இதற்குத்தானே காத்திருந்தாய் சிந்து?

ஒலிம்பிக்கில் ஒரே ஒரு பதக்கத்தையாவது பெற்று இந்திய அணி நாடு திரும்புமா என்ற விரக்தி கலந்த எதிர்பார்ப்பை, தன் வெள்ளிப் பதக்கத்தால் பிரகாசமாக்கிவிட்டார் பி.வி. சிந்து.

இந்த ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்று சாக் ஷி மாலிக் கௌரவம் காத்த நிலையில், இப்போது பி.வி. சிந்துவை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இரண்டு மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு பரிசுப் பணம் தந்திருக்கின்றன. ஹைதராபாத் மக்களோ தங்கள் மண்ணின் மகளை உற்சாகம் கரைபுரள வரவேற்கிறார்கள். முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி, சினிமா காமெடியன்கள்வரை எல்லோரும் ‘பி.வி. சிந்து, பி.வி. சிந்து’ என்ற மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

சிந்துவின் சாதனைகள்

இந்தக் கோலாகலத்தில் தவறொன்றுமில்லை. அதேநேரம், பி.வி. சிந்து நேற்று விளையாட ஆரம்பித்து இன்று ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனையா? சர்வதேச அளவில் அவர் வெல்லும் முதல் மதிப்புமிக்க பதக்கம் இதுதானா? இல்லவேயில்லை. சிந்துவின் சாதனைகள் 2013-லேயே தொடங்கிவிட்டன.

2013, 2014 உலகச் சாம்பியன் பேட்மின்டன் போட்டிகளில் அடுத்தடுத்து வெண்கலப் பதக்கம் வென்றவர் சிந்து. அவருடைய பேட்மின்டன் வாழ்க்கையில் 2014-ம் ஆண்டு மிக முக்கியமானது. உலக சாம்பியன் வெண்கலம் மட்டுமல்லாமல், ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம், காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி சார்பில் வெண்கலப் பதக்கங்களை அந்த ஆண்டு அவர் வென்றார். அப்போது அவருடைய வயதோ 19 தான்.

நம்பிக்கையின்மை

இவ்வளவுக்கும் உலக சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவில் சிந்து வென்றதுதான், இந்தியாவுக்கு முதல் மகளிர் பதக்கம். அதற்கு முன்னதாக ஒற்றையர் பிரிவில் 1983-ல் பிரகாஷ் படுகோன் மட்டுமே வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார்.

அதேபோல உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டிகளில் சிந்துவைத் தவிர, வேறு எந்த இந்தியரும் இரண்டு பதக்கங்களை வென்றதில்லை. இந்தியாவின் நம்பர் ஒன் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 2015-ம் ஆண்டில்தான் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஆனால், அதற்கு முன்னதாகவே இரண்டு பதக்கங்களை சிந்து வென்றுவிட்டார்.

இப்போது ஒலிம்பிக் பேட்மின்டன் இறுதிப் போட்டியை நாடே வைத்த கண் வாங்காமல் பார்த்ததுபோலவோ, அன்றைக்குப் பதக்கம் வென்று நாடு திரும்பியபோது ஆரவார வரவேற்போ சிந்துவுக்குக் கிடைக்கவில்லை.

ஏன், ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார்கள் என்று கணிக்கப்பட்ட பட்டியலில்கூடச் சாய்னா நேவாலின் பெயரே இடம்பெற்றிருந்தது. இறுதிப் போட்டிவரை சிந்து முன்னேறுவார் என்றுகூட யாரும் கணிக்க வில்லை. இதுதான் நம் நாட்டு வழக்கம், ஒரு வீரர்-வீராங்கனை மீது நாம் வைத்திருக்கும் மரியாதை.

கறுப்புக் குதிரை

அதிவேக ஸ்டிரோக்குகளும், தீவிரமான ரிட்டர்ன்களும் கலந்த உயரமான பேட்மின்டன் வீராங்கனையான சிந்து, கடந்த நான்கு ஆண்டுகளாக சர்வதேசக் களத்தில் கணிக்க முடியாத ஒரு கறுப்புக் குதிரையாகவே இருந்துவந்துள்ளார். தன்னைவிட தரவரிசையில் மேம்பட்ட வீராங்கனைகளைச் சிந்து தோற்கடிப்பது இது முதன்முறையல்ல.

