முத்தம்! என்னவென்று அர்த்தம் தெரியாத வயதில் இருக்கும்போது நமக்குக் கிடைக்கும் அளவில்லா முத்தங்கள், நம் வாழ்க்கையின் சீக்ரெட் ரெசிபியில் உப்பைப் போன்ற முக்கியமான மூலப்பொருள்! சிறுமியாக இருந்தபோது உறவினர்கள் என்னை 'புட்டக்கா' என்று அழைப்பார்கள்.
என்னுடைய கொழு கொழு கன்னங்கள்தான் அதற்குக் காரணம். சுப நிகழ்வுகளில் சொந்தங்கள் கூடும் வேளையில் என் கன்னங்கள் படாதபாடுபடும். அதைக் கிள்ளியும் முத்தங்கள் கொடுத்தும், வலிக்கவலிக்க பாசத்தை கொட்டுவார்கள். அயர்ச்சி உண்டாகும் அளவுக்குப் பாசத்தில் திளைப்பது ஒரு கொடுப்பினை என்று அப்போது எனக்குத் தெரியாது.
உடலுக்கென்று ஒரு மொழி: சொந்தங்களின் முத்தங்களைப் பெற்ற என் கன்னங்கள் வளரவளர என் பாட்டி, சித்தி, பெரியம்மா என்று பெண்கள் மட்டுமே உரிமை கொண்டாடும் இடமானது. காரணம்? நான் ஒரு பெண் குழந்தை. ஆண், பெண் என்கிற திட்டவட்டமான எல்லைக்கோடு இருக்கும் இடங்களில், அன்பும் பாசமும்கூட அந்த எல்லைகளை மனத்தில் கொண்டே காட்ட வேண்டி உள்ளது. சொந்தங்கள் மட்டுமல்ல, என் அப்பாவும் குறிப்பிட்ட வயதிற்கு மேல் என்னைக் கொஞ்சிய நினைவு இல்லை.
சண்டைப் போட்டுச் சமாதானமாகும்போது, என் தலையைக் கோதி, என்னை அமைதிப்படுத்தும்போது என்னவென்று சொல்லமுடியாத ஒரு பேரன்பு என்னைக் கண்கலங்க வைக்கும். அதுதான் நானும் என் அப்பாவும் அன்பை வெளிப்படுத்த செய்யும் ஒரே தொடுதல்.
என் தோழிகள் தன் தந்தையோடு தோள் தொட்டுப் பேசுவதைக் காண்பதற்கு முன்புவரை, இப்படித் தொடாமல் இருப்பதுதான் இயல்பு என்று நானாக நினைத்துக்கொண்டிருந்தேன். வளர்ந்த சமூகத்துக்கு ஏற்ப இயங்கும் என் அப்பாவின் இயல்பு அது என்று பின்னர் புரிந்துகொண்டேன். குழப்பம் இல்லை.
அன்பை வெளிப்படுத்த நினைக்கும்போது அப்பாவையோ அம்மாவையோ கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றிய எண்ணங்களை மட்டும் தழுவிச் சென்றிருக்கிறேன். அம்மா, அப்பா, பாட்டி, அக்கா என என் குடும்பத்தில் யாரும் அவ்வளவு சாதாரணமாக முத்தம் கொடுத்தோ கட்டி அணைத்தோ அன்பைப் பரிமாறிக்கொண்டதில்லை. அதுதான் இயல்பு என நாம் ஒப்புக்கொண்டாலும், உடலுக்கென்று ஒரு மொழி உள்ளது.
சுமக்கும் அப்பாக்கள்: அரவணைப்பே இல்லாத நமக்கு, நமக்குப்பிடித்தவர் நம்மை திடீரென்று அணைத்துக் கொள்ளும்போது கோடைக்காலத்தில் பெய்யும் முதல் மழைபோல உடல் உயிர்பெற்று கண்ணீர் பெருகும். தொடுதல், உடலுக்கு உண்டான தேவை. சிறு வயதில் தொடுதலே இல்லாமல் வாழும் குழந்தைகளுக்கு வளர்ந்தபின் உணர்ச்சிக் கட்டுப்பாடு பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் சொல்கின்றனர். 'அம்மா' என்கிற சொல்லைக்கூட புரிந்துகொள்ள முடியாத குழந்தைகளுக்கு, அம்மாவின் அன்பை முத்தங்களே மொழிபெயர்ப்புச் செய்கின்றன.
