நலம் வாழ

சிசேரியனுக்குப் பிறகு சுகப்பிரசவம் சாத்தியமா?

டாக்டர்.ருக்கையாள் பாத்திமா 

சுகப்பிரசவம் எனப்படும் இயல்பான முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். முதல் பிரசவம் சிசேரியன் மூலம் நிகழ்ந்திருந்தாலும், இரண்டா வது பிரசவம் சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் எனவும் சிலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு சுகப்பிரசவம் சாத்தியமா என்பதையும் அதன் நன்மைகள், சிக்கல்கள், யாரெல்லாம் இதற்குத் தகுதியானவர்கள், சுகப்பிரசவத்திற்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

நன்மைகள் - சிக்கல்கள்: சிசேரியன் செய்துகொண்ட பெண்கள் சுகப்பிரசவம் செய்து கொள்வது குறித்துப் பல கேள்விகள் எழுகின்றன. இதற்குப் பின்னால் நன்மைகள், சிக்கல்கள் என இரண்டும் உள்ளன. ஆனால், இது ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட உடல் தகுதி - மருத்துவ நிலையைப் பொறுத்தே அமைகிறது.

சிசேரியன் பிரசவத்துக்கும் சுகப்பிரசவத்துக்கும் இடையே கண்டிப் பாக 18 மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்க வேண்டும். முந்தைய சிசேரியன் அறுவை சிகிச்சை தையல் வடு பிரியக் கூடிய சாத்தியம் இருப்பதால், கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். இருப்பினும், பெண்கள் ஊக்கத்துடன் சுகப்பிரசவத்துக்கு விரும்பி னால், மருத்துவக் கண்காணிப்பு, சரியான உண வுடன் கூடிய வாழ்க்கை முறை, தகுந்த உடற்பயிற்சி மூலம் சுகப் பிரசவத்திற்கு 50-60% வாய்ப்புகள் உள்ளன.

மருத்துவத் தகுதி - வழிமுறைகள்: முந்தைய சிசேரியன் பிரசவம், கீழ் குறுக்குவெட்டு (Lower Segment Caesarean Section – LSCS) முறையில் செய்யப்பட்டிருந்தால், சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பு அதிகம். தற்போதைய கர்ப்ப காலத்தில் எந்தவிதச் சிக்கல்களும் இல்லாமல் இருந்தால், சுகப்பிரசவம் பரிந்துரைக்கப்படலாம். தாயின் உடல் நிலை - மருத்துவ வரலாறு சுகப்பிரசவத்துக்கு ஏற்றதாக இருந்தால், பாதுகாப்பானது எனக் கருதலாம்.

சிக்கல்கள்: இந்த அணுகுமுறையில் நன்மைகளைப் போலவே சிக்கல்களும் உண்டு. சுகப்பிரசவம் மூலம் பிரசவித்தால், தாயின் உடல்நிலை பிரசவத்துக்குப் பிறகு விரைவாக குணமடைகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின் தேவைப்படுகிற நீண்ட கால ஓய்வு இதற்கு வேண்டியதில்லை.

குழந்தைக்கு இயற்கையான பிரசவத்தின்போது நன்மைகள் கிடைக்கும். மேலும், எதிர்கால கர்ப்பங்களில் சிசேரியன் பிரசவத்தால் ஏற்படும் சிக்கல்களைத் தடுக்க உதவுகிறது. அத்துடன் சுகப்பிரசவம், ஒரு நல்ல அனுபவத்தை வழங்குவதுடன் தாய் மார்களை உணர்வுரீதியாக மேன்மை அடையச் அடைய வைக்கிறது.

கருப்பைச் சுவர் கிழிதல்: சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு சுகப்பிரசவத்துக்கான வாய்ப்புகள் இருந்தாலும், இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. கருப்பை சுவர் கிழிதல் (Uterine Rupture) என்பது முந்தைய சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகான சுகப் பிரசவத்தின்போது ஏற்படக்கூடிய அரிதான, சிக்கலான ஒன்று. முந்தைய சிசேரியன் பிரசவத்தின் வடு கிழிந்தால், கடுமையான ரத்தப் போக்கு, குழந்தைக்கு ஆக்சிஜன் குறைபாடு, தாய் - சேய் இருவருக்கும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகள் போன்றவை ஏற்படலாம்.

இதனால் வயிற்று வலி, கருவின் இதயத் துடிப்பில் மாற்றம், தாயின் உள்ளுறுப்புகள் சரியான ரத்தத்தைப் பெறாததால் உறுப்புகள் செயலிழப்பு போன்றவை ஏற்படும். இந்த நிலையைச் சரி செய்யவும், தாய் - சேய் இருவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவசர சிசேரியன் பிரசவம் மூலம் குழந்தை பெறுவது தவிர்க்க முடியாததாக உள்ளது.

கருப்பை வாய் விரிவடைவதில் சிக்கல்: சுகப்பிரசவத்தின்போது கருப்பை வாய் (CERVIX) விரிவடைவது என்பது இயல்பான முக்கியக் கட்டமாகும். சில நேரம், கருப்பை வாய் போதுமான அளவில் விரிவடை யாதது அல்லது வலுவான தளர்ச்சியி லிருந்து விரிவ டையாமல் நிற்கும் நிலை ஏற்படலாம்.

இது பிரசவத்தில் வெகுவாகப் பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் பிறப்பதற்குத் தயாராகியுள்ள குழந்தையின் உடல் நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், மருத்துவர்கள் தாய் - சேய் பாதுகாப்புக்காக சிசேரியன் பிரசவ முறையை நாடுகிறார்கள்.

குழந்தையின் இதயத் துடிப்பு: முந்தைய சிசேரியன் பிரசவத் துக்குப் பின் பிறக்கும் குழந்தை கருப்பையில் உள்ளபோதே அதன் இதயத் துடிப்பை மருத்துவர்கள் உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள். குழந்தையின் இதயத் துடிப்பில் ஏதேனும் அசாதாரண நிலை ஏற்பட்டு ஆக்சிஜன் குறைவு அல்லது தொப்புள் கொடி பிரச்சினை போன்ற சூழ்நிலைகளில், சிசேரியன் பிரசவம் அவசியமாகி, சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.

சுகப்பிரசவத்துக்கு முயலும் பெண்கள், தங்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி சரியான உணவு முறை, தகுந்த உடற்பயிற்சியோடு மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். பிரசவத்துக்கு முன் கர்ப்பகாலப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும். ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். முக்கியமாகப் பெண்கள் மனதளவில் தயாராக இருப்பது மிகவும் அவசியம்.

- கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்; fathi.ashik@gmail.com

SCROLL FOR NEXT