பிரேக் அப் பாடம்: பிரேக்-அப் ஆன நண்பர்களிடம் சொல்லக் கூடாதவை

காதலில் பிரிவைக் கடப்பது எப்போதும் கடினமானதாகவே இருக்கும். நீங்களாகவே உங்கள் காதலரைப் பிரிந்தாலும் சரி, உங்கள் காதலர் உங்களைப் பிரிந்தாலும் சரி, அந்தக் காதல் பிரிவு கடினமானதாகவே இருக்கும்.

இந்தப் பிரிவுக்குப் பிறகு, பலர் காதல் எல்லாம் நமக்கு ஒத்துவராது, இனி மகிழ்ச்சியை எல்லாம் மீண்டும் நாம் உணரவே மாட்டோம் என்ற முடிவுக்கு வந்திருப்பார்கள். இந்தக் காதல் பிரிவிலிருந்து மீண்டு வந்தவர்களுக்குத்தான் அது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும்.

ஆனால், இந்தக் காதல் பிரிவுத் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் அது கடினமானதாகவே இருக்கும்.

உங்கள் உற்ற தோழனோ தோழியோ பிரிவுத் துயரத்தைக் கடக்க முயலும்போது, உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஒரு நல்ல தோழனாக, தோழியாக, அவர்களை எப்படி இந்தப் பிரிவுத் துயரத்திலிருந்து மீட்கலாம் என்றுதான் யோசிப்பீர்கள்.

ஆனால், இந்த நேரத்தில் அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காக நீங்கள் சொல்லும் சில விஷயங்கள் அவர்களை மேலும் காயப்படுத்த அதிகமான வாய்ப்பு உள்ளது. காதல் பிரிவுத் துயரத்தில் வாடும் நண்பர்களிடம் சொல்லக் கூடாத சில வாக்கியங்கள்…

# ‘உனக்கு நிச்சம் வேறு யாராவது கிடைப்பார்கள்’ - இந்த வாக்கியத்தை உறுதியாக  ‘பிரேக்-அப்’-பிலிருந்து வெளியே வர முயன்றுகொண்டிருக்கும் உங்கள் நண்பர்களிடம் சொல்லவே சொல்லாதீர்கள்.

இது  ஏற்கெனவே அவருக்கு உரியவராக இருந்த ஒருவரை அவர் இழந்துவிட்டதை நீங்கள் நினைவுபடுத்துவதாகவே இருக்கும். இது கூடுதல் வலியைத்தான் அவர்களுக்குக் கொடுக்கும்.

# ‘நீதான் எல்லா வகையிலும் சிறப்பாக இருக்கிறாய்’ – ஏற்கெனவே காதல் பிரிவால் தன்னம்பிக்கை இல்லாமல் கஷ்டப்படும் அவர்களை, இந்த மாதிரியான ஒப்பீடுகள் உங்கள் வார்த்தைகளைச் சந்தேகப்படவே வைக்கும்.

# ‘இவ்வளவு கஷ்டப்படும் நீ, உன் காதலர் சொல்வதைக் கேட்டிருக்கலாம்’ – இந்த ஆலோசனையை எந்தக் காரணத்தைக் கொண்டும் காதல் பிரிவில் வாடும் உங்கள் நண்பர்களுக்கு வழங்கக் கூடாது. ஏனென்றால், உங்கள் நண்பர்களை அவர்களின்  மதிப்பீடுகளில் சமரசம் செய்துகொள்ளச் சொல்வது சரியானதாக இருக்க முடியாது.

காதல் உறவுகளைப் பொறுத்தவரை, சரி, தவறுக்கு அப்பாற்பட்டுத் தனிமனிதரின் நம்பிக்கைகள் சார்ந்து அமைவதுதான் சரியாக இருக்க முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE