நலம் வாழ

அதிகரிக்கும் புற்றுநோய்

மாயா

மோசமான வாழ்கைமுறை, உணவுப் பழக்கவழக்கங்களால் இந்திய இளைஞர்களிடம் புற்றுநோய் அதிகரித்துவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இளைஞர்களிடம் அதிகரிக்கும் புற்றுநோய்க்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் பதப்படுத்தப்பட்ட உணவு, ஆல்கஹால், உடல் பருமன், புகையிலை, மன அழுத்தம் ஆகியவை முதன்மைக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.

சுற்றுச்சூழல் மாசு: இந்திய நகரங்களில் பெரும்பாலானவை தீவிரமான சுற்றுச்சூழல் மாசால் பாதிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மாசும் புற்றுநோய்ப் பரவலுக்கு மற்றுமொரு முக்கியக் காரணமாக மாறியுள்ளது.

காற்று, நீர் மாசுபாட்டால் புற்றுநோய் உண்டாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

டெல்லியைத் தலைமையகமாகக் கொண்ட ‘முக்த் பாரத் அறக்கட்டளை’ புற்றுநோய் குறித்து ஆய்வு ஒன்றை அண்மையில் நடத்தியது. அதில் இந்தியாவில் 20% புற்றுநோய்கள் 40 வயதுக்கு உள்பட்டவர்களிடம் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களில் 60% ஆண்கள், 40% பெண்கள் எனவும் அந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.

எப்படித் தவிர்ப்பது? - ஆரோக்கியமான உணவுப் பழக்கம், எட்டு மணி நேர உறக்கம், தினசரி உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சிகள் மூலம் புற்றுநோய் ஏற்படுவதற்கான சுகாதார நெருக்கடியைக் குறைக்க முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

குறிப்பாகத் துரித உணவு, செயற்கை வண்ணங்கள் அதிகமாகச் சேர்க்கப்பட்ட உணவு, பல நாள்கள் பாதுகாத்து வைக்கப்பட்ட உணவு, கொழுப்பு மிகுந்த உணவு, புகையிலை, புகைப்பழக்கம், மது அருந்துதல் ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

SCROLL FOR NEXT