நலம் வாழ

எகிறும் உடல் எடை என்ன காரணம்? | இதயம் போற்று - 26

கு.கணேசன்

ஹர்சனா பிளஸ் டூ மாணவி. ‘உடல் அசதியாக இருக் கிறது; பகலில் உறக்கம் வந்துவிடுகிறது. வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடங்களைக் கவனிக்க முடியவில்லை’ என்று என்னிடம் சிகிச்சைக்கு வந்தார்.

வழக்கமான பரிசோதனைகள் எல்லாம் சரியாக இருந்தன. உடல் எடை மட்டும் அவர் வயதுக்கு மிக அதிகம். ஆகவே, ‘பகலில் உறக்கம் வருவதற்கு உன் உடல் பருமன்தான் காரணம். உடல் எடையைக் குறைத்தால், உறக்கப் பிரச்சினை தீர்ந்துவிடும்’ என்றேன்.

‘நான் குறைவாகத்தான் சாப்பிடு கிறேன், டாக்டர். உடல் எடை எப்படிக் கூடியது என்பது தெரியவில்லை!’ என்றார் ஹர்சனா. அவர் சாப்பிடும் உணவு வகைகளைப் பட்டியல் போடச் சொன்னேன். பள்ளிக்குப் போகும்போது அவர் சாப்பிடும் உணவின் அளவு குறைவுதான். ஆனால், அவர் மாலையில் வீடு திரும்பியதும் சாப்பிடும் நொறுவை தான் அதிகம்.

வாரம் மூன்று நாள் நூடுல்ஸ், பீட்ஸா, பர்கர், பரோட்டா கட்டாயம் வேண்டும். பாப்கார்ன், சிப்ஸ், கிரீம் கேக், சமோசா, சாக்லெட், கோலா பானம், ஸ்பிரிங் ரோல், ஃபிங்கர் ஃபிரை, டோனட், டாக்கோஸ் போன்ற பேக்கரி உணவில் ஒன்று இல்லாத நாளே இல்லை. ஹர்சனாவின் உடல் பருமனுக்கு கலோரிகள் அதிகமுள்ள இந்த மாதிரியான உணவுப் பழக்கம்தான் காரணம் என்றேன்.

நொறுவைகள் கவனம்: உணவுப் பழக்கத்தில், நொறுவைகளை அதிகம் விரும்பிச் சாப்பிடும் இன்றைய குழந்தைகள் உடல் பருமனுக்கு அந்த நொறுவைகள்தான் சிநேகிதர்கள் என்பதைப் புரிந்துகொள்வதில்லை. குழந்தைகள் மட்டுமல்ல, பருமனாக இருக்கும் பெரியவர்களையுமே கேட்டுப் பாருங்கள். ‘ஐயோ… நான் எதுவுமே சாப்பிடறதில்லை. ஏன்தான் குண்டாகிட்டே போறேனோ, தெரியல!’ என்பார்கள்.

கூர்ந்து கவனித்தால், அப்படிக் குண்டானவர்கள் பலரும் பல நேரம் அதிகமாகவோ அல்லது அதிக கலோரிகள் கொண்ட உணவையோ சாப்பிட்டிருப்பார்கள். இதை மருத்துவ அறிவியல்படி சொன்னால், இந்தியர்கள் சாப்பிட வேண்டிய தினசரி உணவு கலோரியின் சராசரி அளவு 1,800. ஆனால், இந்தியர்கள் சாப்பிடும் உணவு கலோரி சராசரியாக 3,000த்தைத் தாண்டுகிறது.

ஊடுகொழுப்பு உணவு இன்றைய சந்தை உணவுக் கலாச்சாரம் நம் ஆரோக்கியத்தின் மீது பல வழிகளில் ‘பட்டாசு’ கொளுத்து கிறது. குறிப்பாக, இன்றைய இளைய தலைமுறையைக் குறிவைத்துத் தயாரிக்கப்படும் கண்ணைக் கவரும் வண்ண வண்ண உணவு வகைகளில் அவர்கள் மயங்கிவிடுகிறார்கள்; ‘சமைக்கும் நேரம் மிச்சம்’ என்று நம்மை ஏமாற்றிச் சாப்பிட வைக்கும் உடனடி - துரித உணவுக்கு அடிமை ஆகிவிடுகிறார்கள்; எண்ணெய்யில் மிதக்கும் உணவையே அதிகம் விரும்புகிறார்கள். சுட்ட உணவும் பொரித்த உணவும்தான் அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.

குளிர்பானங்களின் இனிப்பு மிகுந்த செயற்கைச் சுவையைக் கைவிட முடியாமல் தொடர்கிறார்கள். வெள்ளை அரிசி, வெள்ளைச் சர்க்கரை, வெள்ளை மைதா உணவு இல்லாத நாள்கள் மிகவும் குறைவு. முன்பெல்லாம் கடைகளுக்குச் சென்று உணவு சாப்பிட்டார்கள். இப்போதோ திறன்பேசியில் ஆர்டர் செய்கிறார்கள். அப்படி ஆர்டர் செய்து சாப்பிடும் துரித உணவிலும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவிலும் ஊடுகொழுப்பு (Transfat) உட்கார்ந்திருக்கிறது. இதனால், உடல் எடை எகிறுகிறது.

