இளமை புதுமை

கல்கியான ரஜினி! | வாழ்க்கையின் சீக்ரெட் ரெசிபி - 9

ஆர்.ஜே. ஆனந்தி

ரஜினி வயிற்றுக்குள் இருந்தது ஒரு சிறிய பறவை. அது வெளியே வந்தால்தான் உடல் தேறும் என்று மருத்துவர் கூறியதிலிருந்து, ராத்திரியும் பகலுமாக ரஜினியின் உடல்நலத்தின் மீதே என் கவனம் இருந்தது. ரஜினி சாப்பிடவில்லை, ரஜினி சற்று சோர்வாக இருக்கிறான் என்று அவனைப் பற்றிப் பேசும்போதெல்லாம், சுற்றி இருந்தவர்களின் முகத்தில் உண்டான மாற்றத்தால், ரஜினி என்கிற பெயருக்குப் பதிலாகக் கல்கி என்று அந்தப் பூனையின் பெயரை மாற்றினேன்.

மனதைக் கவர்ந்த ரஜினி: சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருந்தாலும், ரஜினி என்கிற பெயரைக் கேட்டால் வேளச்சேரி சாலையில் நெருக்கடியாகச் செல்லும் வாகனங்களின் சத்தங்களுக்கு இடையே ‘மியாவ் மியாவ்..’ என்று எங்கள் காரைத் தன் வசம் இழுத்த, அந்தக் கறுப்புப் பூனைக்குட்டி என் மனக்கண்ணில் ஒரு கணம் எட்டிப் பார்த்துவிட்டுப் போகத் தவறியதே இல்லை.

இந்தச் செல்ல விலங்குகள் நம் வாழ்க்கையின் சுவையை எதை வைத்து அதிகரிக்கின்றன என்பது ரகசியமே! கேட்டால், ‘மியாவ் மியாவ், லொள் லொள்’ என்று தங்கள் மொழியில் பேசிச் சமாளித்துவிடுகின்றன. நாமும் புரிந்ததுபோல் மண்டையை ஆட்டிவிட்டு, அந்தச் சத்தத்தை ரசித்து மயங்கிக்கிடக்க வேண்டியதுதான்.

பள்ளிச் சிறுமியாக இருந்தபோது நாய்க்குட்டி வேண்டும் என்று அடம்பிடித்து, சாப்பாட்டைப் புறக்கணித்து, கண்களில் நீர் வழிய அப்படியே தூங்கிப்போனது உண்டு. எவ்வளவு அடம்பிடித்தும் நாய் கிடைக்கவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரி நண்பர்கள் வாங்கிக் கொடுத்த நாய்க்குட்டி ஜோஜோ எங்கள் வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே தோட்டத்தை அலங்கரிக்கத் தொடங்கிவிட்டான்.

நாய் வேண்டும் என்று ஆசைப்பட்டது நான்தான். ஆனால், அவனை வளர்த்ததோ என் பாட்டி. காலையில் தூக்கத்தைவிட்டுப் பிரிய மனமின்றி நான் படுக்கையில் கிடந்தபடியே ஜன்னல் வழியாகப் பார்த்தால், என்னைத் திட்டிக்கொண்டே ஜோஜோவை நடைப்பயணத்துக்குப் பாட்டி அழைத்துச் சென்றுகொண்டிருப்பார்.

யாருக்குச் சுடுச் சோறு? - "நாயை வாங்கினா போதுமா? காலைல நேரா நேரத்துக்கு நாய் பாத்ரூம் போகணும்னு குரைத்தால்கூட தூக்கம்தான் முக்கியம்னு இருப்பவளுக்கு நாய் ஒண்ணுதான் கேடு. ஆசைக்கு வாயில்லா ஜீவனையா வாங்குறது?" என்று தெருவிற்கே கேட்கும் அளவுக்குப் பாட்டி டமாரம் அடித்துவிடுவார். மதிய இடைவேளையில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வரும்போது சுடச்சுட சோறு பொங்கிப் போட்டுக்கொண்டிருப்பார்.

