இளமை புதுமை

எங்கே இருக்கிறது நம் வாழ்க்கை? | வாழ்க்கையின் சீக்ரெட் ரெசிபி 14

ஆர்.ஜே. ஆனந்தி

காய்கறிக் கடைகளில் காய்களை உற்று உற்றுப் பார்த்து நல்ல காய்களைத் தேடி எடுப்பவர் களைக் கவனித்தது உண்டா? அவ்வாறு செய்பவர்களை நான் ரசித்திருக்கிறேன். அதைப் பார்த்துக் கற்றுக்கொள்ள முயன்றதும் உண்டு. தானும், தன்னுடைய குடும்பத்தினரும் சத்தான உணவை உண்ண வேண்டும் என்பதில் அவர்கள் காட்டும் ஆர்வம் மிக முக்கியமானது.

எல்லா உணவு வகைகளும் எல்லாருக்கும் ஒத்துப்போவதில்லை. என் தோழனுக்குப் பருப்பு சாப்பிட்டால் வயிறு உப்புசம் ஆகுமென்று, அவன் அம்மா பருப்பு இல்லாமல்தான் சமைப்பார்.

எனக்கும் அக்காவுக்கும் கத்திரிக்காய் சேராது என்று சிறு வயதில் சொன்னதிலிருந்து, கத்திரிக்காயைச் சமைக்கும்போது எங்களுக்கென்று தனியாக ஏதேனும் சமைத்துத் தருவார். உடலுக்கு உணவு ஏதும் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், அதை நம் உடலிலிருந்து வெளிப்படும் அறிகுறிகள் தெரியப்படுத்திவிடும்.

எனவே, அதைத் தவிர்ப்பதில் தனி கவனம் செலுத்துகிறோம் அல்லவா? ஆனால், அதே கவனத்தை மனதுக்கும் மூளைக்கும் நாம் செலுத்துகிறோமா? மூளைக்கும் மனதுக்கும் கேடு விளைவிக்கும் விஷயங்களைத் தவிர்த்தால்தானே வாழ்க்கை ருசிக்கும்?

கண்ணாடியும் சிந்தனையும்: கண்ணாடிகளைக் கண்டறிவதற்கு முன்பு, ‘பாகுபலி’ படத்தில் வரும் தமன்னாவைப் போல, நம் முன்னோர்களும் தங்கள் முகத்தை நீரிலும் பிரதிபலிக்கக்கூடிய பிற இடங்களிலும்தான் காண முடிந்திருக்கும்.

தன்னுடைய அடையாளம் என்பது தன்னுடைய குணங்கள், திறன்கள், உடனிருந்த மக்களாக இருந்திருக்கக்கூடும். ஆனால், கண்ணாடிகள் கண்டறியப்பட்ட பிறகு நான் என்கிற சொல்லுக்குத் தன்னுடைய தோற்றம் என்கிற ஒன்றும் முக்கியம் அடைந்திருக்க வேண்டும். அனைவருடைய கைகளிலும் திறன்பேசி வந்த பிறகு, எப்பொழுது வேண்டுமானாலும் நம் முகத்தைப் பார்த்துக்கொள்ள முடிகிறது. அது, நல்ல விஷயம்தானே என்று தோன்றும்.

ஆனால், நம் முகத்தை அடிக்கடிப் பார்க்கும்போது நமக்கு மகிழ்ச்சி மட்டுமே உண்டாவதில்லை. அதிலிருக்கும் குறைகளும் தெளிவாகத் தெரிகின்றன. அடிக்கடி குறைகளைப் பார்க்கும்போது, அது நம் மனதைப் பாதிப்பதோடு நமக்கு அதிருப்தியையும் ஏற்படுத்துகிறது.

அதிருப்தியைச் சரிசெய்ய முயலும் வகையில் ஒரு பெரிய வர்த்தக உலகத்தையே உருவாக்கியிருக்கிறோம். சருமப் பராமரிப்புக்காக எத்தனை அழகு சாதனப் பொருட்கள்? ‘நைட் ஸ்கின் கேர் ரொட்டீன்’ இணையதளத்தில் எத்தனை வீடியோக்கள் உள்ளன. சருமத்தைப் பராமரிப்பது தவறில்லை.

ஆனால், மனநலமும் உடல்நலமும் சீராக இருப்பதும் சருமப் பராமரிப்பில் முக்கியம் அல்லவா? நாம் எங்கு அதிக கவனம் செலுத்துகிறோமோ, அங்குதான் அதிக ஆற்றலையும் செலவிடுகிறோம். அதிகமாகக் கண்ணாடியிலோ அல்லது கேமராவிலோ நம்மைக் காணும்பட்சத்தில் நம் சிந்தனைகளும் நம்மைப் பற்றியேதான் இருக்கும். நம் மகிழ்ச்சியும் கவலையும் நம்மைச் சுற்றிதான் இருக்கும். நாம் பார்க்காத, கவனிக்காத ஒன்றைப் பற்றிய கவலையும் அக்கறையும் வருவதற்கு வாய்ப்புகள் குறைவே.

