மக்கள் மருத்துவர்

By ஷங்கர்ராமசுப்ரமணியன்

அலுவலகத்தில் இருந்து மிகவும் களைப்பாக வீடு திரும்பியதால் உடனடியாக உறங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் மகளுக்குக் காய்ச்சலாக இருப்பதால், உடனடியாக மருத்துவமனைக்குப் புறப்பட வேண்டும் என்று என் மனைவி அறிவுறுத்தினாள். சுகுமார் இருக்கிறாரா என்று கேட்டேன். அவருக்கு உடல் நலமில்லை என்று கூறி, வேறு டாக்டரிடம்தான் போக வேண்டும் என்றாள்.

அந்த கிளினிக் புத்தம் புதியது. பளபளப்பான கிரானைட் தளம். காத்திருக்கும் அறையின் இரு புறமும் தொலைக்காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன. மணி 8.45. முற்றிலும் குளிர்ப்பதனம் செய்யப்பட்ட அறை. சோட்டா பீம் படம் கட் அவுட்டாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஏழெட்டுத் தாய்மார்கள் குழந்தைகளுடன் அமர்ந்திருந்தார்கள். விற்பனைப் பிரதிநிதி ஒருவர், கையில் சில துண்டறிக்கைகளை வைத்துக்கொண்டு போலியோ மருந்துக்கு விளம்பரம் செய்துகொண்டிருந்தார். போலியோ தடுப்பு மருந்தை ஐந்து வயதுவரை எத்தகைய தவணைகளில் தர வேண்டும் என்றும், தராவிட்டால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்றும் படங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. கையில் குழந்தையுடன் இருக்கும் ஒரு அம்மா அச்சத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

பிரதிநிதி எங்களிடமும் வந்தார். எங்களிடம் போலியோ மருந்து பற்றி சொன்னார். இதுபோன்ற விஷயங்களை மருத்துவர்தானே சொல்லவேண்டும் என்று கேட்டேன். அவரிடம் பதில் இல்லை. அடுத்த பெண்மணியிடம் போய்விட்டார்.

சுவரில் வெவ்வேறு தடுப்பு மருந்துகள் பற்றிய விளம்பரங்கள் ஆரவாரமான வண்ணங்களில் ஒட்டப்பட்டிருந்தன. ஒரு விளம்பரம் என்னைக் கவர்ந்திழுந்தது. ஒரு குட்டிப் பையன் முகத்தில் அம்மையுடன் குற்றவாளி போல நிற்க, அவனது கையில் உள்ள சிலேட்டில் ‘குற்றம்: சின்னம்மை, தண்டனை: நான்கு வாரங்கள் வீட்டில் தனியாக இருக்க வேண்டும்’ என்று எழுதப்பட்டிருந்தது. இந்த அநியாய தண்டனையைத் தடுக்க சின்னம்மை தடுப்பூசியை உடனடியாக மருத்துவரிடம் கேட்டுப் போட்டுக்கொள்ளுங்கள் என்றும் சொல்லியிருந்தது.

விளம்பரத்தின் தொனியும், அதை எந்த சங்கடமும் இன்றி க்ளினிக்கில் ஒட்டிவைத்திருக்கும் மருத்துவரின் உணர்வின்மையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சின்னம்மை என்பது தவிர்க்க வேண்டிய நோயா? அத்தனை ஆபத்தானதா? அப்படியே வந்தாலும் குழந்தை ஏன் தனியாக இருக்க வேண்டும்? பெற்றோரோ, உறவினரோ உடன் இருக்க முடியாத அளவு குழந்தைகள் அநாதைகளாகிவிட்டனரா? நோய் என்பது ஒரு குற்றமா? தடுப்பு மருந்து வாங்க முடியாத ஏழைகள் குற்றவாளிகளா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. என் மனைவியிடம் இதுபோன்ற விளம்பரங்களையெல்லாம் சகித்துக்கொள்ளப் பழகிவிட்டோமே என்று வருத்தப்பட்டேன்.

மருத்துவர் சுகுமார் அப்போது நினைவுக்கு வந்தார்.

என் மகளுக்கு உடல்நலமில்லாமல் போகும்போதும், எங்கள் நோய்களுக்கும் பெருங்குடி ரயில் நிலையத்திற்கு அருகே குடியிருக்கும் அவர்தான் சிகிச்சை செய்துவந்தார். வேளச்சேரி-தரமணி சாலையில் குடியிருக்கும் குடிசைப் பகுதி மக்களுக்கும் அவர்தான் மருத்துவர். எந்த ஆடம்பரமும் விளம்பரங்களும் விற்பனைப் பிரதிநிதிகளும் இல்லாத அவரது வீட்டின் கார் ஷெட் போன்ற முன்பகுதியில் திரைமறைப்பில் தான் அவர் அவர் மருத்துவம் பார்த்துவந்தார். அவரிடம் மாத்திரை மற்றும் ஊசியோடு சேர்த்து 50 ரூபாய்தான் அதிகபட்ச கட்டணம். எனக்கு திருமணமான காலத்தில் 30 ரூபாய் பீஸ் வாங்கினார். யாரையும் நோய் குறித்து அச்சம்கொள்ள வைக்காமல் சிரித்த முகத்துடன் அவரவர் குடும்ப நலனை விசாரித்து மாத்திரை மருந்து கொடுத்தனுப்புவார். பணம் இல்லாமல் சிலர் சிகிச்சை பெற்றுப் போவதையும் பார்த்திருக்கிறேன். குடி காரணமாக வயிற்று வலியோடு அவதிப்பட்டு வருபவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுவது அவசியமாக இருக்கும். அவர்கள் கூலி மற்றும் துப்புரவு வேலை செய்பவர்கள். வீட்டின் முன்பகுதி முற்றத்திலேயே ஒரு மரக்கட்டிலில் படுக்கவைத்து அவர்களுக்கு டிரிப்ஸ் ஏற்றுவார். நோய் குறித்து அச்சம் கொள்ள வைக்காமல் சிரித்த முகத்துடன் அவரவர் நலனை விசாரித்து மாத்திரை மருந்து கொடுத்தனுப்புவார்.

கடந்த ஓராண்டாக நீரிழிவு நோயால் அவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டது. நாங்கள் சிகிச்சைக்குப் போகும்போது, அவரது உடல்நலன் குறித்தும் நாங்கள் விசாரிப்போம். சில நாட்களில் எழ முடியாமல் எழுந்து வந்துதான், காத்திருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்தார். உடன் ஒரு உதவியாளரையும் சேர்த்துக் கொண்டிருந்தார். சுகுமார் மருத்துவரை விட்டால் அவர்களுக்கு வேளச்சேரியில் எளிமையாக மருத்துவம் செய்ய இப்போது ஆளே கிடையாது.

இந்தக் கட்டுரையை எழுதும்போது சுகுமார் மருத்துவர் உயிருடன் இல்லை. அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நானும் என் மனைவியும் அவர் வீட்டுக்குப் போனோம். அங்கே இருந்த கூட்டத்தைக் காண ஆச்சரியமாக இருந்தது. மருத்துவரின் உறவினர்களை விட அவர் சிகிச்சை அளித்த ஏழைகள்தான், சொந்தத் தந்தையின் மரணத்தைப் போல சொந்த இழப்பைப் போல அழுது அரற்றிக்கொண்டிருந்தனர். ஒரு புறம் நெகிழ்வும், இத்தனை நேசத்தை அவர் சம்பாதித்திருப்பது தொடர்பான ஆச்சரியமும் ஏற்பட்டது.

இவரைப் போன்றவர்கள்தான் இன்று அருகிவருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE