

டாக்டர் பெ.ரங்கநாதன்

கோடை விடுமுறையைத் தொடர்ந்து மக்கள் மகிழ்ச்சியாகச் சுற்றுலாவுக்குத் தயாராகியுள்ளனர். எனினும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் பலரை உடல் சோர்வுக்குத் தள்ளியுள்ளது. பொதுவாகச் சூரியஒளி நம் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியது; அந்த வகையில் வெயிலின் நன்மைகள் என்னென்ன, வெயிலின் தாக்கத்திலிருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது என்று பார்ப்போம்.

வெயிலின் நன்மைகள்: வெயில் நம் உடலில் படும்போதும் விட்டமின் டி உற்பத்தி ஆகிறது. இது நம் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. குறிப்பாக, வெயில் நமது தூக்கத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. வெயிலில் விளையாடும் குழந்தைகளிடையே கிட்டப்பார்வை குறைபாடு குறைவாகக் காணப் படுவதாக ஆய்வு கூறுகிறது.

வெயில் மனிதர்களுக்குப் பலநன்மைகளைத் தந்தாலும், அதிகப்படியான நேரம் வெயிலில் இருக்கும் போது அதன் தாக்கம் நமக்குச் சில பாதிப்புகளை உண்டாக்குகிறது. பொதுவாக வெயிலில் செல்லும் போது வெப்பம் அதிகமாக நம் கண்களின் மேற்பகுதியில் படும்போது, கண் சிவத்தல், கண் உறுத்தல், கண் வலி, பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகளுடன் கூடிய உலர் கண் நோய் (Dry Eye) மற்றும் கண் வெண்படல ஒவ்வாமை நோய் (Allergic Conjunctivitis) ஏற்படுகிறது.

இதனால் புற ஊதாக் கதிர்கள் நம் கண்ணுக்குள் தொடர்ந்து ஊடுருவும்போது அது நம் கண் விழித்திரையைப் பாதிக்கக்கூடும். இந்தப் பாதிப்பில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள புற ஊதாக் கதிர்களைத் தடுக்கக்கூடிய தரமான குளிர்க் (Sun Glasses) கண்ணாடி அணிந்து செல்ல வேண்டும். இதற்காகச் சாலையோரம் விற்கப்படும் மலிவான கண்ணாடிகளை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.

கண் சார்ந்த பிரச்சினைகள்: வெயிலில் வேலை செய்யும் விவசாயிகள், தொழிலாளர்கள், பிற பணியாளர்கள் தொடர்ந்து வெயிலில் வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு வெயிலின் வெப்பம், புற ஊதாக் கதிர்கள் தாக்கத்தினால் கண்புரை, கண் சதை வளர்ச்சி போன்றவை ஏற்படலாம். கடல் சார்ந்த, பாறைகள் நிறைந்த பகுதிகளில் சூரிய ஒளிக் கதிர்கள் கடல் பகுதிகள், பாறையின் மீது மோதி மீண்டும் சுற்றுச்சூழலில் பிரதிபலிப்பதால் அந்தப் பகுதிகளில் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் அதிகம் காணப்படும்.

இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்குப் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தினால் செதில் கண் புரை நோய் (Pseudoexfoliation) பாதிப்பு ஏற்படும் ஆபத்து உண்டு. இதனால், கண்ணில் நீர் அழுத்தம் அதிகமாகி, கண் பார்வை நரம்பு பாதிக்கப்படக்கூடும். எனவே, கடலோர, பாறைப் பகுதிகள் நிறைந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்களுக்குக் கண் நீர் அழுத்த நோய் (கிளாகோமா) இருக்கிறதா என்பதை வருடம் ஒருமுறை பரிசோதித்துக்கொள்வது அவசியம்.

இந்தப் பாதிப்பிலிருந்து விடுபட, விவசாயிகள், மீனவர்கள் தங்களைக்காத்துக்கொள்ளச் சூரிய ஒளி கண் ணாடி, தொப்பி அல்லது முண்டாசு அணிந்துகொண்டு வேலையில் ஈடுபடுவது நல்லது.

வெப்ப மயக்கம்: சமீபத்தில் 70 வயதான முதியவர் ஒருவரை அவரது மகன் ஏசி இல்லாத காரில் மதிய வேளையில் வெகு தூரம் அழைத்துச் சென்றுள்ளார். போகும் வழியில் முதியவர் மயக்கமடைய, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்கு வெப்ப மயக்கம் (Heat Stroke) இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து அந்த முதியவரைக் காப்பாற்றி இருக்கிறார்கள்.