சுருங்கிய உணர்வுகள்: மனிதர்கள் அதிக அளவு தங்கள் முகத்தைக் காணும் சமூகமாக மாறிவிட்டனர். அதனால், சமூகம் சார்ந்த சிந்தனைகளைவிட நம்மைப் பற்றிய சிந்தனைகளே நமக்கு அதிகம் உண்டாகின்றன. நம்மைப் பற்றிச் சிந்திக்கும் போதும் அதிக அளவில் நம் ஆழ்மனதைப் பற்றியும் நம் உணர்வுகளைப் பற்றியும் சிந்திப்பது குறைவே.

ஊரில் ஒருவர் வீட்டில் விசேஷம் என்றால் ஊரே கூடிய காலம் போய், விசேஷத்தைப் பாராட்டி ஒரு போஸ்ட், பிடித்த நடிகரின் ஒளிப்படத்துக்கு ஒரு லைக், காசாவில் தவிக்கும் குழந்தைகள் பற்றிய பதிவை ஷேர் செய்வது என்று ஒவ்வொரு நொடியும் நம் கவனத்தைப் பல்வேறு விதமான விஷயங்களில் செலுத்துகிறோம்.

நாம் உண்மையாக உணர்ந்த உணர்வுதான் என்ன? மகிழ்ச்சியா, வருத்தமா? எப்படி எல்லா உணர்வுகளையும் ஒரு நொடியில் நாம் கடக்க முடியும்? ஒவ்வோர் உணர்வையும் முழுமையாக உணர்வது நம் வாழ்க்கைக்கு முக்கியமில்லையா? ‘ஸ்கின் கேர் ரொட்டீன்’ போல, நம் மனதையும் பராமரிப்பது அவசியம் என்றால், ஒவ்வொரு நாளின் முடிவிலும் நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றி நடந்ததைப் பற்றியும் சிந்திப்பதும் அவசியமான ஒன்றுதானே?

எதைச் சிந்திக்கிறோம்? - என் வாழ்க்கையில் எந்தவொரு கடினமான காலம் வந்தாலும், நான் நினைவில் வைத்துக்கொள்வது ஒரு சிறுமியைத்தான். இரண்டாம் உலகப் போரின்போது யூதர்களை அழிக்க ஹிட்லர் உத்தரவிட்டபோது, ஆன் பிராங்க் என்கிற சிறுமி தன் குடும்பத்தோடு ஒரு மறைவிடத்தில் இரண்டு ஆண்டுகளாக வசித்துவந்தார்.

அந்தச் சிறுவயதில், விரிந்து கிடக்கும் இவ்வுலகைக் காண வழியில்லாமல் அவளது பால்யம் பறிபோனபோது, தனக்குத் தோன்றும் எண்ணங்களை எல்லாம் ஒரு நாட்குறிப்பில் எழுதிவந்தார். குண்டுச் சத்தமே கேட்டாலும், ஐயோ அம்மாவென்று அலறினால் கண்டறிந்துவிடுவார்கள் என்பதால், எதையுமே வெளிக்காட்ட முடியாத தருணங்களில், அவள் தனது என்ன ஓட்டங்களை ஒருங்கிணைக்க பயன்படுத்தியது அந்த நாட்குறிப்பைதான்.

இப்போது நம் சிந்தனைகளை நொடிப்பொழுதில் உலகிற்கே பகிர்ந்துகொள்ள முடியும் என்றாலும், நம் சிந்தனைகளை வலுப்படுத்தச் செலவிடும் நேரம்தான் குறைந்துவிட்டது. நாம் எதைப் பற்றிச் சிந்திக்கிறோமோ, அதில்தான் அதிகக் கவனம் செலுத்துவோம்.

எதில் அதிகமாகக் கவனம் செலுத்துகிறோமோ அதற்குதான் அதிக நேரமும் சக்தியும் செலவிடுவோம். அதுவே நம் வாழ்க்கையின் சுவையைத் தீர்மானிக்கிறது. உங்கள் வாழ்க்கையின் சுவை உங்கள் கையில் மட்டுமல்ல, உங்கள் கவனத்தில்தான் இருக்கிறது.

(ரெசிபி வரும்)

- ananthi.iyappa@live.in

SCROLL FOR NEXT