மாதுளம்பழத்தைச் சில அயல்நாடுகளில் ‘சைனீஸ் ஆப்பிள்’ என்பார்கள். உலகின் பழமையான பழங்களுள் மாதுளையும் ஒன்று. உலகெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளன. நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்து விடும். மருத்துவக் குணங்கள் மட்டுமல்லாது சரும அழகை அள்ளித்தரும் குணங்களையும் கொண்டது மாதுளை.
இளமையும் பொலிவும்: நம்மில் பெரும்பாலானோர் மாதுளையை அதன் நன்மைகள் தெரியாமலேயே சாப்பிட்டு
வருகிறோம். சிலரோ இது கிடைத்தாலும் அதன் நன்மைகள் தெரியாததால் சாப்பி டாமல் இருக்கின்றனர். இளமையாகவும் பொலிவுடனும் தோன்ற வேண்டும் என விரும்புவோர் தினசரி மாதுளம்பழத்தைச் சாப்பிட வேண்டும் எனப் புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மாதுளம்பழத்தில் உள்ள நன்மைகள் தொடர்பாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாதுளம் பழத்தில் உள்ள ‘யுரோலித்தின் ஏ’ என்கிற பொருள், நம் உடலில் செல் சுத்திகரிப்பு மையமான மைட்டோகாண்ட்ரியாவில் புத்துணர்வை ஏற்படுத்தச் செய்கிறது.
இதன் மூலமாக, உடலில் உள்ள செல்கள் வயது முதிராமல் தொடர்ந்து, ஆற்றலுடன் செயல்பட முடிகிறது. இவை, நம் உடலுக்கு வயதாவதைத் தவிர்ப்பதுடன், செல்கள் முதிராமல், பொலிவுடனும் தோன்ற உதவுவதாகவும் அந்த ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. எனவே, மாதுளம்பழத்தைத் தினமும் உண்டுவந்தால் ஆரோக்கியமான நலவாழ்வு வாழ முடியும் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மனநலன் காக்கப்படும்: உடலில் நைட்ரிக் ஆக்சைடு என்னும் தனிமம் குறையும்போது மனஅழுத்தம் ஏற்படும். மாதுளை, நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கும் தன்மைகொண்டது. மாதுளையைச் சாப்பிட்டுவந்தால் மனநலனும் பாதுகாக்கப்படும். உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளை முத்துகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும்.
மாதுளையில் உள்ள ‘எலாஜிக் அமிலம்’ (Ellagic Acid) சூரிய வெப்பத்தால் தோலில் ஏற்படும் கருமையையும் தோல் புற்று நோயையும் தடுக்கும் தன்மை கொண்டது. மாதுளம்பழத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், ரத்தசோகையைத் தடுக்க உதவும். மாதுளம்பழத்தில் உள்ள எதிர் ஆக்சிகரணித் தன்மை, பல்வேறு வகைப் புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பைத் தருகிறது.
செரிமானத்தைத் தூண்டும்: 100 கிராம் மாதுளம்பழம் சாப்பிட்டால் 83 கலோரி சக்தியே கிடைக்கும். அதேநேரம், மாதுளம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது உணவு செரிமானத்துக்கு நல்லது. மாதுளம்பழத்தின் சாறு, பாக்டீரிய எதிர்ப்பு நொதிகளை அதிகம் சுரக்க வைத்து செரிமானத்துக்கு உதவும். அதனால்தான் வயிற்றுக் கோளாறுகளுக்கு மாதுளம்பழம் சாப்பிடப் பரிந்துரைக்கப்படுகிறது.
சருமத்திற்கு நல்லது: தோலில் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைத்துச் சீரமைத்து வடு ஏற்படுவதைத் தடுக்கிறது. மாதுளையின் முத்துகள் சருமச் சுருக்கத்தைப் போக்கும். கூந்தலை வளப் படுத்துவதுடன் அழகுக்கும் கைகொடுக்கும். மாதுளைச்சாற்றைத் தொடர்ந்து 40 நாள்கள் அருந்திவந்தால், மாதவிடாய் பிரச்சினை மட்டுப்படும்.
நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். சரும நோய்கள் நீங்கும். கல்கண்டு, பன்னீர், தேன், மாதுளம் பழச்சாறு நான்கையும் தலா ஒரு டம்ளர் எடுத்து, கலந்து, உருட்டுப்பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை நெல்லிக்காய் அளவு எடுத்து, இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் படை, தேமல் போன்ற சரும நோய்கள், சருமத்தை விட்டே விலகும்.
நினைவாற்றல் பெருகும்: மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டுச் சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும் எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து நன்மைகளையும் இதில் பெறலாம்.
எலும்புகள் வலுப்பெறும்: கருப்பைக்கு வலுவூட்டும் மாதுளைச்சாற்றிலிருந்து உருவாக்கப்படும் மாதுளை மணப்பாகு பெண்களின் கருவளர் காலத்தில் ஏற்படும் மசக்கை, வாந்தியைக் குணப்படுத்தும். உடல்சூட்டினைத் தணித்து கருப்பைக்கு வலுவூட்டி ரத்த விருத்தி செய்து கருவை நலமுடன் வளர்க்கும். கர்ப்பிணிகள் ஐந்தாவது மாதம்வரை மாதுளையைச் சாப்பிடலாம்.
மாதவிடாய் நிற்கும் காலத்தில் (மெனோபாஸ்) ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி, எலும்புத் தேய்மானம் அதிகரிக்கும். இதுபோன்ற காலத்தில் பெண்கள் தினமும் மாதுளம்பழச்சாறு குடிக்கலாம். அது, உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும்; எலும்புகள் வலுப்பெற உதவும்.
கர்ப்பிணிகளுக்கு... சித்த மருத்துவத்தில் மாதுளை மணப்பாகு என்னும் அருமருந்தைப் பயன்படுத்துகின்றனர். மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தைப் பேண சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் தமிழக அரசு தாய்மை அடைந்த பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மகப்பேறு சஞ்சீவி மருத்துவ பொக்கிஷம் என்று 11 வகை மூலிகை மருந்துகள் கலந்த சித்த மருத்துவ மருந்துத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் மாதுளை மணப்பாகு முதன்மையாக, கர்ப்பக் காலத்தில் முதல் மூன்று மாதங்கள் பயன்படுத்துவதால் வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் நீங்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மாதுளை மணப்பாகு சென்னை, பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவப் பிரிவு, சித்த மருத்துவ மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. மருத்துவர் அறிவுரையின் அடிப்படையில் மாதுளம்பழமாகவோ, மணப்பாகாகவோ தினமும் பருகினால் மேற்குறிப்பிட்ட நன்மை கிட்டும். மணப்பாகைக் காட்டிலும் மாதுளையைப் பழமாகச் சாப்பிடுவது சாலச் சிறந்தது.
- கட்டுரையாளர், சித்த மருத்துவர்; dharshini874@gmail.com