சாக்லெட் வேண்டுமென்று அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு மத்தியில், வேண்டாமென்று மறுத்ததற்குத் திட்டு வாங்கிய குழந்தை யார் தெரியுமா? இந்தத் தொடரை எழுதி வரும் ஆனந்திதான். வாங்கிய திட்டு கசப்பாக இருந்தாலும், கிதார் கற்றுக்கொண்டதன் சுவை இன்னும் வாழ்க்கையில் இனிப்பைச் சேர்த்தபடியே இருக்கிறது.
கிதாரில் சீனியர்: எட்டாம் வகுப்பு படித்தபோது கிதார் கற்றுக்கொண்டிருந்தேன். ‘வாரணம் ஆயிரம்’ படம் பார்த்து கிதார் வாங்கியவர்களுக்கு சீனியர் நான். நான் கற்றுக்கொள்ளத் தொடங்கி, சிறு பாராட்டு கிடைத்தும் கைவிட்ட கலைகளில் கிதார் வாசிப்பதும் ஒன்று. அந்தப் பட்டியலில் இன்னொன்று ஒளிப்படம் எடுப்பது. கல்லூரிகளுக்கு இடையேயான போட்டி ஒன்றில், நான் எடுத்த ஒளிப்படம் ஒன்றைப் பாராட்டி, மறைந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் பாலுமகேந்திரா பரிசாக கேமரா வழங்கினார். நியாயப்படி அந்த கேமரா, ஒளிப்படம் எடுக்க எனக்கு உந்துதல் அளித்திருக்க வேண்டும். ஆனால், பாராட்டு கிடைத்த மிதப்போ என்னவோ, கொஞ்சம் கொஞ்சமாக கேமராவைத் தொடுவதே அரிதாகிவிட்டது. கிதாரும் அப்படியே!
அதற்கும் முன்பு கர்னாடக இசை, பரதநாட்டியம், இந்தி, கராத்தே, வெஸ்டர்ன் டான்ஸ், நீச்சல் பயிற்சி, வாழும் கலை, போட்டோஷாப், அனிமேஷன் போன்றவையும் என் வாழ்வில் கற்றுக்கொள்ள முயற்சி செய்தவற்றில் அடங்கும். அன்றைக்குச் சமூக ஊடகம் கிடையாது. வெர்சுவல் ஆடியன்ஸும் அரிதுதான்.
ஒவ்வோர் ஈடுபாடு: மின்வெட்டு ஏற்பட்டால் தொலைக்காட்சிப் பொழுதுபோக்கு இல்லாமல் தவிக்கும் என் குடும்பத்தினர்தான் எனக்கு ஆடியன்ஸ். சினிமா பாட்டு எதுவும் வாசிக்க மாட்டேன், கிளாசிக்கல் மட்டும்தான். எதுவும் புரியாவிட்டாலும் மண்டையை ஆட்டி என்னை ஊக்குவித்தது நான்கு நபர் கொண்ட குடும்ப உறுப்பினர்கள். அவர்களுக்குக் கர்நாடக இசை புரியாவிட்டாலும், அதை வாசிக்கும்போது முழு ஈடுபாட்டோடு இசையில் மூழ்கிக் கிடைக்கும் என் ஆனந்தத்தைப் புரிந்துகொண்டு அவர்கள் ரசித்திருக்க வேண்டும். அங்கீகாரமோ, வருமானமோ புகழோ தராவிட்டாலும், உலகத்தையும் நம்மையும் மறக்கச் செய்கிற எந்த ஒரு செயல்பாடும், நம் வாழ்க்கையின் சீக்ரெட் ரெசிபியின் முக்கியமான மூலப்பொருள்தான்.
அம்மாவுக்குத் தையல், அப்பாவுக்கு ரன்னிங், அக்காவுக்குப் பாட்டு, பாட்டிக்குத் துணி துவைப்பது, கோலம் போடுவது என்று ஆளுக்கு ஒரு சில விஷயங்களில் ஈடுபாடு உண்டு. அது அவர்களது உலகம். அதில் மற்றவர்களுக்கு இடமில்லை. தன்னையே மறக்க வைக்கும் விஷயங்களில் ஈடுபடும்போது, வெளி உலகம் மௌனித்துவிடுகிறது. அந்த உலகில் அவர்கள் லயித்துப்போயிருக்கும்போது, அவர்களின் அழகும் பன்மடங்கு கூடித்தான் தெரியும். அகம் ஆனந்தமாக இருந்தால் முகமும் அப்படித்தானே இருக்கும்?
