‘காத்து மேல..’, ‘ஐ’ போன்று வைரலான சுயாதீன இசைப்பாடல்களைப் பாடியவர் பால் டப்பா. இவரது இயற்பெயர் அனீஷ். ‘மக்காமிஷி’, ‘ஓ மாரா’ எனத் தமிழ் சினிமாவில் இவர் பாடியுள்ள பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட். நடனக் கலைஞர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் எனப் பன்முகமாக இயங்கி வரும் பால் டப்பாவோடு ஒரு சுவாரசியமான உரையாடல். சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? வேலை செய்வதற்கு அமைதியான நிம்மதியான இரவுதான் வசதியாக இருக்கும். அதனால், தினமும் காலை 11 மணிக்கு மேல் எழுவதுதான் வழக்கம்.
‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா? - சரியான நேரம் சாப்பாடும், நடனத்தில் ’ஒர்க்-அவுட்’டும் இருப்பதால் தனியாக எதையும் ‘ஃபாலோ’ செய்வதில்லை. வேலை நேரம் போக, நல்லா ‘ரெஸ்ட்’ எடுக்கணும். அதுல மட்டும் கவனமா இருப்பேன்.
தனித்துவமான பழக்கம்? - புளி சாதம்போல எந்த உணவானாலும் அதற்குச் சர்க்கரையைத் தொட்டு சாப்பிட்டிருக்கேன். ஆனால், இப்போ அந்தப் பழக்கம் இல்லை. என்னுடைய ஐடியாவை பிறருக்கு ‘பக்கா’வாக புரியவைப்பதில் நான் ‘கில்லாடி’.
இந்த வேலை இல்லையென்றால்? - கல்லூரி படிப்பின்போதே பாட்டு, நடனம் ஆகியவற்றின் மீதுதான் ‘ஃபோகஸ்’ இருந்தது. ஒரு வேளை இத்துறையில் இல்லாமல் இருந்திருந்தால், கால்பந்து விளையாட்டில் கவனம் செலுத்தியிருப்பேன்.
எதிர்காலத் திட்டம்? - பெரிதாக எதுவும் இல்லை. பிடித்த விஷயங்களை ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் செய்ய வேண்டும். ‘கோ வித் தி ஃபுளோ’தான் செட் ஆகும்.
புத்தக வாசிப்பா, திரை அனுபவமா? - நிறைய படம் பார்ப்பேன்.
பிடித்த சமூக வலைதளம் எது, ஏன்? - நேரத்தைக் கழிக்கவும், மியூசிக் அல்லது சினிமா தொடர்பாக சர்வதேச அளவில் என்ன நடக்கிறது, விஷூவல்ஸ் எப்படி உருவாகிறது என்பதைக் கற்றுக்கொள்ள இன்ஸ்டகிராமைப் பயன்படுத்துவேன்.
பின்பற்றக்கூடிய ஒரு ‘பாலிசி’? - அவ்வப்போது என் குழுவுடன் சேர்ந்து நடனப் போட்டிகளுக்குச் செல்வேன். அப்போதும் எப்போதும் ‘Love is the key' என்பதை ஃபாலோ செய்வோம். போட்டி இருக்கலாம், அதுவே வெறுப்பாக மாறிவிடக் கூடாதல்லவா?
சுயாதீன இசை vs சினிமா? - திரைப்படங்களில் ஒரு விஷயத்தை மையப்படுத்தி கொஞ்சம் கவனமாகப் பாடல் எழுத வேண்டியிருக்கும். சுயாதீன இசையைப் பொறுத்தவரை எனக்கான சுதந்திரம் அதில் கிடைக்கும். தமிழ் சுயாதீன இசைக்கென்று தனி ரசிகர் கூட்டம் தற்போது உருவாகியுள்ளது.
சவாலான ஒரு தருணம்? - வீட்டில் படிப்பில் கவனம் செலுத்த சொன்னபோது இசைத் துறையில் பயணிக்கும் விருப்பத்தைத் தெரிவித்தேன். ஓராண்டுக்குள் நல்ல இடத்தை எட்ட வேண்டுமென ‘டெட்லைன்’ வைத்தார்கள். அந்தச் சவாலை ஏற்று, ஓராண்டுக்குள் என்னை நிரூபித்துக் காட்டிவிட்டேன்.
தூங்கவிடாத ஒன்று? - பர்சனலாக ஏதாவது பிரச்சினை இருந்தாலோ அல்லது ஷூட்டிங்கிற்கு முந்தைய நாள் இரவு என்றாலோ அன்றைக்கு ‘நோ’ தூக்கம். கண் எரிச்சலே இருந்தாலும் என்னால தூங்க முடியாது!
திரும்பத்திரும்பப் போக விரும்பும் இடம்? - பெரும்பாலும் வெளியில் சுற்றாமல் என்னுடைய வீட்டில் அல்லது நண்பர்களின் வீட்டில் ‘அட்டி’ போடுவதுதான் வழக்கம்.