இந்திய கிரிக்கெட்டில் இன்று (10-02-1981): கவாஸ்கரைக் கோபப்படுத்திய ஆஸ்திரேலியர்கள்!

By மிது கார்த்தி

ஆஸ்திரேலியாவில் விளையாடும் எந்த கிரிக்கெட் அணியும் வீரர்கள், ரசிகர்களின் ‘ஸ்லெட்ஜிங்’ என்கிற வசைக்கு ஆளாக நேரிடுவது வழக்கமான ஒன்றுதான். ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விளையாடிய காலத்தில் அதுபோன்ற தருணங்களைப் பலமுறை சந்தித்திருக்கிறது. 1981ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் கேப்டன் சுனில் கவாஸ்கரைக் கோபப்படுத்திய ஒரு நிகழ்வும், அதற்கு கவாஸ்கரின் எதிர்வினையும் கிரிக்கெட் உலகில் முக்கியமான நிகழ்வாகப் பதிவாகியிருக்கின்றன.

1981ஆம் ஆண்டில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடைபெற்றது. இப்போட்டியின் மூன்றாவது இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் சுனில் கவாஸ்கரும் சேத்தன் சவுகானும் களமிறங்கிச் சிறப்பாக விளையாடினார்கள். அணியின் ஸ்கோர் 165-ஐ எட்டியபோது 70 ரன்களை எடுத்திருந்த கவாஸ்கருக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லி பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ கொடுக்கப்பட்டது.

கவாஸ்கருக்கு அவுட் கேட்கும் டென்னிஸ் லில்லி

இந்த அவுட்டை ஏற்க மறுத்த சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துக் களத்தில் நின்றார். ஆனால், டென்னிஸ் லில்லி, ‘இது அவுட்தான்’ என்று கவாஸ்கரிடம் வாக்குவாதம் செய்தார். அவுட் கொடுத்த அம்பயர், எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் இருந்ததால், அதிருப்தியில் களத்தை விட்டு கவாஸ்கர் வெளியேறினார். சிறிது தூரம் சென்றதும் மீண்டும் களத்துக்குள் திரும்பி வந்த கவாஸ்கர், மற்றொரு பேட்ஸ்மேன் சவுகானை அழைத்துகொண்டு பெவிலியன் நோக்கித் திரும்பினார். என்ன நடக்கிறது எனப் புரியாமல் அம்பயர்களும், ஆஸ்திரேலிய வீரர்களும் திகைத்து நின்றனர். பெவிலியனில் இந்திய அணி நிர்வாகத்தினர் கவாஸ்கரைச் சமாதானப்படுத்தினர். பின்னர் திலீப் வெங்சார்க்கர் களத்தில் இறங்க, சவுகானும் ஆட்டத்தைத் தொடர்ந்தார்.

அந்தக் காலகட்டத்தில் இந்த நிகழ்வு கிரிக்கெட் உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிகழ்வு குறித்து 40 ஆண்டுகள் கழித்து, கடந்த 2021இல் சுனில் கவாஸ்கர் நினைவுகூர்ந்தார். “அந்தப் போட்டியில் அம்பயர் எல்.பி.டபிள்யூ வழங்கியது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. உண்மையில் அது மிகவும் வருத்தமான நிகழ்வுதான். அப்போது ஒரு ஆஸ்திரேலிய வீரர் என்னைப் பார்த்து ‘கெட் அவுட்’ எனக் கூறினார். இதனால்தான் எனக்குக் கோபம் ஏற்பட்டது. அதனால், மறுமுனையில் ஆடிய சேத்தன் சவுகானையும் பெவிலியனுக்கு அழைத்துச் சென்றேன். அது எல்.பி.டபிள்யூவே கிடையாது. பந்து இன்சைட் எட்ஜ் ஆனது. என் அருகில் நின்ற ஃபீல்டருக்கு நன்றாகவே தெரியும். ஆனால், பந்துவீச்சாளர் டென்னிஸ் லில்லி என்னிடம் வந்து, ‘இது அவுட்தான்’ என்று வாதிட்டார். அதை நான் மறுத்தேன். அதன்பிறகே இந்தச் சர்ச்சை பூதாகரமானது” என கவாஸ்கர் மலரும் நினைவாகப் பதிவு செய்திருந்தார்.

அன்றைய நாளில் கிரிக்கெட் உலகைப் பரபரப்பாக்கிய அந்த நிகழ்வு, பிப்ரவரி 10ஆம் தேதி நடந்தேறியது என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்