பூமாலைத் தருணம்: சில நாட்களுக்கு முன் அம்மாவை திறன்பேசியில் அழைத்து ஓர் உதவி கேட்டேன். அம்மாவுக்கு ஆச்சரியமும் ஆனந்தமும். "மல்லிப்பூ வாங்கி இருக்கேன், எப்படிக் கட்டணும்?".
"பூ கட்டப் போறியா? என்ன திடீர்னு? நீதான் பூவே வைக்க மாட்டியே?".
"பூ கட்டதான் ஆசை. வச்சுக்க இல்ல."
"நேர்ல வராம எப்படிச் சொல்லித் தர்றது? இரு, யூடியூப் லிங்க் அனுப்பறேன்."
அதைப் பார்த்து ஒரு மணி நேரத்துக்கு மேல் பூவுடன் போராட்டம் நடத்தி, நான் செய்த முதல் பூமாலையை என் வீட்டுப் புத்தருக்கு அணிவித்தேன். அம்மாவுக்கு போட்டோ அனுப்பினேன்.
“நல்லா இருக்கு. இன்னும் இறுக்கமா கட்டணும். கட்டக்கட்ட வந்திடும்" என்று அம்மா சொன்னார்.
பூவின் மீது திடீர் ஆசை ஏற்பட, சமீபத்தில் படித்த ‘வேள்பாரி’ நாவல் காரணம் என்று அம்மாவுக்கு விளக்கினேன். கடந்த 3 வாரங்களாக உலகை மறந்து, சில மணி நேரம் என் தனி உலகில் லயத்திருக்க பூ கோப்பது, எம்பிராய்டரி, கலரிங் என்று சில விஷயங்களைச் செய்து வருகிறேன். கவனம் சிதறாமல், சில மணி நேரம் ஒரே விஷயத்தில் ஈடுபாட்டோடு இருப்பது ஓர் அலாதி அனுபவம். நமக்கான தேவை வெகு குறைவே என்பதை இம்மாதிரியான அனுபவங்கள் உணர்த்துகின்றன.
உங்களுக்கென நேரம்: ஆனால் வேலைப்பளு, வேறு பல காரணங்களால் கிடைக்கும் அற்ப நேரத்தைத் திறன்பேசியில் வீடியோ பார்த்துக் கழித்துக்கொண்டு இருக்கிறோம். நம் கவனத்தை ஈர்த்து ஆழ்ந்து செய்யக்கூடிய செயல்பாடுகளைச் செய்வதற்கு நேரம் ஒதுக்காமல் இருக்கிறோம். உடல்நலத்துக்கு உடற்பயிற்சியும் நல்ல உணவும் எவ்வளவு முக்கியமோ, அதேபோல மனநலத்துக்கு இம்மாதிரியான விஷயங்களில் ஈடுபாட்டோடு இருப்பதும் முக்கியம். மனநலமும் உடல்நலனுக்கு மிகவும் முக்கியம்.
நண்பர்களோடும் குடும்பத்தினரோடும் உள்ள உறவை மேம்படுத்த அவர்களோடு நேரம் செலவிடுவதைப் போல நம்மை நாம் நன்றாகப் புரிந்துகொள்ளவும், நமக்கென்று நேரம் செலவிடுவதும் ரொம்ப முக்கியம். இசை, விளையாட்டு, கலை, வாசிப்பு என உலகை மறந்து நீங்கள் லயித்துக்கிடக்கும் விஷயம் எது? உங்கள் வாழ்க்கைக்குச் சுவை சேர்க்கும் அந்த ரகசிய மூலப்பொருளை அறிய ஆசைப்படுகிறேன். உங்களுக்கான நேரத்தைச் செலவிட்ட பின் சிறிது நேரமிருந்தால் எனக்கு எழுதி அனுப்புங்கள்.
(ரெசிபி வரும்)