உலகம் முழுவதும் 15% பேர் தலைசுற்றல் பிரச்சினையால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தியர்களில் 18 கோடிப் பேர், தலைசுற்றலால் பாதிப்புக்குள்ளாவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. குறிப்பாக, தலைசுற்றலால் பாதிக்கப்பட்டுள்ள 65 வயதைக் கடந்தவர்களில் 25% பேர் மயங்கி விழுந்து உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாவ தாகவும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
வெர்டிகோ (Vertigo) என்கிற தலைசுற்றல் பல நோய்களுக்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட நபருக்கு உடல் சமநிலை இழப்பு, குமட்டல், வாந்தி, கிறுகிறுப்பு, கீழே விழும் நிலை போன்றவை ஏற்படுகின்றன.
திரவத்தால் உருவாகும் சிக்கல்: உடலைச் சமநிலைப்படுத்த உதவும் உறுப்புகளில் முக்கியமானவை காதுகள்; நம் உடலைச் சமநிலையில் வைப்பதற்கு நமது இரு காதுகளிலும் மூன்று அரைவட்ட, மோதிர வடிவிலான குழாய்கள் உள்ளன. அக்குழாய்களில் என்டோலிம்ப் என்கிற சிறப்பு வாய்ந்த திரவம் நிரப்பப்பட்டு உள்ளது. இதில் பொட்டாசியம் மிகுதியாகவும், சோடியம் குறைவாகவும் உள்ளது. இது வற்றாத திரவமாகும். தலையை மேலும் கீழுமாக, வலமும் இடமு மாகத் திருப்பும்போது எல்லாம் எதிர்திசையில் இத்திரவம் நகர்ந்து மூளைக்குத் தலை அசைகிற செய்தியை நரம்பின் மூலம் கடத்தும்.
இந்தத் திரவம் தன்னிச்சையாகச் சுழலும்போது நமக்குத் தலைச்சுற்றல் ஏற்படுகிறது. தலைச்சுற்றலைப் புரியும்படி கூற வேண்டுமானால், ஒரு கோப்பையில் நீரை நிரப்பி அதைச் சுழற்றினால் கோப்பையில் நீர் சுற்றும்; கோப்பை சுற்றுவதை நிறுத்தியவுடன் அக் கோப்பையில் உள்ள நீர் மட்டும் சுற்றிக் கொண்டே இருக்கும். அதிலுள்ள நீரின் சுழற்சி நிற்க சில மணித்துளிகள் எடுத்துக்கொள்ளும்.
அதேபோல் குடை ராட்டினத்தில் ஒருவர் அமர்ந்து நில நிமிடங்கள் சுற்றி வந்தபின்பு, ராட்டினம் நின்ற பின்பும் அதில் அமர்ந்து சுற்றிய நபர், அவரைச் சுற்றி இருக்கும் பொருள்கள் சுற்றிக் கொண்டே இருப்பதைப் போல் உணர்வார். காரணம் கோப்பை யில் உள்ள நீர், கோப்பை சுழல்வதை நிறுத்திய பின்பும் சுழல் வதைப்போல், ராட்டினத்தில் சுற்றியவரது காதுகளில் உள்ள திரவம் சில விநாடி நிற்காமல் சுழல்வதால் தலைசுற்றல், குமட்டல், வாந்தி, கிறுகிறுப்பு போன்றவை ஏற்படும்.
தீங்கற்ற தலைசுற்றல்: எந்த நோயும் இல்லாமல் இருக்கும்போதும், முதியவர்களுக் கும் கர்ப்பிணிகளுக்கும், நடுத்தர வயதினருக்கும் திடீரெனத் தலை சுற்றல் ஏற்பட்டு, கீழே விழுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். காது களில் உள்ள அரைவட்ட, மோதிர வடிவக் குழாய்களின் தடுப்புச் சுவர்களில் உள்ள நுண்ணிய சுண்ணாம்புத் துகள்களே இதற்குக்காரணமாகும். இத்துகள்கள் குழாய்களிலுள்ள திரவத்தில் விழுந்து திரவத்தில் அசைவை ஏற்படுத்தி, தலைசுற்றல், கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்பட்டு உடல் சமநிலையை இழக்கச் செய்கிறது. இவ்வகைத் தலைசுற்றல் ஆபத்தற்றதாகப் பார்க்கப்படுகிறது.
எந்த மருந்தும் சிகிச்சையும் இன்றி இத்தகைய தலைசுற்றல் தானாகவே குணமாகும். இது ‘தீங்கற்ற பரக்ஸிஸ்மல் பொசிஷனல் வெர்டிகோ’ (BPPV) என அழைக்கப்படுகிறது. இவ்வகைத் தலைசுற்ற லைச் சரிசெய்ய சில பயிற்சி முறைகள் உள்ளன. மருத்துவர்களின் ஆலோசனைபடி அத்தகைய பயிற்சிகளைப் பின்பற்றி இந்தத்தொல்லையிலிருந்து மீளலாம்.
