நலம் வாழ

உடல் பருமன்: எதிர்கொள்வது எப்படி?

கு.கணேசன்

இந்தியாவில் அனைவரும் கவனிக்க வேண்டிய பிரச்சினையாக உடல் பருமன் (Obesity) மாறி இருக்கிறது. இந்தியாவில் 35 கோடி பேர் உடல் பருமன் உள்ளவர்கள் என்கிறது ஒரு தேசிய ஆய்வு. 2050ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 44 கோடி ஆகிவிடும் என்கிறது மற்றோர் ஆய்வு. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்திய ‘மனதின் குரல்’ உரையில், இந்தியாவில் உடல் பருமன் பிரச்சினையை முறியடிக்க வேண்டும் என்று பேசியிருப்பதிலிருந்தே இதன் தீவிரத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

அடிப்படைக் காரணம் என்ன? - உடல் பருமனுக்கு அடிப்படைக் காரணம் நாம் சாப்பிடும் உணவு முறைதான் என்றாலும், அதையும் தாண்டி வேறு பல காரணங்களும் இருக்கின்றன என்பதைச் சென்ற வாரம் பார்த்தோம். அவை ஆளுக்கு ஆள் வேறுபடும் தன்மையுடையவை.

உதாரணமாக, “சரியான அளவில்தான் சாப்பிடுகிறேன். இருந்தாலும் உடல் எடை கூடுகிறதே!” என்று சிலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். இதற்குக்காரணம், லெப்டின் (Leptin), கிரெலின் (Ghrelin) என்னும் பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் இவர் களுக்குக் குறைவாகச் சுரக்கலாம். இவர்களுக்குப் பசி அடங்காது.

எனவே, குறைவாகச் சாப்பிட்டாலும் அடிக்கடி சாப்பிட்டிருப்பார்கள். இது உடல் பருமனுக்கான சாத்தியத்தை அதிகப்படுத்தி விடுகிறது. அடுத்து, ஊடுகொழுப்பு (Transfat) உள்ள துரித உணவு வகைகளை அடிக்கடி சாப்பிட்டும் கூடச் சிலர் ஒல்லியாக இருப்பதைப் பார்க்கிறோம்.

கொழுப்பைச் சேமித்து வைக்கிற பாலின ஹார்மோன்கள் இவர்களுக்குக் குறைவாக இருக் கலாம். இப்படி, உடல் பருமன் ஏற்படுவதற்கான காரணம் வேறுபடுவதால், உடல் எடை அதிகரிக்கும்போது, என்ன காரணத் தால் அதிகரிக்கிறது என்பதைக் குடும்பநல மருத்துவர் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால், நடப்பதென்ன? பலரும் சமூக ஊடகங்களில்தான் இதற்கு வழி தேடுகின்றனர். அங்கே கொட்டிக்கிடக்கும் ஆயிரக்கணக்கான வழி முறைகளிலும் உணவுமுறை களிலும் குழம்பிப்போய், தங்களுக்குப் பிடித்ததைப் பின்பற்றுகின்றனர்; கவர்ச்சிகரமான ஊடக விளம்பரங் களில் மயங்கி, எடை இழப்புக்குப் பதிலாகப் பணத்தை இழக்கின்றனர்; மனவலிமை இழந்து எடை இழப்பு முயற்சியை நிறுத்திவிடுகின்றனர்.

இங்கே ஒன்றைச் சொல்லிவிடு கிறேன். தூறல் தொடங்கியதும் குடை பிடித்துவிட வேண்டும் என்பதுபோல், உடல் எடை கூடும்போது ஆரம்பத்தி லேயே சரியான உணவுமுறையை ஒழுங்காகக் கடைப்பிடிக்க வேண்டும்; மாத்திரை சாப்பிட்டோ, மூலிகையை விழுங்கியோ உடல் எடையைக் குறைக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இணைநோய்கள் கவனம்: மேலும், முக்கால்வாசிப் பேருக்கு உடல் பருமன் மட்டுமே பிரச்சினையாக இருக்காது. ஊடகவிய லாளர்கள் எங்கு சென்றாலும் கையில் வீடியோ கேமராவைத் தூக்கிச் செல்வதைப்போல, உடல் பருமனால் ஏற்படுகிற உடல் சார்ந்த கோளாறுகளும் இவர்களுக்குச் சேர்ந்தே இருக்கும். உடல் பருமன் என்பதும் சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றுக்கு இணையான ஒரு நோய்தான் என்கிறது நவீன மருத்துவம். அதை அலட்சியப்படுத்துகிறது பொதுச் சமூகம். அதனால்தான் உடல் பருமன் உள்ளவர்களில் பலரும் “உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆரோக்கியமாகவே இருக்கிறோம்” என்று அவர்களாகவே நினைத்துக் கொண்டு, உடல் பரிசோதனை களுக்குச் செல்ல தயங்குகின்றனர். அவர்களைப் பரிசோதித்துப் பார்த்தால், ஆரம்பநிலை சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், குறை தைராய்டு, பிசிஓடி…

