இளமை புதுமை

பாட்டு  கேட்டுட்டே தூங்கிடுவேன்! | காபி வித் மிதுன் ஜெய்சங்கர்

கார்த்திகா ராஜேந்திரன்

மலையாளத்தில் ‘ஆவேஷம்’, தமிழில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் தனது சிறப்பான நடிப்பால் கவனிக்க வைத்தவர், இளம் நடிகர் மிதுன் ஜெய்சங்கர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அவரோடு மலையாளத் தமிழில் ஓர் உரையாடல்:

சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா?

இரவு 11 மணிக்குள் தூங்கி காலை 7 முதல் 8 மணிக்குள் எழுந்திருப்பதுதான் வழக்கம். படப்பிடிப்பு இருந்தால் மட்டும் ‘நைட் ஷிஃப்ட்’ ஓகே.

‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா?

இரண்டுமே இருக்கு. ஆனால், ‘ஸ்ட்ரிக்ட்’ ஆக ஃபாலோ பண்றதில்லை.

தனித்துவமான பழக்கம்?

ஏதாவது ஒரு விஷயத்துக்கு டென்ஷன் ஆகிவிட்டால், பாட்டு கேட்டபடியே ‘தூங்குடா கைப்புள்ள’ என்பதுபோல அப்படியே தூங்கிடுவேன்.

இந்த வேலை இல்லையென்றால்?

கல்லூரிப் படிப்பின் போதே ‘ஆவேஷம்’ படத்துக்கான ஆடிஷனில் தேர்வாகிவிட்டேன். ஒருவேளை திரைத் துறைக்கு வராமல் இருந்திருந்தால் ‘டீச்சர்’ ஆகியிருப்பேன்.

படிப்பில் சுட்டியா?

இல்லை, ‘ஆவரேஜ்’தான். ஆனால், சிறு வயது முதல் ஆர்வத்தோடு என் தம்பிக்குப் பாடம் கற்றுத் தருவேன். அதனால், ‘டீச்சர்’ வேலை பிடிக்கும்.

திரைத்துறையில் நடிப்பு மட்டும்தான் இலக்கா?

நடிப்பைத் தவிர நேரம் கிட்டும் (கிடைக்கும்) போதெல்லாம் என்னுடைய எண்ணங்களைப் பதிவுசெய்து வருகிறேன். அது முழு நீளக் கதையாக இன்னும் மாறவில்லை.

எதிர்காலத் திட்டம்?

நிறைய பயணிக்க வேண்டும்.

புத்தக வாசிப்பா, திரை அனுபவமா?

நாள்தோறும் ஒரு சினிமாவாவது பார்க்க வேண்டும் என முயற்சிப்பேன். ‘டைம்’ இருந்தால் இரண்டு, மூன்று படங்களைக்கூடப் பார்த்துவிடுவேன்.

பிடித்த சமூக வலைதளம் எது, ஏன்?

பொழுதுபோக்கவும் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் பயன்படுவதால் என்னுடைய ‘ஃபேவரைட்’ யூடியூப்தான்.

பின்பற்றக்கூடிய ‘பாலிசி’?

பெரிய இலக்குகள் இருந்தாலும் சிறிய இலக்குகளில் அதிகம் கவனம் செலுத்தி, அதை நிறைவேற்ற முயற்சி செய்வேன். இன்றைக்கு ஒரு வேலையை முடிக்க வேண்டுமென்றால், அதை முடித்தாக வேண்டும் என நினைப்பேன்.

தூங்கவிடாத ஒன்று?

உண்மையைச் சொல்லணும்னா, சாப்பிடலைனா எனக்குத் தூக்கமே வராது!

திரும்பத்திரும்பப் போக விரும்பும் இடம்?

சிறு வயது முதல் விளையாட்டில் அவ்வளவு ஆர்வம் இருந்ததில்லை (நம்ம ‘ஃபோகஸ்’ ‘ஆக்டிங்’லதான்). வீட்டுக்கு அருகே உள்ள ஒரு மைதானத்தில் நண்பர்களோடு ‘செட்டில்’ ஆகிவிடுவேன். இப்போதும் கூட அப்பப்போ அந்த ‘ஸ்பாட்’டுக்குப் போவது வழக்கம்.

மறக்க முடியாத தருணம்?

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் வெளியானதற்குப் பிறகு என் குடும்பத்தோடு திரையரங்கில் அந்தப் படத்தைப் பார்த்த அனுபவமும், குறிப்பாக நான் நடித்திருந்த ‘அப்பா - மகன்’ தொடர்பான காட்சிகளை என்னுடைய அப்பாவோடு பார்த்ததும் மிகவும் நெகிழ்ச்சியான தருணங்கள்.

SCROLL FOR NEXT