அதே வீடு, அதே வேலை, அதே சாப்பாடு, அதே மக்கள். இதையெல்லாம் சொல்லும்போது சலிப்பாக இருக்கலாம். பழைய உலகமாகவே இருந்தாலும் புதிய ரசனை ஒன்றை நாம் வளர்த்துக் கொள்ளும்போது, பழையதும் புதிதாகி விடுகிறது. இது வாழ்க்கையின் மற்றுமொரு சீக்ரெட் ரெசிபி.
நூல்கள் மூலமாக பல நாடுகளுக்கு கற்பனையில் நான் பயணித்திருக்கிறேன். கரோனா காலத்தில் பொதுமுடக்கம் காரணமாகப் பக்கத்து தெருவுக்குப் போவதற்கே தடை இருந்தபோது ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, லண்டன் எனப் பல நாடுகளுக்குக் கற்பனையில் போய்வருவது என்றால் சும்மாவா! புதிய ஊருக்குச் சென்று புதிய மனிதர்கள், புதிய தெருக்களைப் பார்ப்பதைவிட, பழைய மனிதர்கள், பழகிய தெருக்களைப் புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பது சிறந்தது இல்லையா?
உங்களுக்குப் பிடித்தது எது? - உலக ஒளிப்பட நாளன்று பிறந்ததாலோ என்னவோ, எனக்கு ஒளிப்படம் மீது ஆர்வம் உண்டு. கல்லூரியில் படித்தபோது ஒரு பிறந்தநாளுக்கு என்ன வேண்டுமென்று குடும்பத்தினர் கேட்டபோது, ‘டெலி லென்ஸ்’ வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கியது உண்டு. கவிதை, எழுத்து, நடிப்பு, ஒளிப்படம் என்று பல பயிலரங்குகளுக்குச் சென்றிருக்கிறேன்.
எல்லாப் பயிலரங்குகளிலும் சொல்லப்படும் அம்சங்கள் என் வாழ்க்கையின் மற்ற பகுதிகளுக்கும் பொருந்தும் வகையில் அமைவது உண்டு. ஓர் ஒளிப்படப் பயிலரங்கில் ஏதாவது ஒரு வண்ணத்தைத் தேர்வு செய்து, அந்த வண்ணத்தில் காணப்படும் எதையேனும் ஒளிப்படம் எடுத்துவர வேண்டும் என்றார்கள். நான் தேர்ந்தெடுத்தது சிவப்பு.
பயிலரங்கிலிருந்து வீடு செல்லும் வழியில் எத்தனையெத்தனை சிவப்புச் சட்டை போட்ட மனிதர்கள்? சிவப்பு விளக்கு, சிவப்பு பூக்கள், பலூன்கள், வண்டிகள், தொலைபேசிகள், பெயர்ப் பலகைகள் என உலகமே சிவப்பு நிறமாகக் காட்சியளித்தது. நான் தினமும் சென்று வரும் வழியில் பார்க்கும் மரங்களில் சிவப்புப் பூக்கள் இருப்பதை அன்றுதான் பார்த்தேன்.
மாலை சூரியன் மறையும் வேளையில் வெள்ளைச் சட்டை போட்டவர்கள் மீதும், வெள்ளைப் பறவைகள் மீதும் அதே சிவப்புச்சாயம் பூசப்பட்டது. உலகமே எனக்காகச் சிவப்பானதா, அல்லது உலகின் வண்ணங்களை அன்றுதான் கவனித்துப் பார்த்தேனா என்பது தெரியவில்லை.
ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு ‘ரெட் கார் தியரி’ என்கிற பெயரில் இதே கருத்தைப் பற்றிப் படித்தேன். அதன்படி, ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நாம் கவனிக்கும்போது, அதே போலிருக்கும் விஷயங்கள் நம் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும். காலங்காலமாக நாம் வாழ்ந்த தெருவாகவே இருந்தாலும், நாம் புதிதாக ஒரு விஷயத்தைப் பார்க்க முயன்றால், அதே தெரு புதிய கண்ணோட்டத்தில் நமக்குத் தெரியும்.
ஒரு மரத்தின் கதை: பொதுமுடக்கம் விலக்கப்பட்ட நாள்களில், அம்மாவோடு நடைப்பயிற்சி சென்றபோது, இதமான காற்று வீச, ஆடும் மரங்களை வேடிக்கை பார்த்தபடி நடந்துகொண்டிருந்தோம். ஒரு மரம் வாடி இருக்கவே, “இது என்னம்மா சோகமா இருக்கிற மாதிரி இருக்கு. வாடிடுச்சோ?” என்று கேட்டேன். அதற்கு அம்மா, “அது தூங்கு வாகை. சூரியன் மறையும்போது இப்படித் தொங்கிவிடும்.
காலையில் மறுபடியும் எழுந்துவிடும்” என்றார். அந்த நாள் வரை அந்த மரத்தை நான் பார்க்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அதைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறேன். அதன் பிறகு தூங்கு வாகை மரங்கள் எங்கு இருந்தாலும் கண்ணில் பட்டுவிடுகின்றன.
ஒரு மரத்தைப் பற்றி அம்மா சொன்னதிலிருந்தே பழகிய தெருக்களில் உள்ள மரங்கள் அந்தத் தெருக்களைப் புதிதாகப் பார்க்க வைத்தன. பல மரங்களை ரசித்த காலம் அது. பிடித்த உணவு, இடம், படம், நடிகர் என்று நம் எல்லாருக்கும் இருப்பதுபோல், பிடித்த மரம் என்று ஒன்று இருந்தால் என்ன என்கிற யோசனை எழுந்தது.
நான் சிறு வயதிலிருந்து பார்த்த மரங்களைப் பற்றி யோசித்து, ஒரு மரத்தைத் தேர்வு செய்தேன். அந்த மரத்திற்கென்று தனி ஓசையுண்டு என்றே எனக்குத் தோன்றும். அந்த மரத்தடியில் சைக்கிள் ஓட்டி, நண்பர்களோடு விளையாடிய பொழுதுகளில் மழை பெய்வதுபோல அந்த மரத்திலிருந்து வரும் சத்தம் என் மனதுக்கு இதத்தை அளித்திருக்கிறது.
அது அரசமரம். வெளிநாடு செல்லும்போது நம் மொழி பேசும் மக்களைப் பார்த்தால் ஏற்படும் வெளிப்படுத்த முடியாத இன்பம்போல், எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே பார்க்கும் அரச மரங்களுக்கும் எனக்கும் ஏதோ பந்தம் இருப்பதுபோல் தோன்றும்.
சரி, உங்களுக்குப் பிடித்த மரம் எது? எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். அப்படி ஒரு மரத்தை இதுவரை தேர்வு செய்யவில்லை என்றால், உங்களைச் சுற்றி இருக்கும் மரங்களைப் பாருங்கள், உங்களைவிட வயதில் மிகப் பழமையான மரங்களாகக்கூட அது இருக்கலாம்.
உங்களுக்கென்று ஒரு மரம் நெருக்கமாகப் படலாம். தேர்ந்தெடுங்கள். பின்பு நீங்கள் போகும் வழியெல்லாம் அந்த மரங்கள் உங்கள் பார்வைக்காகக் காத்திருப்பது போலவே தோன்றும். மரங்களையும் தாவரங்களையும் கண்டு ரசிப்பதும் நம் வாழ்க்கையின் சீக்ரெட் ரெசிபியில் ஒரு முக்கியமான மூலப்பொருள்தான்.
- ananthi.iyappa@live.in