இப்படி ஏதாவது ஒரு பிரச்சினை கைகோத்திருப்பதை மருத்துவர்களான நாங்கள் பார்த்திருக்கி றோம். இந்த மாதிரியான சூழலில், உடல் பருமனைக் குறைப்ப தற்கு மட்டும் சிகிச்சை எடுத்தால் முழுமை யான பலன் கிடைக் காது; இணை நோய்களுக்கும் சிகிச்சை பெற வேண்டும். எனவே, மருத்துவர்களிடம் பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகே, ஒருவர் உடல் பருமனைக் குறைக்க வழி தேட வேண்டும்.

இன்சுலின் - அற்புதமும் ஆபத்தும்: உடல் பருமன் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், பெரும் பாலும் நாம் சாப்பிடும் உணவும், அது தூண்டும் ஹார்மோன்களும்தான் முக்கியமானவையாக இருக்கும். ஆகவே, நாம் சாப்பிடும் உணவில் எந்த உணவு உடல் கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதாவது, நாம் சாப்பிடும் எல்லா உணவும் ஒரே அளவில் உடலுக்குள் கொழுப்பை அதிகரிப்பதில்லை. ஒவ்வோர் உணவுக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கிறது. அதைப் பொறுத்துத்தான் உடலில் கொழுப்பின் அளவு கூடும். இதைப் புரிந்துகொள்ள இன்சுலின் என்னும் ஹார்மோன் குறித்துத் தெரிந்திருக்க வேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர் களுக்கு இன்சுலின் ஓர் அற்புத மருந்து என்னும் அளவில் பலரும் இன்சுலினைத் தெரிந்துவைத்திருப்பார்கள். அதையும் தாண்டி இன்சுலினைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. நாம் சாப்பிடும் உணவில் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு என மூன்று வகை முக்கியச் சத்துகள் இருக்கின்றன. இவைதான் நம் உடலுக்கு எரிசக்தி யைக் கொடுக்கின்றன.

இவற்றில் எது ஒன்று மிகுதியாக இருந்தாலும் அதைக் கொழுப்பு அமிலமாக மாற்றி, வயிறு, இடுப்பு, தொடை போன்ற இடங் களில் திசுக்கொழுப்பாகச் சேமித்து வைக்கும் வேலையை இன்சுலின் தான் செய்கிறது. எனவே, எந்த வகை உணவெல் லாம் இன்சுலினை அதிகமாகச் சுரக்க வைக்கிறதோ, அந்த வகை உணவுதான் உடல் பருமன் ஏற்பட முக்கியக் காரணம்.

பெரும்பாலானோர் நாம் சாப்பிடும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள்தான் உடல் பருமனுக்கு ‘பேனர்’ வைக்கிறது என்று நினைக்கி றார்கள். அப்படியல்ல. மருத்துவ அறிவியல்படி, எந்திரங்களில் தீட்டப் பட்ட (Polished) அரிசி, கோதுமை, மைதா போன்ற மாவுச் சத்துள்ள ‘கார்போ’ உணவு வகைகளும் இனிப்புகளும்தான் நம் உடலில் அதிகப்படியான இன்சுலினைச் சுரக்க வைக்கின்றன. உதாரணமாக, மட்டன் பிரியாணி சாப்பிட்டால் அதிலுள்ள மட்டனைவிட பிரியாணி அரிசிதான் இன்சுலின் சுரப்பை அதிகரித்து, உடல் எடையைக் கூட்டும்.

சிலர் கடைகளில் வடை சாப்பிடும்போது அதிலுள்ள எண்ணெய்யை ஒரு பேப்பரில் மூடிப் பிழிவதைக் கவனித்திருப்பீர்கள். உண்மையில், வடையில் உள்ள எண்ணெய்யைவிட வடை மாவுதான் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். ஆகவே, அதிக மாவுச் சத்துள்ள, தீட்டப்பட்ட அரிசி/கோதுமை உணவு வகைகளையும் இனிப்புகளையும் குறைப்பதுதான் உடல் பருமனைக் குறைக்கும் முக்கிய வழி.

