என் தோழியின் குழந்தைத் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தது. அவன் தூங்குவதை ரசிக்கும் என் தோழியைப் பார்த்து நான் ரசித்துக் கொண்டிருந்தபோது, அவர் தாயாகும் முன், மனைவியாகும் முன், என் தோழியாகும் முன், அவர் எனக்கு அந்நியமாக இருந்த நாட்கள் கண் முன்னே தோன்றி மறைந்தன. முதல்முதலில் நான் அவரைப் பார்த்தது, பள்ளிச்சீருடையில்தான்.
எந்தப் பூவும் சொந்தம் கொண்டாடாத வண்ணத்துப்பூச்சியைப் போல் அவர் என் பள்ளியில் சிரித்து நடமாடிக்கொண்டிருந்த நாட்கள் அவை. அப்போது அவர் அவராக மட்டுமே இருந்தார். முதலில் அறிமுகமானது அவர் பெயர். பின்பு மெல்லமெல்ல என் தோழியானார்.
நம் வாழக்கையில் அந்நியர்களாக வந்து அந்நியோன்யமாகும் அளவுக்கு அணுக்கமாய் மாறும் மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள். இவர்களைப் போலவே அந்நியர்களாக இருந்து நம் வாழ்க்கைக்குச் சுவை சேர்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அக்காவின் கானக் குரல்: அம்மா, அப்பாவுக்குக் காதல் திருமணம். காதலர்களுக்குக் கோட்டை கட்டாவிட்டாலும், காதலர்களுக்காக என்றென்றும் எங்கள் எளிய வீட்டின் கதவுகள் திறந்தே இருந்திருக்கின்றன. நண்பர்கள், உறவினர்கள் என அனைவரின் காதல் கதையிலும் உதவும் நண்பர்களாக இருந்தவர்கள், என் பெற்றோர். இவ்வளவு ஏன்? என் அப்பாவின் மறைவுக்குப் பிறகும்கூட, அதை என் அம்மா தொடர்கிறார். தாயாக உருவெடுத்திருந்த என் தோழியைப் பற்றிச் சொன்னேன், இல்லையா? அவருடைய காதல் திருமணத்துக்கும் நான் ஊரில் இல்லாததால் என் அம்மாவும் பாட்டியும்தான் உதவிசெய்தார்கள்.
நான் சிறுமியாக இருந்தபோது, தனக்குப் பெற்றோர், உறவினர் யாரும் இல்லையென்பதாலும், என் மாமாவின் நண்பரைக் காதல் திருமணம் செய்யவதாக இருந்ததாலும், திருமணத்துக்கு சில வாரங்கள் முன்பாக ஓர் அக்கா எங்கள் வீட்டில்தான் தங்கியிருந்தார்.
அவருடைய பாசமான பேச்சும், எங்கள் வீட்டை அவர் அலங்கரித்த விதமும், இனிமையான பாடலும் என்னைக் கவர்ந்தன. அவர் பெயர் சோபியா என வைத்துக்கொள்வோம். ஒரு நாள், ‘கற்பூர பொம்மை ஒன்று’ பாடலைப் பாடி டேப்ரெக்கார்டரில் பதிவு செய்து வைத்திருந்தார்.
அந்தப் பாட்டை முதலில் நான் அவர் குரலில்தான் கேட்டேன். பிறகு அசல் பாட்டைக் கேட்டபோது, அது பொருந்தாத குரல்போலத் தோன்றியது. அம்மா சொல்வதைக் கேட்க வேண்டுமென்றும், ‘தாய் போல யார் வந்தாலுமே, உன் தாயைப் போலே அது ஆகாது’ என்று அந்தப் பாட்டில் வரும் வரிகளை அவர் பாடியதைக் கேட்டு, அம்மா சொல்லைத் தட்டாத பிள்ளையாகச் சில காலம் வாழ்ந்துவந்தேன்.
அந்நியமான அக்கா: சோபியா அக்காவுக்குத் திருமணம் நடந்த நாள் அன்று என் அம்மாவும் அப்பாவும் பெற்றோர் பொறுப்பிலிருந்த போது, எனக்குக் கட்டுப்படுத்த முடியாத அழுகை. திருமணம் நடந்த பேரூர் கோயிலில் சிறிய சாமி சிலையை வாங்கினேன். அந்தச் சிலையைப் பார்த்தும், அவர் பாடிப் பதிவு செய்திருந்த பாடலைக் கேட்டும் பல நாட்கள் அழுதது உண்டு.
