மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டிரா செய்து போட்டியை முடித்துக்கொள்ள முன்வந்ததும், ரவீந்திர ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் சதங்கள் விளாசும்வரை இங்கிலாந்து வீரர்களைப் பந்து வீச வைத்ததும்தான் கிரிக்கெட் உலகில் ஹாட் டாக்.
டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை கடைசி நாளில் முழுமையாக விளையாடியும் யாருக்கும் வெற்றி வாய்ப்பில்லை என்று தெரிய வருகிறபோது இரண்டு அணிகளின் கேப்டன்களும் போட்டியை டிராவில் முடித்துக்கொள்ள முடிவு செய்வதுண்டு.
தோல்வி அடையும் நிலையில் இருந்த இந்திய அணியைக் காப்பாற்றிய ரவீந்திர ஜடேஜா 89 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 80 ரன்னிலும் இருந்தபோது, 15 ஓவர்கள் மீதம் இருக்கையில் போட்டியை முடித்துக்கொள்ள கைகுலுக்க இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முன்வந்தார். ஆனால், அதை ஏற்காத இந்திய வீரர்கள், பந்து வீசும்படி பணித்தனர். விதிமுறைப்படி கடைசி 15 ஓவர்கள், கடைசி ஒரு மணி நேரம் இருக்கும்போது விளையாட்டை நிறுத்திக்கொள்ள முடியும்.
அது இங்கிலாந்து அணியினருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. ஏற்கெனவே வெற்றி பெற முடியாமல் போய்விட்டதே என்கிற விரக்தியில் இருந்த இங்கிலாந்து வீரர்கள், சதத்துக்காக விளையாடுகிறாயா என்று பகுதி நேர பந்துவீச்சாளரான ஹாரி புரூக்கைப் பந்து வீச வைத்தனர்.
அவரும் சிறு பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடுவதுபோல பந்துவீசினார். அதோடு ‘ஸ்லெட்ஜிங்’ எனப்படும் வசைபாடலிலும் இங்கிலாந்து வீரர்கள் ஈடுபட்டனர். அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத ஜடேஜாவும் சுந்தரும் சதம் அடித்துக் கொண்டாடினர். கூடவே இந்திய ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்தனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசுவது என்பது வீரருக்கு மதிப்புக்குரிய விஷயம். டிராவில் முடிக்க இங்கிலாந்து விரும்பியும் அதை ஏற்காமல் இந்திய வீரர்கள் விளையாடி சதம் அடித்தததைத் தவறு என்று சொல்ல முடியாது. முன்கூட்டிய டிரா முடிவை இரு அணி கேப்டன்களின் ஒருமித்த முடிவின் அடிப்படையில்தான் எடுக்க முடியும். வானிலை போன்ற அம்சங்களில் நடுவர் முடிவு செய்வது உண்டு. ஆனால், ஓல்டு டிராபோர்டு போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் அந்த நடைமுறையை மறந்தது ஆச்சரியம்தான்.
இந்த விவகாரம் பற்றி ஆதரவு - எதிர்ப்பு என விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ’இந்திய வீரர்கள் சதம் அடிக்கக் கூடாது என்று இங்கிலாந்து வீரர்கள் விரும்பியிருந்தால், அவர்களை அவுட் ஆக்கியிருக்க வேண்டும். அதை விடுத்து சதம் அடிப்பதை குறுக்குவழியில் தடுக்க நினைத்திருக்கக் கூடாது’ என்று எழுந்த குரல்கள் கிரிக்கெட்டின் மகத்துவத்தை உணர்த்துகிறது. இங்கிலாந்து வீரர்களின் செயல்பாடு ‘ஜென்டில்மேன்’ விளையாட்டு என்று சொல்லப்படும் கிரிக்கெட்டில் மற்றும் ஒரு கரும்புள்ளி.
இந்த டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வலம்வந்தது. அது, சச்சின் டெண்டுல்கர் 1990இல் 17 வயதாக இருந்தபோது ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் சதம் விளாசியதுதான், இந்தியர் ஒருவர் அடித்த சதம் என்கிற செய்திதான் அது.
ஆம், 1990க்குப் பிறகு 2011 வரை அங்கு விளையாடிய சச்சினேகூட சதம் விளாசவில்லை என்பதும் ஆச்சரியமான உண்மை. ஆனால், 2025இல் கேப்டன் சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என மூன்று பேர் அந்த மைதானத்தில் சதங்களை விளாசி, பழைய வரலாற்றை மாற்றி எழுதிவிட்டனர்.
இங்கு தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரைப் பற்றிக் குறிப்பிட்டே வேண்டும். ஓல்டு டிராபோர்டு போட்டியை அவர் காப்பாற்றியதுபோல 2020இல் பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தோற்கடிக்க முடியாத ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை இந்தியா பெற்றதில் வாஷிங்டன் சுந்தர் துருப்புச்சீட்டாக இருந்தவர் என்கிற பெருமைக்குரியவர். அணிக்குள் போவதும் வருவதுமாக இருக்கும் சுந்தர், அணிக்குள் நங்கூரமிடும் வகையில் விளையாடி, தன் திறமையை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.