தப்பாகிவரும் கலோரி கணக்கு: ‘உடல் எடையைக் குறைக்க உணவு கலோரிகளைக் குறைக்க வேண்டும்!’ – காலங்காலமாக மருத்துவத் துறையில் இருந்து வருகிற கோட்பாடு இது. நாம் தினம் தினம் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் உடலுக்கு எரிசக்தி தேவைப்படுகிறது. இதை உணவின் மூலம் எடுத்துக்கொள்கிறோம். ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்யும் வேலையைப் பொறுத்து அவரவருக்குத் தேவையான கலோரி களைத் தரும் உணவைச் சாப்பிட வேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. அதுதான் கலோரி கணக்கு.

சராசரியாக ஒருவருக்குத் தினமும் 2,000 கலோரி சக்தி தரும் உணவு தேவை என வைத்துக்கொள்வோம். அவருக்கு உடல் பருமன் குறைய வேண்டுமானால், 30% கலோரியைக் குறைத்துக்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்யப்படுவது வழக்கம். அதாவது, 1,400 கலோரி உணவைச் சாப்பிடலாம் என்று ஓர் உணவு அட்ட வணையை (Food Chart) அவரிடம் கொடுத்துவிடு வார்கள். அல்லது ஓர் உண வியலாளரைக் (Dietician) கொண்டு அந்த உணவு முறைக்கு விளக்கம் கொடுப்பார்கள்.

‘கலோரி குறைந்த உணவுமுறை’ (Low calorie diet) என்னும் இந்த முறையில் உணவைச் சாப்பிடுவது நீண்ட நாள்களுக்குப் பலன் தர வில்லை என்றே சமீபகால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காரணம், கணக்குப் போட்டு உணவைக் குறைத்துச் சாப்பிடும் போது, அடுத்ததாகப் பசியை அதிகப் படுத்தும் வகையில்தான் நம் உடல் செயல்படுகிறது. இதை நீங்களே கவனித்திருக்கலாம். பலரும் குறைவான கலோரிகள் கொண்ட உணவைச் சில நாள் களுக்குச் சாப்பிடுவார்கள். பின்னர், பசி படுத்தி எடுக்கும்.

அதைத் தாங்க முடியாமல், மொத்தமாக ஒருநாள் ரொம்பவும் அதிகமாகச் சாப்பிட்டுவிடுவார்கள். ஆகவே, இந்த உணவுமுறை சொல்வதற்கு எளிதாக இருந்தாலும் செயல் படுத்துவதில் சிக்கல் இருக்கிறது. இந்த உணவுமுறையைத் தொடர்ந்து பின்பற்றி மன உறுதியுடன் உடல் எடையைக் குறைப்பவர்கள் மிகவும் குறைவு. இதனால்தான், கலோரி கணக்கை வைத்து உடல் பருமனை அணுகக் கூடாது என்று மருத்துவ உலகமும் இப்போது புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறது.

‘டயட்’ என்றால் என்ன? - உடல் பருமனைக் குறைக்க வேண்டும் என்று சொன்னதும், “எந்த டயட்டைப் பின்பற்ற வேண்டும், டாக்டர்? ஏசியன் டயட்டா?, பேலியோ டயட்டா?, வீகன் டயட்டா?, மெடிட்டரேனியன் டயட்டா?” என்று கேட்கிற வர்கள்தான் அதிகம். அதேநேரத்தில், “நான் ஏற்கெனவே டயட்டில் இருக்கிறேன், டாக்டர்” என்று ஏதாவது ஒரு டயட் பெயரைச் சொல்கிறவர்களும் உண்டு.

உடல் பருமனைக் குறைக்கும் ஒரு வகை உணவுமுறை என்பதாகத்தான் ‘டயட்’ (Diet) என்னும் வார்த்தையைப் பலரும் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால், ‘Diaita’ என்னும் கிரேக்க வார்த்தையிலிருந்து பிறந்த ‘டயட்’டின் உண்மையான பொருள் ‘வாழ்க்கைமுறை’ (a way of life) என்பதாகும். அதாவது, உணவு, உடற் பயிற்சி, நல்ல பழக்கவழக்கங்கள் என எல்லாம் சேர்ந்தது தான் ‘டயட்’. இப்படி, எல்லாமே சரியாக அமைந்தால்தான் உடல் பருமன் பிரச்சினையிலிருந்து ஒருவர் விடுதலை பெற முடியும். உடல் பருமன் உள்ளவர்கள் எல்லாரும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

(போற்றுவோம்)

- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; gganesan95@gmail.com

SCROLL FOR NEXT