உடல் இயக்கம் குறைவு: உடல் எடை எகிற நம் உடல் இயக்கம் குறைந்துபோனது அடுத்த காரணம். உணவின் மூலம் நாம் பெறும் அதிக கலோரி சக்தியை உடல் இயக்கத்தின் மூலம் செலவழித்துவிட்டால் உடல் எடை எகிறச் சாத்தியம் இல்லை. தொட்டியில் தண்ணீர் நிரம்பிவிட்டால், தொடர்ந்து வரும் தண்ணீர் வழிந்தோடத் தனிக் குழாய் பொருத்தி வழி கொடுக்கிறோம்.

இதேபோல், உடலுக்குள் மிகுந்துவிட்ட சக்தி யைச் செலவழிக்க நாம் என்ன செய்கிறோம்? உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, விளையாட்டு இந்த மூன்றும்தான் சக்தியைச் செலவழிக்கும் வழிகள். இதில்தான் நாம் அலட்சியம் காட்டு கிறோம்.

இப்போதெல்லாம் அநேகருக்கு வெளியே நடந்து செல்வது என்பதே குறைந்துவிட்டது. ‘வீட்டிலிருந்தே வேலை’ என்று ஆன பிறகு, அலுவலகம் சென்று நடப்பதும் குறைந்துவிட்டது. பல வேலைகளைக் கைபேசி மூலம் உட்கார்ந்த இடத்திலிருந்தே முடித்துக்கொள்கிறோம். தொடர்ந்து பல மணி நேரம் அமர்ந்தே பார்க்கும் அலுவலக வேலைகள் அதிகரித்துவிட்டன.

இப்படி, உடல்ரீதியாகச் சக்தி செலவழிக்கப் படுவது குறைந்துவிட்டது. இதனால், உணவின் மூலம் நாம் பெற்ற அதிக சக்தி அப்படியே உடலுக்குள் தேங்கிவிடுகிறது. இது உடல் எடையை அதிகரித்துவிடுகிறது. பெரியவர்கள் சரி. இன்றைய குழந் தைகளை நினைத்துப் பாருங்கள். நாட்டில் தொடர்ந்து நிகழும் நகரமய மாக்கலின் விளைவாகத் திறந்த வெளிகளைப் பார்ப்பது அரிதாகி விட்டது.

குழந்தைகள் கூட்டாகச் சேர்ந்து திறந்தவெளிகளில் விளையாடுகிற சூழல் காணாமல் போய் விட்டது. இப்படியான விளையாட்டு களில் கடந்த தலைமுறை பெற்ற உடற்பயிற்சி இந்தத் தலைமுறை குழந்தைகளுக்குக் கிடைக்காமல் போய்விட்டது. இதனாலேயே பெரும் பாலான நேரம் குழந்தைகள் தொலைக் காட்சி, கைபேசி, கணினி, கேட்ஜெட் முன்னால் உட்கார்ந்துவிடுகின்றனர்.

பசி இல்லாவிட்டால்கூட இதுபோன்ற நேரத்தில் அவர்கள் ஏதேனும் நொறுவையைச் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக்கொள்கின்றனர். இதனால், அவர்கள் சாப்பிடும் நொறுவைகளின் அளவும் கூடிவிடு கிறது. இம்மாதிரியான உடல் இயக்கம் குறைந்த வாழ்க்கை முறையும் மோசமான உணவுப்பழக்கமும் குழந் தைகளின் உடல் எடையை எகிற வைக்கின்றன.

உறக்கம் தொலைந்த வாழ்க்கை: கட்டுரையின் ஆரம்பத் தில் ஹர்சனாவுக்கு உடல் பருமன் காரணமாகப் பகலில் உறக்கம் வருகிறது என்று சொன் னேன். பலருக்கு உறக்கம் குறைந்தாலும் உடல் எடைகூடும். இன்றைக்கு, பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிகிறவர்களில் பலருக்கு அலுவலக வேலை காரணமாக, இரவில் வரவேண்டிய உறக்கம், நள்ளிரவு தாண்டி அதிகாலைக்குத் தள்ளிப்போகிறது.

அதோடு செல்போன்/தொலைக் காட்சி பார்ப்பது எனப் பல வழிகளில் இரவுத் தூக்கம் தொலைகிறது. இது உடல் பருமனை வரவழைக்கிறது. எப்படி? லெப்டின் (Leptin), கிரெலின் (Ghrelin) என்பவை பசியைக் கட்டுப்படுத்தும் ஹார் மோன்கள். சரியான அளவுக்கு நாம் உறங்காவிட்டால், இந்த ஹார்மோன்கள் சமநிலை தவறி, நம் பசி உணர்வைத் தூண்டிவிடும். அப்போது நம்மை அறியாமலேயே அதிகமாகச் சாப்பிட்டுவிடுவோம். இது அடிக்கடி நிகழ்ந்தால் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்க முடியாது.