திருமணமான பிறகு சோபியா அக்காவைச் சந்திக்க அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை. பல ஆண்டுகள் கழித்து சந்தித்தபோது மறுபடியும் அந்நியராகிவிட்டார். இப்போதும் ‘கற்பூர பொம்மையொன்று’ பாடலைக் கேட்டால், சோபியா அக்கா எட்டிப் பார்க்காமல் இருக்கமாட்டார். பேசியும் உதவியும் பழகியும் மட்டுமா அந்நியர்கள் நம் வாழ்க்கையில் சுவை சேர்க்கிறார்கள்? சில நேரத்தில் நம்மைப் பார்க்காமலேகூட சுவை சேர்க்கத்தான் செய்கிறார்கள்.
சென்னை மூப்பனார் மேம்பாலத்தில் சுட்டெரிக்கும் மதிய வெயிலில், டிராபிக் சிக்னலில் காத்திருப்பதைப் போன்ற சுகம் உண்டோ? வெயிலுக்கு முகத்தை மட்டுமல்ல, சில நேரம் மனதையும் சுருக்கத்தான் செய்கிறோம். அந்தச் சூட்டில் கண்ணில் படும் எல்லாமே எரிச்சலைத்தான் கூட்டும்.
என் வண்டிக்கு முன் 50 வயதை ஒத்த ஒரு ஜோடி, டூவீலரில் அமர்ந்தபடி அந்த வெயிலிலும் சிரிப்பும் கொஞ்சலுமாக இருந்தார்கள். அவர்களின் மகிழ்ச்சியும் சிறுபிள்ளை போன்ற சில்மிஷங்களும்கூட எரிச்சலைத்தான் உண்டாக்கின. நடு ரோட்டில் சண்டை போடுவதைப் பார்த்துப் பழகிய நம் கண்களுக்கு, கொஞ்சல்கள் ஒரு ஏலியன்தான். சிக்னலில் காத்துக்கொண்டிருந்தவர்களில் பலரும் முகம்சுளித்தோம்.
பாடம் கற்றுக்கொடுத்த ஜோடி: அந்த ஜோடியின் கண்களுக்கு நாங்கள் யாரும் தெரியவேயில்லை. சிக்னல் காத்திருப்பு முடிந்து வண்டியை எடுக்கும்போது அந்த அம்மாவின் தலையி லிருந்த புடவை விலகியது. அப்போதுதான், தலையில் முடி ஏதுமில்லை என்பதைக் கவனித்தேன்.
பிறகு கையிலிருந்த அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகள் அணியும் பேண்ட்டை பார்த்தபோதுதான், அந்தப் பெண் புற்றுநோய் உள்ளவராக இருக்கக்கூடும் என்பதை உணர்ந்தேன். தாங்கள் வாழும் நாட்கள் நிச்சயமற்றதாக உணர்ந்த ஜோடியாக அவர்கள் இருக்கலாம்.
நிச்சயமற்ற வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும் ரசிக்கும் ஜோடியும்கூட. கோடை வெயில் எவ்வளவு சுட்டாலும், நம் வாழ்க்கையில் அனுபவிக்கக் கூடியது எத்தனை கோடைக் காலங்களோ என்று தெரியாதபோது, அதையும் ரசிக்க வேண்டும் என்பதை போகிற போக்கில் கற்றுக்கொடுத்த அந்நியர்கள் அவர்கள்.
இந்தத் தொடரைப் படிப்பதன் மூலம், உங்கள் வாழ்க்கையில் எனக்கு நேரம் கொடுத்து, உங்கள் மனதில் இடமளித்து சுவை சேர்ப்பதற்கு நன்றி. உங்கள் வாழ்க்கையிலுள்ள அந்நியர்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் எனக்கு ஆசை. எழுதி அனுப்புங்கள், சுவைக்கக் காத்திருக்கிறேன்.
(ரெசிபி வரும்)
- ananthi.iyappa@live.in