அதைப் பார்த்து அப்பாவுக்குக் கோபம் பற்றிக்கொண்டு வரும். ‘எனக்கு காலையில் வைத்த ஆறிப்போன சோறு. நாய்க்குச் சுடுச்சோறா’ என்று அப்பா கோபித்துக்கொள்வார். அப்பாவைப் பார்த்தாலே பயந்துகொண்டிருந்த ஜோஜோ, கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி, வாசலில் அமர்ந்து அப்பா செய்தித்தாள் படிக்கும்போது, அவர் மடியில் தலைவைத்துப் படுக்கும் அளவுக்கு அந்நியோன்யமாகிவிட்டது.

அடுத்த சில மாதங்களில் அக்காவுக்குக் குழந்தை பிறந்து பாட்டிக்கு வேலை அதிகமானதாலும், நாயின் உதிரும் முடி குழந்தைக்குத் தொந்தரவாக இருக்கும் என்று நினைத்தும் ஜோஜோவை என் அம்மாவின் நண்பர் வீட்டுக்கு அனுப்பிவிட்டோம். அக்கா மகளுக்கு இப்போது வயது 13.

ஜோஜோ சென்ற பிறகு என்னைவிட அதிகமாக அவனை நினைத்து வருந்தியது, முதலில் என்னைக் கரித்துக்கொட்டிய பாட்டிதான். பின்னாட்களில் "ஜோஜோ மற்ற நாயைப் போல இல்ல" என்று அவனைப் பற்றி அப்பா அடிக்கடி கூறியதுண்டு. சிறுவனாக நாயிடம் கடிவாங்கிய அப்பாவை, நாய்கள் மீதான நம்பிக்கையையும் அளவில்லா அன்பையும் கொண்ட மனிதனாக மாற்றியது ஜோஜோதான்!

சாலையில் கிடைத்த ஜீவன்: இப்போது நாய்க்குட்டி வேண்டும் என்று அடம்பிடிக்கும் என் அக்கா மகள், தெருநாய்களை எங்கு பார்த்தாலும் பாசத்தை வாரிக் கொடுக்கிறாள். ஆனால் ஜோஜோவிற்குச் செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாதென்று யோசித்தேன். “உண்மையாகவே உனக்கு நாய் பிடிக்கும்னா, நாயை எதுக்கு வாங்கணும்? எத்தனையோ நாய்க்குட்டிகள் வீடில்லாமல் இருக்கின்றன.

அவற்றைத் தத்தெடுத்தால் என்ன?" என்று சொல்லி, அதை அவளுக்குக் காட்ட, வேளச்சேரி புளூகிராஸுக்கு அழைத்துச் சென்றேன். அங்கே நாய்க்குட்டிகள், பூனைக்குட்டிகளைக் கொஞ்சி விளையாடிவிட்டு, அப்பா, அம்மாவின் சம்மதத்தோடு ஒரு நாயைத் தத்தெடுத்துக்கொள்வதாகக் கூறினாள்.

மகிழ்ச்சியோடு வீடு திரும்பும் வழியில் போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தபோது கடுகு போன்ற நிறத்தில் தெருவோரமாகப் பூனைக்குட்டி ஒன்று கத்துவது, அந்தச் சத்தத்ததுக்கு இடையே எப்படி எங்கள் காதில் விழுந்தது என்று தெரியவில்லை.

இறங்கிப் போய் சுற்றும்முற்றும் பார்த்தோம். அம்மா பூனையைக் காணவில்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்தோம். எந்தப் பிரயோஜனமும் இல்லை. ஏற்கெனவே தத்தெடுக்கப்பட்ட 3 பூனைகள் வீட்டில் இருந்தன. நான்காவதாக வீடு வந்துசேர்ந்தான் ரஜினி என்கிற கல்கி. ஒரு சில வாரத்தில் கால்நடை மருத்துவரின் ஆலோசனையால் ஆரோக்கியமடைந்து, இப்போது சென்னையில் வேறொரு குடும்பத்தில் பாசமிகு உறுப்பினராகி இருக்கிறான்.

(ரெசிபி வரும்)

- ananthi.iyappa@live.i

SCROLL FOR NEXT