அழுத்தம் மிகுந்த வாழ்க்கைமுறை

இன்றையப் பணிச்சூழலில் எல்லாத் துறைகளிலும் பணி அழுத்தம் அதிகரித்திருக்கிறது. அது மன அழுத்தமாக மாறிவிடுகிறது. மன அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க ரத்தத்தில் கார்ட்டிசால் (Cortisol) ஹார்மோன் குற்றால அருவிபோல் கொட்டுகிறது. இது இன்சுலின் சுரப்பை எகிற வைக்கிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது. உடனே நமக்கு இனிப்பான உணவுகள் மீது ஆவல் பிறக்கிறது. அளவில்லாமல் அவற்றைச் சாப்பிட்டுவிடுகிறோம். இந்தப் பழக்கம் நீடிக்கும்போது உடல் பருமன் நமக்கு அழையாத விருந்தாளி ஆகிவிடுகிறது.

குடும்பப் பாரம்பரியம்: உடல் எடையைத் தீர்மானிப்பதில் நம் மரபுப் பண்புகளுக்கும் பெரும் பங்கு உண்டு. மேற்கத்திய நாட்டின ரோடு ஒப்பிடும்போது இந்தியர்களுக்குக் குடும்பப் பாரம்பரியத்தில் உடல் பருமன் ஏற்படுகிற சாத்தியம் அதிகம். இப்படிப் பாரம்பரிய வழியில் ஏற்படும் உடல் பருமனைக் கட்டுப்படுத்துவது கடினம்.

என்ன காரணம்? பெற்றோரிடமிருந்து இவர்கள் பெற்ற மரபணுக்கள்தான் இவர்கள் சேமித்து வைக்கும் திசுக்கொழுப்பின் அளவையும் (Visceral fat), அவை உடலுக்குள் விநியோகிக்கப்படும் முறையையும் தீர்மானிக்கின்றன. மேலும், இவர்களின் பசியை ஒழுங்குபடுத்துவது, உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சியின் போது உடல் கலோரி களைச் செலவிடுவது எனப் பல பணிகளை இந்த மரபணுக்கள்தான் கவனிக்கின்றன. இவற்றில் நாம் ‘மூக்கை நுழைக்க’ முடியாது. எவ்வளவோ முயன்றும் உடல் எடைகுறையவில்லை என்ப வர்கள் இந்த வகையினர்.

காற்று மாசு - மருந்துகள் - நோய்கள்: உடல் பருமனுக்குக் காற்று மாசுவும் ஒரு காரணம். காற்றில் கலந்து வரும் நுண்மாசுகள் உடலுக்குள் அழற்சியை உருவாக்கும். இந்த அழற்சி நம் வளர்சிதைமாற்றப் பணிகளில் சமநிலையைப் புரட்டிப் போடும். இந்த எதிர்வினை உறுப்புக் கொழுப்பு சேர இடம் அளிக்கும். இது உடல் பருமனுக்கு வழிகொடுக்கும்.

நாள்பட்டு நாம் எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளும் நம் உடல் எடையை அதிகப்படுத்தும். உதாரணமாக, ஸ்டீராய்டு மாத்திரைகளையும் ஹார்மோன் மாத்திரைகளையும் சொல்லலாம். அதேபோல், நாள்பட்ட சில நோய்களும் உடல் பருமனுக்குக் காரணம் ஆகலாம். குறை தைராய்டு (Hypothyroidism), பிசிஓஎஸ் (PCOS), இதயச் செயலிழப்பு, சிறுநீரகச் செயலிழப்பு இதற்குச் சிறந்த உதாரணங்கள்.

உடல் பருமன் ஏற்படுத்தும் பாதிப்புகள்

* கொழுப்பு மிகைப்பு, கொலஸ்டிரால் கூடுதல்.
* இரண்டாம் வகை சர்க்கரை நோய்.
* உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம்.
* கொழுப்புக் கல்லீரல், பித்தப்பைக் கல்.
* உறக்கச் சுவாசத் தடை நோய் (Obstructive sleep apnea).
* அமிலப் பின்னொழுக்கு நோய் (GERD).
* முழங்கால் - மூட்டுவலி, முதுகு வலி.
* மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய்.
* குடல் இறக்கம், சிறுநீர் அடக்க முடியாமை.
* மலச்சிக்கல்.
* மலட்டுத்தன்மை.
* பி.சி.ஓ.டி. (PCOD).

(போற்றுவோம்)

- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; gganesan95@gmail.com

SCROLL FOR NEXT