2012-ம் ஆண்டில் சீனாவின் லீ ஸ்வாரி லண்டன் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்கி நாடு திரும்பியிருந்த நேரம், சீனாவிலேயே அவரைத் தோற்கடித்தார் சிந்து. தற்போதைய ஒலிம்பிக் காலிறுதியில் சிந்து தோற்கடித்த சீன வீராங்கனை வாங் யிஹானோ, லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். வாங் யிஹானுக்கு எதிரான வெற்றியை, தன் விளையாட்டு வாழ்க்கையில் மிகச் சிறந்ததாக சிந்து கருதுகிறார்.

தாமத அங்கீகாரம்

ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் சிந்து எதிர்கொண்ட கரோலினா மேரின், கடந்த ஆண்டின் உலக சாம்பியன், ஆல் இங்கிலாந்து சாம்பியன். கடந்த ஆண்டு ஆல் இங்கிலாந்து ஓபன், உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளில் சாய்னா நேவாலைத் தோற்கடித்தவர்தான் இந்தக் கரோலினா மேரின்.

அதேநேரம் சாய்னா நேவாலால் வீழ்த்த முடியாத கரோலினாவை, கடந்த ஆண்டு அக்டோபரில் சிந்து சாய்த்துள்ளார். இது எல்லாமே சிந்துவின் திறமைக்குச் சில எடுத்துக்காட்டுகள். ஆனால், இதையெல்லாம் மத்திய அரசோ ரசிகர்களோ கணக்கில் கொண்டதாகவே தெரியவில்லை.

இதுபோன்று பல முறை தன் திறமையை நிரூபித்தும்கூட, ஒலிம்பிக் பதக்கம் வென்ற பிறகுதான் பி.வி. சிந்துவை நமக்குத் தெரிகிறது, அவரை அங்கீகரிக்கிறோம் என்றால், நிச்சயமாகப் பிரச்சினை அவரிடம் இல்லை.

இப்படி உரிய நேரத்தில் அங்கீகரிக்கப்படாமல் ஒலிம்பிக் போன்ற பெரும் களங்களில் நம் வீரர், வீராங்கனைகள் சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

என்ன செய்ய வேண்டும்?

விளையாட்டை, விளையாட்டு வீரர்-வீராங்கனைகளை எப்படி நடத்த வேண்டும், சர்வதேச விளையாட்டுக் களத்தில் நாம் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் பி.வி. சிந்துவுக்குத் தாமதமாகக் கிடைத்துள்ள பாராட்டும் ஆதாரவும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஒரு வீரர்-வீராங்கனைக்கு கடைசி நேரத்தில் ஆதரவு தெரிவிப்பதால், சர்வதேசக் களத்தில் நம் நினைக்கும் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. அவர்களுடைய திறமை முகிழ ஆரம்பிக்கும் முதல் படியில் இருந்தே அரசின் ஆதரவும் ரசிகர்களான நம்முடைய ஊக்கமும் கிடைத்தால் மட்டுமே, எதிர்காலத் தங்கப் பதக்கக் கனவுகள் நிதர்சனமாகும்.

விளையாட்டை, விளையாட்டு வீரர்-வீராங்கனைகளை எப்படி நடத்த வேண்டும், சர்வதேச விளையாட்டுக் களத்தில் நாம் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் பி.வி. சிந்துவுக்குத் தாமதமாகக் கிடைத்துள்ள பாராட்டும் ஆதாரவும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஒரு வீரர்-வீராங்கனைக்கு கடைசி நேரத்தில் ஆதரவு தெரிவிப்பதால், சர்வதேசக் களத்தில் நம் நினைக்கும் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. அவர்களுடைய திறமை முகிழ ஆரம்பிக்கும் முதல் படியில் இருந்தே அரசின் ஆதரவும் ரசிகர்களான நம்முடைய ஊக்கமும் கிடைத்தால் மட்டுமே, எதிர்காலத் தங்கப் பதக்கக் கனவுகள் நிதர்சனமாகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE