ரத்தம் சார்ந்த நோய்களில் ‘ஏபிளாஸ்டிக் அனீமியா’ என்பது அரிதானதாகவும் தீவிரம் மிக்கதாகவும் இருக்கிறது. மனித உடலில் கல்லீரல், மூளை, இதயம், தோல் , சிறுநீரகங்கள், நுரையீரல் உள்ளிட்ட அனைத்து முக்கிய உறுப்புகளையும்விட முக்கியமான உறுப்பு, ரத்தமாகும். ரத்தம் ஓர் உறுப்பா? ஆம். பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள், ஆக்சிஜன் உள்ளிட்ட வற்றைச் சுமந்து நாள்தோறும் களைப்பில்லாமல் ரத்த நாளங் களில் ஓடிக் கொண்டுபோய் சேர்க்கும் நமது ரத்தமும் ஓர் உறுப்பாகும்.
மூன்று வகை அணுக்கள்: ரத்தத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள், தட்டணுக்கள் ஆகிய மூன்று வகை அணுக்கள் உள்ளன. இவற்றில் வெள்ளை அணுக்கள், நமது உடலுக்குள் வரும் எதிரிகளான கிருமிகள்/ விஷமிகள் போன்றவற்றுடன் தொடர்ந்து போர்புரிந்து போராடும் ராணுவ வீரர்கள். சிவப்பு அணுக்கள் நமது ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனையும் ஊட்டச்சத்தையும் மூளை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் செல்களுக்கும் எடுத்துச்செல்லும் பணியைச் செய்கின்றன. தட்டணுக்கள் ரத்த உறைதலில் பங்காற்றுகின்றன.
இந்த மூன்று வகை செல்களும் நமது எலும்புகளின் உள்ளே உள்ள மஜ்ஜைகளில் இருந்து உண்டாகின்றன. நாம் ஆட்டிறைச்சியைச் சாப்பிடும் போது எலும்பைத் தட்டி உறிஞ்சிச்சாப்பிடுவோம்தானே... அதுதான் ‘எலும்பு மஜ்ஜை’. அந்த எலும்பு மஜ்ஜைகளில் இருந்து தோன்று பவையே இந்த மூன்று வகை செல்களும். ஏபிளாஸ்டிக் அனீமியா என்பது தன்னுடல் தாக்கு நோயாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என்கின்றன ஆய்வுகள்.
தன்னுடல் தாக்கு நோய்: திடீரென ஒருவருக்கு அவரது நோய் எதிர்ப்புச் சக்தியானது அவரது உடல் உறுப்புகளில் ஒன்றையோ பல வற்றையோ குறிவைத்துத் தாக்குதல் நடத்தினால் அதைத் தன்னுடல் தாக்கு நோய் (autoimmune disorder) என்று அழைக்கிறோம். அதாவது, நமது நாட்டு ராணுவ வீரர்கள் எதிரியை அழிப்பதோடு தவறுதலாக நம் நாட்டு மக்களையும் சேர்த்து அழித்தால் எப்படி இருக்கும்? அதை நம் உடலின் எதிர்ப்புச் சக்தியோடு பொருத்திப் பார்த்தால், அதுவே ஆட்டோ இம்யூன் நோயாகிறது.
இங்கு ஏபிளாஸ்டிக் அனீமியாவில், நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி செல்களான டி-செல்கள், மூன்று வகை ரத்த அணுக்களையும் உருவாக்கும் எலும்பு மஜ்ஜை செல்களை ஒருசேர அழித்தொழிக்கின்றன. இதனால் எலும்பு மஜ்ஜைகளால் இவ்வகை செல்களை உருவாக்க இயலாமல் போகிறது.
எனினும், கண்டறியப்படும் ஏபிளாஸ்டிக் அனீமியாக்களில் மூன்றில் இரண்டுக்கு இதுதான் காரணம் என்று வரையறுத்துக் கூற இயலவில்லை. மரபணுக்களும் சுற்றுப்புறக் காரணிகளும் நமது உடலின் எதிர்ப்புச் சக்தியை எலும்பு மஜ்ஜை செல்களுக்கு எதிராகத் தூண்டுகின்றன.
புற்றுநோய்க்குப் பயன்படுத்தப்படும் கீமோதெரபி மருந்துகள், சில வேதிப்பொருள்கள், வைரஸ் தொற்றுகள் ஆகிய வற்றால் ஏபிளாஸ்டிக் அனீமியா ஏற்படுவது ஆய்வுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நோய் எந்த வயதினருக்கும் எந்தப் பாலினருக்கும் ஏற்பட லாம் என்று அறியப்பட்டாலும் பெண்களைவிட ஆண்களுக்குச் சற்று அதிகமான அளவில் ஏற்படுகிறது.
அறிகுறிகள்: சிவப்பு அணுக்கள் குறைவதால் ஹீமோகுளோபினும் குறைந்து உடலின் செல்களுக்கு ஆக்சிஜன் ஊட்டம் சரியாகக் கிடைக்காமல் அயர்ச்சி, சோர்வு, மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. வெள்ளை அணுக்கள் உற்பத்தி குறைவதால் எதிர்ப்புச் சக்தி குறைந்து, இடைவிடாது பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று ஏற்படும்.
