இளமை புதுமை

சிலர் அழுவார், சிலர் சிரிப்பார்! | வாழ்க்கையின் சீக்ரெட் ரெசிபி 22

ஆர்.ஜே. ஆனந்தி

முதல் முதலில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று முயன்றது, என்னுடைய எட்டாம் வயதில்தான். அந்தச் சின்ன வயதில் வீட்டைவிட்டு வெளியேறும் அளவுக்கு என்ன கொடுமை நிகழ்ந்திருக்கும் என்றுதானே யோசிக்கிறீர்கள்? நீங்கள் கனவிலும்கூட எதிர்பார்க்க முடியாத கொடுமை அது! ஆனால், நான்கைந்து தெருக்களைத் தாண்டியதும் கோபம் தணிந்தோ அல்லது பயந்தோ வீடு திரும்பினேன். நிம்மதியாகச் சுண்டல் சாப்பிட்டுவிட்டு, உறங்கும் அளவுக்குத்தான் அதனுடைய பாதிப்பு இருந்தது.

நவராத்திரியின்போது எங்கள் வீட்டில் கொலு வைப்பது வழக்கம். ஒவ்வோர் ஆண்டும் நவராத்திரி தொடங்கும் முன்பே வீட்டில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிவிடும். என் கொள்ளுப் பாட்டி கொடுத்த பொம்மைகளில் தொடங்கி மிகப் பழைய பொம்மைகள், ஆண்டுகளுக்கு ஒரு முறை பரணிலிருந்து கீழே வரும்.

கொள்ளுப் பாட்டியின் வழிகாட்டுதலின்படி அந்த ஆண்டு, பழைய பொம்மைகளுக்கு வண்ணம் பூச நானும் என் அக்காவும் தூரிகைகளுடன் உற்சாகமாக இருந்தோம். அம்மன், முருகன், செட்டியார் பொம்மைகள் என எல்லாப் பொம்மைகளின் தோல் நிறமும் ஒன்றுபோல் எங்களுக்குப் பிடித்த பிங்க் நிறத்துக்கு மாற்றப்பட்டது.

நொறுங்கிய மனம்: ஒரே நேரத்தில் அந்த பெயிண்ட் மட்டும் தீர்ந்துவிடவே, ஓர் அம்மன் பொம்மைக்கு மட்டும் பிங்க் வண்ணத்துடன் வெள்ளையைச் சேர்த்துத் தாடையில் மட்டும் சற்று வெளிறிப்போன பிங்க்கைத் தீட்டினோம். அதைத் தவிர, கண்ணில் இருக்க வேண்டிய கறுப்பு சற்று இறங்கி கன்னம்வரை வந்ததைப் பற்றியெல்லாம் நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை.

கடவுள்களும் எங்களை மன்னித்துவிட்டார்கள் போலும்! கொலுவில் அமர பொம்மைகள் தயார்நிலையில் இருந்தன. எப்போதையும்விட இந்த முறை கொலு வைப்பதில் எங்களுக்குக் கூடுதல் உற்சாகம்! எல்லாப் பழைய பொம்மைகளுக்கும் புதிய வண்ணம் தீட்டிய கலைஞர்கள் நாங்கள் அல்லவா! எங்கள் கலைப் படைப்புக் கொலுப் படியை அலங்கரிக்கும் தருணத்துக்காகக் காத்திருந்தோம்.

வழக்கம்போல கொலுப் படியை அம்மா, அப்பா, பாட்டி என அனைவரும் தயார் செய்துவிட்டு, பொம்மைகளை அடுக்க ஆயத்தமானார்கள். கலைஞர்களான நானும் அக்காவும் எந்தப் பொம்மையை எங்கே வைக்க வேண்டும் என்கிற முக்கிய முடிவுகளை எடுக்கக் காத்திருந்தோம். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.

ஏதோவொரு பொம்மையை ஏதோவொரு படியில் வைக்க வேண்டும் என்று நான் கூற, அந்த இடத்தில் என் அக்கா சொன்ன பொம்மையை அம்மா வைக்க, அவ்வளவுதான்! எட்டு வயது ஆனந்தியின் மனம் சில்லுசில்லாக நொறுங்கியது. கண்ணிலிருந்து பொலபொல வெனக் கண்ணீர் பெருக, மனம் நொறுங்கிவிட்டேன். நல்ல நேரத்துக்குள் கொலு வைத்து முடிக்க வேண்டும் என்பதால், அனைவரும் அதில் கவனத்தில் இருந்தபோது, வீட்டைவிட்டு வெளியேற முடிவெடுத்தேன்.