காரணிகள்: செவி சார்ந்த நோய்கள், மூளை பாதிப்பு, ரத்தக்குழாய் சார்ந்த நோய்கள், மைக்ரேன் என்கிற ஒற்றைத் தலைவலி, சிலவகை மருந்து மாத்திரைகள், கர்ப்பம், நடனம், காது - மூக்கு - தொண்டை ஒவ்வாமை, ரத்த அழுத்தம், ரத்த சோகை, கழுத்து எலும்புத் தேய்மானம், நீரிழப்பு, இதய நோய் கள், நரம்பியல் நோய், இரைப்பையில் இருந்து தொண்டைக்கு உணவு வருவது போன்ற பல்வேறு காரணி களால் தலைசுற்றல் ஏற்படுகிறது. வெகு சிலருக்கு மூளையில் ஏற்படும் கட்டியால் தலைசுற்றல் வரும்.
தடுக்கும் வழிகள்: தலைசுற்றல் ஏற்பட்டால் முதலில் தரையில் அமைதியாக அமர வேண்டும். இருட்டு அறையில் படுத்து ஓய்வு எடுத்தல் அவசியம். நிதானமாகத் தரையில் இருந்து எழுந்து நின்று, தலையை நிதானமாகத் திருப்ப வேண்டும். துங்கும் போது தலையணையை உயரமாக வைத்து முதுகு பக்கமாக தூக்கியவாறு படுக்க வேண்டும்.
இதனால் செவிஅறை திரவம் மீது நுண்ணிய சுண்ணாம்புத் துகள் அசைவை ஏற்படுத்தாமல் தடுக்கலாம் தலைசுற்றலைத் தவிர்க்கப் போதுமான நீர் பருக வேண்டும்; பொட்டாசியம் நிறைந்த பழங்கள், காய்கள், பசுமையான கீரைகள், இஞ்சி, மீன், முட்டை, பழுப்பு நிற அரிசி ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வகை உணவு வகைகள் செவி நரம்பையும் மூளை நரம்பு இணைப்பையும் புதுப்பித்து நல்ல உறக்கத்தை அளித்து நரம்பு மண்டலத்தைச் சீராக்கும்.
தவிர்க்க வேண்டியவை: மது, புகையிலை சார்ந்த நச்சுகள் நரம்புகளை, ரத்தக் குழாய்களைப் பாழாக்கி, தலைசுற்றலை அதிகரிக் கும். எனவே தலைசுற்றல் பிரச் சினை உள்ள நபர்கள் இவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். சரியான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம். ஆழ்ந்த உறக்கம் மூளைக்கு நல்ல ஓய்வை அளிப்ப துடன், மூளை நரம்புகளுக்குப் புத்துணர்வை அளித்து நரம்பு நோய்களைத் தடுக்கும்.
அவசரகால நடவடிக்கை: 1% சதவீதத் தலைசுற்றல், மூளை யில் உள்ள ஆபத்தான கட்டியினால் ஏற்படுகிறது. இத்தகைய நபர்களுக்கு உடனடியான மருத்துவச் சிகிச்சைகள் அவசியம். தலைசுற்றலுடன் கூடிய ஒலி-செவித்திறன் குறைபாடு உள்ள வர்கள், தீவிர தலைவலி, வலிப்பு நோய், இதயத் துடிப்பு அதிகரிப்பு, பக்கவாதம் (Stroke), இயல்பாகப் பேச முடியாமல் இருப்பது, நடையில் தடுமாற்றம் போன்ற அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் துரிதமாக மருத்துவ உதவியை நாடுவது அவசியம்.
குறிப்பாக மூளை நரம்பு நிபுணர், காது - மூக்கு - தொண்டை சிறப்பு மருத்துவர்களை நாட வேண்டும். மேலே குறிப்பிட்ட அறிகுறி உள்ளவர்கள் வாகனங்களை இயக்குவதைத் தற்காலிகமாகத் தவிர்க்க வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் போதிய முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளைப் பின்பற்றி தலை சுற்றல் பிரச்சினையிலிருந்து நம் உடலைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
தலைசுற்றலைத் தவிர்க்கும் பயிற்சிகள்
1. முதலில் மெத்தையின் மேல் அமருங்கள்.
2. 45 டிகிரி கோணத்தில் தலையை இடதுபக்கம் பக்கம் திருப்புங்கள்.
3. ஒரு பக்கமாகத் திருப்பிய தலையுடன் வேகமாக மெத்தையின் மீது படுக்க வேண்டும்; கால்கள் கீழே தொங்கியபடி இருக்க வேண்டும்.
4. 30 விநாடிகள் இதே நிலையில் படுத்திருக்க வேண்டும்.
5. பின்னர் தலையை வலதுபக்கம் திருப்புங்கள். 45 டிகிரி கோணத்தில் 30 விநாடிகள் வரை இதே நிலையில் காத்திருக்க வேண்டும்.
6. இறுதியாக, தலையை 90 டிகிரி கோணத்தில் வைத்து எழுந்தி ருக்க வேண்டும்.
பயிற்சி - 2
1. மெத்தையில் நேராக அமருங்கள்.
2. ஒரு புறமாகப் படுத்து, 45 டிகிரி கோணம் அளவுக்கு மேல் நோக்கிப் பாருங்கள்.
3. 30 விநாடிகள் இதே நிலையில் காத்தி ருங்கள்.
4. தலைசுற்றல் நிற்கும் வரை காத்திருந்து பிறகு நேராக அமருங்கள்.
- கட்டுரையாளர், முதியோர் நல மருத்துவர்; dr.e.subbarayan53@gmail.com; dr.e.subbarayan53@gmail.com