உடல்நிலை சரியில்லாமல் அப்பா வலியில் துடித்துக்கொண்டிருந்த நாள்களில், என் அம்மாவிடம் அதிகம் கேட்டது சர்வவலி நிவாரணியான முத்தமே! என்னிடம் அப்பா கேட்டது? 'தொட்டுட்டே இரு! தொடாம இருந்தா போயிருவேன்!" இன்னும் எவ்வளுவு நாள் வாழ போகிறோம், வலியை எப்படித் தாங்கிக்கொள்வது என்பதை அறியாமல் நரகமான சூழலில்கூட ஒரு மனிதனுக்குத் தேவைப்படுவது சிறு தொடுதல்தான் என்பதை என் அப்பா மரணப்படுக்கையில் கற்றுக்கொடுத்தார்.
அவர் கேட்காத, கேட்க முடியாத, திரும்பப் பெறவும் முடியாத, கண்ணீர் கலந்த ஈர முத்தத்தை இறுதிச்சடங்குக்கு முன்னே கொடுத்தேன். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையைத் தொடக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தவர் யாரென்று தெரியவில்லை. ஆனால், அந்தக் கட்டுப்பாட்டைச் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு, எத்தனை அப்பாக்கள் தன் பெண் பிள்ளைகளுக்குக் கொடுக்கவேண்டிய முத்தங்களைப் பூட்டிவைத்துச் செல்கிறார்கள்.
அன்பின் ருசி: குழந்தைகளுக்காவது முத்தங்களை அள்ளித்தர அத்தனை ஆட்கள் உண்டு. வயதான குழந்தை களுக்கு? முதியவர்களுக்குத் தேவையான அளவு தொடுதலே கிடைப்பதில்லை என்பதும் அன்பின் வறுமையே. என்னதான் ஆன்லைன் மூலமாக வீடியோ அழைப்பில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பில் இருக்கலாம் என்றாலும், தொடுதல் இல்லாமல் இருப்பது அவ்வளவு சுவையான அனுபவத்தைக் கொடுப்பதில்லை.
ஓஷன் வாங் என்கிற எழுத்தாளர் தனது புத்தகத்தில் ஒரு முதியவர் பற்றி எழுதியிருந்தார். தன் அம்மா வேலை செய்யும் பியூட்டி பார்லருக்கு அடிக்கடி ஒரு பாட்டி பெடிகியூர் செய்ய வருவாராம். வயதான காலத்தில் தன்னைத் தொடுவதற்கு யாரும் இல்லாததால் பெடிகியூர் மூலமாகச் சிறு தொடுதலை உணர்வதற்கே அவ்வாறு அடிக்கடி வருவதாக அந்தப் பாட்டி கூறுவதில் இருந்து, தொடுதலுக்கான ஏக்கம் எவ்வளவு தீவிரமானது என்று புரிகிறது.
தலைக்கு எண்ணெய் வைத்து அம்மா தலையைக் கோதிவிடுவதிலும், வண்டி ஓட்டிச் செல்லும்போது தோழியோ தோழனோ நம் தோள் மீது கை போடுவதிலும், சந்தோஷத்தில் நண்பர்கள் ஹைபை கொடுப்பதிலும், உடல் வலித்தால் பாட்டி நீவி விடுவதிலும், தெருவைக் கடக்கையில் பத்திரமாகக் கைபிடித்து அக்கா கூட்டிச் செல்வதிலும், தாண்ட முடியாத பள்ளங்களைத் தாண்ட அப்பா நம்மைத் தூக்கிவிடுவதிலும் எத்தனையெத்தனை தொடுதல்கள்! அவை எல்லாமே அன்பின் பரிமாற்றமே! சொல்ல முடியதை பேரன்பை மொழிபெயர்ப்பது தொடுதலே! சொற்களைவிட தொடுதலில் சொல்லப்படும் அன்பிற்கு ருசி அதிகம்.
(ரெசிபி வரும்)
- ananthi.iyappa@live.in