வெயில் காலத்தில் வெப்ப மயக்கம் (Heat Stroke), கண் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள வழிமுறைகள்: கடும் வெயிலில் இருந்து விலகி இருப்போம். பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அதிகமாகக் காணப் படும். இந்நேரத்தில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக வெயில் காலத்தில் அனைவரும் இரண்டு அல்லது மூன்று முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். குறிப்பாக, முதியவர்கள் இந்த நேரத்தில் வெளியில் செல்வதையோ, வெயிலில் வேலை செய்வதையோ தவிர்க்க வேண்டும். முதியவர்கள், குழந்தைகள் வெயிலில் நிற்கும் காருக்குள் அமரக்

கூடாது. காரணம், காரின் கண்ணாடி திறக்கப்பட்டிருந்தாலும் கார் வெயிலில் நிற்கும்போது உங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் ஏற்படக்கூடும். கடும் வெயிலில் செல்ல நேர்ந்தால் தொப்பி அணிந்து கொண்டு அல்லது குடை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டும். கடும் வெயிலில் செல்லும் போது சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்களாலும், வெப்பத் தாலும் நம் கண் கருவிழி பாதிக்கப்படும்போது கண் சிவத்தல், கண் வலி, பார்வை மங்குதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதைத் தடுக்க வெளியே செல்லும்போது தரமான புற ஊதாக் கதிர்களைத் தடுக்கக்கூடிய குளிர்க் கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும்.

நீச்சல் குளம்: வெயில் காலத்தில் பலரும் நீச்சல் கற்றுக்கொள்வதால் நீச்சல் குளங்களில் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் குளோரின் கலந்த நீர் கண்ணில்படும் வாய்ப்பு அதிகம். இதனால் கண் சிவத்தல், எரிச்சல், பார்வை மங்குதல் பிரச்சினைகள் உண்டாகும். இதைத் தடுக்க நீச்சல் குளங்களில் இறங்கும் போது தரமான நீச்சல் குளப் பாதுகாப்புக் கண்ணாடி அணிந்து செல்ல வேண்டும். குளத்தில் இருந்து வெளியே வந்தவுடன் நல்ல தண்ணீரில் முகத்தையும் கண் களையும் நன்றாகக் கழுவ வேண்டும்.

விளையாட்டுகள்: வெயில் காலத்தில் சிறுவர், சிறுமியர் திறந்தவெளியில் விளையாடும்போது கவனத்துடன் விளையாட வேண்டும். குறிப் பாக, கிராமப்புறங்களில் புதர்கள், மரங்கள் நிறைந்த இடங்களில் குழந்தைகள் விளையாடும்போது கண்ணில் குச்சி குத்திவிடக்கூடும். மேலும், புழுதியில் விளையாடும் போது சில குழந்தைகளுக்குக் கண் ஒவ்வாமை நோய் ஏற்படக்கூடும். ஆகையால் கவனத்துடன் பாது காப்பான இடங்களில் விளையாடக் குழந்தைகளிடம் பெற்றோர் அறிவுறுத்த வேண்டும்.

உலர்கண் நோய்: அதிகப்படியான நேரம் வெளியில் வெப்பமான பகுதியில் நேரத்தைச் செலவு செய்யும்போது நம் கண்ணில் நீர்ச் சத்து குறைந்து கண் வலி, கண் சிவத்தல், கண் எரிச்சல் காரணமாக அவதிப்படும் பிரச்சினைதான் உலர் கண் நோய். இதனைக் குறைக்க மருத்துவர் அறிவுரைப்படி செயற்கைக் கண்ணீர் மருந்து (Artificial tears) பயன்படுத்தலாம்.

புகைபிடிக்க வேண்டாம்: வெயில் காலத்தில் புகைபிடிப்ப தால் உலர்கண் நோய் ஏற்பட்டு அவதிப்பட வாய்ப்புள்ளது. இது மட்டுமன்றி, தொடர்ந்து புகை பிடிப்பதால் கண்ணில் புரை, கண் விழித்திரை மையப்பகுதி சிதைவு ஏற்படும் ஆபத்தும் உண்டு. அதனால் புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மே மாதம் முழுவதும் மேற்கண்ட அறிவுரைகளைப் பின்பற்றி, கண் மற்றும் உடல் பாதிப்புகளைத் தவிர்த்துக் கோடை விடுமுறையை ஆரோக்கியத்துடன் கழிப்போம்.

- கட்டுரையாளர், கண் விழித்திரை சிகிச்சை நிபுணர்; drranganathansocial@gmail.com

SCROLL FOR NEXT