ரத்தம் உறைதலுக்கு உதவும் தட்டணுக்கள் குறைபாட்டால் உதிரப்போக்கு, ஈறுகளில் ரத்தக்கசிவு, மூக்கில் இருந்து ரத்தக் கசிவு, வெளுத்துப்போன தோற்றம், இதயத்துடிப்பு சீரற்ற நிலை ஆகியவை ஏற்படும். ரத்த செல்களை பரிசோதனை செய்து பார்த்தால் சிவப்பு, வெள்ளை, தட்டணுக்கள் ஆகிய மூன்றுமே அளவில் மிக மிகக் குறைந்து காணப்படும். இந்நோயை உறுதிப்படுத்த இடுப்பெலும்பு மஜ்ஜை செல்கள் ஆராய்ச்சிக்கு உள்படுத்தப்படும்.
நோயின் வகைகள்: இந்நோய் தீவிரத்தன்மை யைப் பொறுத்துத் தீவிர மற்ற நோய், தீவிரமான நோய், அதிதீவிரமான நோய் என மூன்று வகையாக வகைப்படுத்தப்படுகிறது. நோயாளியின் வயது, மரபணுக் காரணிகள், நோயின் தன்மை ஆகியவற்றுடன் பல்வேறு இணைநோய் களையும் பொறுத்து நோய் தீவிர மடைகிறது.
சிகிச்சைகள்: ஏபிளாஸ்டிக் அனீமியாவைக் குணப்படுத்தக்கூடிய சிகிச்சை என்பது எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையாகும். நோயாளியின் மரபணுக்களுடன் ஒத்துப்போகும் ஒருவரிடம் இருந்து எலும்பு மஜ்ஜை செல்கள் பெறப்பட்டு அவை நோயாளிக்கு மாற்றம் செய்யப்படும் போது அந்த செல்களை நோயாளியின் உடல் ஏற்றுக்கொண்டால் புதிதாக எலும்பு மஜ்ஜை செல்கள் தோன்றி மூவகை ரத்த செல்களையும் உருவாக்கி அதன் மூலம் நோய் குணமாகிறது. எனினும் இந்தச் சிகிச்சை செய்வதற்கு முன் நோயாளியின் நோய் எதிர்ப்புச் சக்தியை குன்றச் செய்யும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
இன்னும் எலும்பு மஜ்ஜை மாற்று தள்ளிப் போகும் நிலையில் நோயாளியின் எதிர்ப்புச் சக்தியைத் தீவிரமாகக் குன்றச்செய்யும் ‘ஆன்ட்டி தைமோசைட் குளோபுலின் (ATG) மருந்து, சைக்லோஸ்போரின் மருந்துகள் போன்றவை வழங்கப்படுகின்றன. கூடவே, தட்டணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும் எல்த்ரோம்போபேக் எனும் மருந்தும் வழங்கப்படுகிறது.
ஏபிளாஸ்டிக் அனீமியாவால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கால நவீன சிகிச்சையால் நோய் நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றனர். நோய்க்குச் சிகிச்சை பெறும் பட்சத்தில் அந்தச் சிகிச்சை நோயாளிக்கு ஒத்துக்கொள்ளும் நிலையில் சராசரியாக 12.5 வருடங்கள் வரை ஆயுள் நீட்சி ஏற்படுகிறது.
பல ஆய்வுகளில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை அல்லது எதிர்ப்புச் சக்தியைக் குன்றச் செய்யும் மருந்துகளைப் பெற்றவர்கள், நோய் கண்டறியப்பட்டதில் இருந்து முப்பது ஆண்டுகள் வரைகூட நல்ல நிலையில் வாழ்வது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கராத்தே வீரர் ஷிஹான் ஹுசைனி தீவிரமான வகை ஏபிளாஸ்டிக் அனீமியாவால் பாதிக்கப்பட்டி ருந்ததும் அவரது மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம். இதை வைத்து ஏபிளாஸ்டிக் அனீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
தற்கால ஏபிளாஸ்டிக் அனீமியா சிகிச்சையில் அவ்வப் போது ரத்தச் சிவப்பு செல்கள் மாற்றுவது, தட்டணுக்கள் ஏற்றுவது, ரத்த செல்களை உற்பத்தி செய்யும் மருந்துகளை வழங்குவது, பாக்டீரியா கிருமித் தொற்று - பூஞ்சைத் தொற்று ஏற்படாமல் இருக்க ஆன்ட்டிபயாடிக், ஆன்ட்டி ஃபங்கல் மருந்துகள் வழங்குவது ஆகியவற்றுடன் எதிர்ப்புச் சக்தியைக் குன்றச் செய்யும் மருந்துகளும் வழங்கப்படு கின்றன.
ரத்த தானம் செய்வீர்: ஆரோக் கியமான உடல் நிலையில் இருப்பவர்கள் 56 நாள்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம். 112 நாள்களுக்கு ஒருமுறை சிவப்பு அணுக்களையும் 7 நாள்களுக்கு ஒருமுறை - வருடத்துக்கு 24 முறை தட்டணுக்களையும் இந்நோயாளிகளுக்குத் தானமாக வழங்கலாம். ஆரோக்கியமாக வாழும் அனைவரும் தொடர்ந்து ரத்த தானம் வழங்க உறுதி ஏற்போம். குருதிசார் நோய்களோடு வாழ்பவர்களின் போராட்டத்தில் உடன் நிற்போம்.
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; drfarookab@gmail.com