வெளியேறிய தருணம்: நான் சொன்ன இடத்தில் பொம்மையை வைக்க முடியாத குடும்பத்தில் எப்படி வாழ்வது? என் மீது உண்மையான பாசம் இருந்திருந்தால்,அப்படிச் செய்திருப்பார்களா? மிஞ்சிப்போனால் என்ன கேட்டிருப்பேன்? ராதையோடு முருகனைச் சேர்த்து வைக்கச் சொல்லியிருப்பேன்! அந்தப் பிஞ்சு மனதுக்கு என்ன தெரிந்திருக்கும்? ஒரு கலைஞரின் மனதைப் புண்படுத்திவிட்டார்கள். குடுகுடுவெனப் படியிறங்கினேன். தெருவெங்கும் குழந்தைகளின் கீச்சுக்குரல்களும் சிரிப்புச் சத்தங்களும், மாலை நேரப் பூஜையும், சாமி பாட்டுமாக ஒலித்துக்கொண்டி ருந்தன.

ஆனால், கண்ணில் நீர்வடிய நான் விளையாடிய தெருக்களைத் தாண்டி நடந்துகொண்டே இருந்தேன். எங்கே போவதென்று தெரியவில்லை. சூரியன் என்னைவிட வேகமாக ஓட, மெதுவாக இருள் சூழ ஆரம்பித்தது. தெரு விளக்குகள் என் கண்ணீரை மின்னச் செய்தன. இன்னும் கொஞ்சம் நேரத்தில் வீட்டில் சுவையான தோசை கிடைக்கும். அது இன்னும் மனதை வருத்தியது. சாப்பாட்டுக்கு எங்கே போவேன்? அப்பாவுக்குத் தெரிந்தால் என்னாவது? பயமும் பசியும் பற்றிக்கொண்டன.

சட்டென வீடு திரும்பினேன். என்னைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்களோ என்கிற பயத்தோடு வீட்டுக்குள் நுழைந்தபோது, பூஜை முடிந்திருந்தது. நான் வீட்டைவிட்டு ஓட முயன்றதே யாருக்கும் தெரியவில்லை. கடவுளுக்குப் படைத்திருந்த சுண்டல் சுண்டி இழுத்தது. முகத்தைக் கழுவிவிட்டு, சுண்டலைத் தின்று, அந்த ஆண்டு நவராத்திரியின் முதல் நாளை விவரம் அறியா நினைவுகளோடு தொடங்கினேன்.

சிரிப்பும் அழுகையும்: இந்த ஆண்டு நவராத்திரி தொடங்கி மூன்று நாட்கள் கழித்தே வீட்டுக்குப் போயிருந்தேன். கொள்ளுப் பாட்டியும் அப்பாவும் இல்லை. ஆனால், என் தோளைத் தாண்டி வளர்ந்திருக்கும் என் அக்கா மகள் என்னுடன் சேர்ந்து, கொலுவை அலங்கரிக்க உதவினாள். விளக்குகளை அங்குமிங்குமாக வைத்து அழகு பார்த்துக்கொண்டிருந்தோம். சட்டென அவளின் சிரிப்புச் சத்தம் அறையை நிறைத்தது. “இருந்தாலும் இந்த அம்மனுக்குத் தாடி வரைஞ்சிருக்க வேண்டாம்” என்று சிரித்தாள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு பிங்க் பெயிண்ட் காலியானதால் கொஞ்சம் வெள்ளை கலந்து வண்ணம் தீட்டினோமே? அதை இன்று பார்க்க தாடி வளர்த்த அம்மன்போல் இருந்ததால்தான், அந்தச் சிரிப்பு! எவ்வளவு நவராத்திரி வந்தாலும், அன்று நான் அழுத நவராத்திரிதான் நினைவில் ஆழமாக இருக்கிறது. அழுததை நினைத்துச் சிரிப்பதும், சிரித்ததை நினைத்து அழுவதும் வாழ்க்கையின் சுவைதானே!

(ரெசிபி வரும்)

- ananthi.iyappa@live.in

SCROLL FOR NEXT