சமூக ஊடகங்களில் காலை வணக்கம், இரவு வணக்கம், வாழ்க வளமுடன் என்று திறன்பேசியில் உள்ள செயலியிலிருந்து நண்பர்கள், உறவினர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்புவது முந்தைய தலைமுறையினரின் வழக்கம். இடைப்பட்ட காலத்தில் இளைய தலைமுறையினர் இமோஜி மொழியில் பேசிக் கொண்டனர். தற்போதைய மாடர்ன் தலைமுறையினர் என்றழைக்கப்படும் ‘ஜென் இசட்’ (Gen Z) தங்களை இந்த வகையில் மாறுபட்டவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள்.
குறிப்பாக, அரட்டையடிக்க உதவும் சாட்டிங்கில் வார்த்தைகளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதுதான் இவர்களுடைய ஃபேஷன். அதாவது, குட் மார்னிங், குட் நைட் போன்ற வார்த்தைகளை ‘Gm’, ‘Gn’ என்று தொடங்கியவர்கள், இப்போது ‘Sip Tea’, ‘vibe’, ‘Mah’, ‘Yw’, ‘Cringe’, ‘Banger’ என்று பகல் முழுவதும் உரையாடி ‘Gn’ என்று முடிவுக்கு வருகிறது. இதில், ‘Sip Tea’ என்பது குடிப்பது. அதாவது, நீங்கள் உட்கார்ந்து உரையாடலைக் கேட்கிறீர்கள் என்று அர்த்தம். ‘Vibing’ - நன்றாக உணருதல். பெரும்பாலும் ஓர் இனிமையான சூழ்நிலை என்று எடுத்துக்கொள்ளலாம்.
இதேபோல வருத்தமாகவோ அல்லது மனக்கசப்பிலோ இருந்தால் ‘Salty’ என்கிறார்கள். அதிகமாகச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களை ‘E-boy’ அல்லது ‘E-girl’. ஒரு நல்ல அல்லது மகிழ்ச்சிகரமான அனு பவத்தையோ நிகழ்வையோ விவரிக்க ‘Banger’ பயன்படுகிறது. பேசத் தொடங்கும்போதே ஒருவரை கிண்டல்செய்வதற்கு ‘Cringe’ என்கிற வார்த்தையை ‘ஜென் இசட்’ அதிகம் பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம், ‘my bro, my sis, my friend’ அழைத்துக் கொண்டிருந்தவர்கள், ‘my’ என்பதை ‘mah’ என்கிற வகையில் மாற்றிப் பயன்படுத்துகின்றனர்.
நான் உன்னிடம் அப்புறம் பேசுகிறேன் என்பதை ‘TTYL’ என்கிறார்கள். உனக்குத் தெரிந்தால், உனக்குத் தெரியும் என்பன போன்றவற்றை சுருக்கமாக, ‘Iykyk’ என்று சுருக்கிவிட்டார்கள். ‘You’re welcome’ என்பது ‘Yw’ என்றாகிவிட்டது. நெருங்கிய நண்பரை ‘Bestie’ என்கிறார்கள். ஆனால், சில நேரம் வேடிக்கையாக ‘பெஸ்டி’யை பிரண்டுக்கு மேலே லவ்வருக்குக் கீழே என்றும் கிண்டல் செய்வதுண்டு.
பொதுவாக நம் நண்பர்கள், வீட்டினர், வேறு யாரும் அறிவுரை கூறினாலோ அல்லது பழைய விஷயங்கள் பற்றிப் பேசினாலோ, அவர்களை ஒரேடியாக நிராகரிக்க அல்லது கேலி செய்ய ‘Boomer’ என்கிற பதத்தைப் பயன்படுத்துகின்றனர். இதில் பெற்றோரையும்கூடச் சேர்த்துவிட்டனர் இந்த ‘ஜென் இசட்’ வகையறாக்கள்.
காதலன் அல்லது காதலியை ‘Bae’ என்கிற புதிய திருநாமத்தைச் சூட்டியிருக்கின்றனர். ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்’ என்பதைக் குறிக்க ‘wyd’ என்கின்றனர். ஏதோ ஒன்று நன்றாக நடக்கிறது அல்லது ஒருவர் நன்றாக உணர்கிறார் என்பதை வெளிப்படுத்த ‘Gucci’ என்கிற வார்த்தைப் பயன்படுத்தப்படுகிறது. இப்படி நம்மை எல்லாம் திணறடிக்கும் வகையில் வார்த்தை பயன்பாட்டிலும் ‘ஜென் இசட்’ தலைமுறை நம்மை பூமர், கிரிஞ்ச் என உணரவைத்துக்கொண்டிருக்கிறது.
- செ.வில்சன் பயிற்சி இதழாளர்