இளமை புதுமை

கண்ணுக்கு ரெஸ்ட் செவிக்கு டெஸ்ட்

கார்த்திகா ராஜேந்திரன்

வானொலியின் இன்னொரு பரிமாணமாக ‘பாட்காஸ்ட்’ வந்துவிட்டது திரையில் தோன்றும் காணொளிகளைப் பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருப்பதைப் போல, செவிவழி ஒலிகளை ரசிக்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படியான ரசிகர்களுக்காகப் பிரத்யேகமாக ‘டேல் ஓ மீட்டர்’ (Tale’o’meter) எனும் ஆடியோ ஓடிடி செயலியை உருவாக்கியுள்ளனர் சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள்.

அதென்ன ‘டேல் ஓ மீட்டர்’? - வரலாறு, நாட்டு நடப்பு, சட்டம், கிரிக்கெட், சினிமா, உணவு, உறக்கம் எனப் பல்வேறு விஷயங்களை அலசும் நிகழ்ச்சிகள் ‘டேல் ஓ மீட்டர்’ ஆடியோ தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன. ரேடியோ எஃப்.எம். தளத்தைப் போல அல்லாமல் என்ன, எங்கே, எப்போது கேட்கலாம் என்பது எல்லாமே பயனரின் முடிவுதான். ‘டேல் ஓ மீட்டர்’ - உலகின் முதல் தமிழ் ஆடியோ ஓடிடி என்கிறார் அதன் நிறுவனர் சந்தோஷ் குமார்.

“நாம எல்லாரும் அளவுக்கு அதிகமாக ‘கண்டெண்ட்’டை உள்வாங்கிக் கொண்டிருக்கிறோம். கண்டெண்ட்டை நாம் தேர்வு செய்வதைவிட அல்காரிதம், விளம்பரங்களின் அழுத்தத்தால் கண்டெண்ட்தான் நம்மைத் தேர்வு செய்துகொண்டிருக்கிறது.

இந்த நிலையை மாற்றி அமைக்கும் முயற்சியில் உருவாக்கப்பட்டதுதான் ‘டேல் ஓ மீட்டர்’. ஆங்கிலத்தில் ‘டேல்’ என்றால் கதை; ‘மீட்டர்’ என்றால் அளவு. இந்தத் தளத்தில் வழங்கப்படும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மீட்டரில் சொல்லப்படும். இதைச் சுட்டவே இந்தப் பெயரைத் தேர்வுசெய்தோம்.

இத்தளத்தில் வழங்கப்படும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் கேட்பவருக்கு ஏதாவது ஒரு பயனைத் தரும். வெறுமனே ‘ஸ்க்ரால்’ செய்யும்படியாக இருக்காது. செய்திகள், வரலாற்று நிகழ்வுகள், கதைகளைப் புதிய பரிமாணத்தில் தமிழ் மொழியில் ஒலிவடிவ ஓடிடி தளத்தில் வழங்குவது இதுவே முதல் முறை” என்கிறார் சந்தோஷ் குமார்.

புது முயற்சி: செய்திகளைப் பற்றி ‘ஒரு கப் ஆக்சிஜன்’, உறக்க நேரத்தில் கேட்க ‘தூளி’ போன்ற நிகழ்ச்சிகள் இந்தத்தளத்தில் தொகுத்து வழங்கப் படுகின்றன. உலகளவில் ஆடியோ வழி நிகழ்ச்சிகள் வேகமெடுக்கத் தொடங்கி யிருந்தாலும், காணொளிகளுக்குப் போட்டியாக இயங்குவதில் உள்ள சவால்கள் என்ன? “நானும் என் சகோதரன் சதீஷ் கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து இந்தத் தளத்தைத் தொடங்கினோம்.

தற்போது 8 பேர் கொண்ட ஒரு குழுவாக வளர்ந்திருக்கிறோம். ஆடியோ வழி ஓடிடி தளத்தை நடத்துவதில் சவால்கள் உள்ளன. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு நொந்து கொள்கிறோம். ஆனால், எப்போது, எவ்வளவு நேரம் இணையத்தைப் பயன்படுத்த வேண்டும் என்கிற கட்டுப்பாட்டைத் தவற விடுகிறோம்.

இந்நிலை மாற வேண்டும். ஏதாவது ஒரு செயலியைப் பயன்படுத்தும்போது அல்காரிதம் உங்களை வழிநடத்தும். ‘டேல் ஓ மீட்டர்’ தளத்தில் அப்படிப்பட்ட அல்காரிதம் எதுவும் இல்லாமல் கண்டெண்ட்டைப் பயனர்தான் தேர்வு செய்ய வேண்டும்” என்கிறார் சந்தோஷ் குமார்.

நேரலை நிகழ்ச்சிகள்: ‘டேல் ஓ மீட்டர்’ குழுவினர் நேரலை நிகழ்ச்சிகளையும் நடத்து கின்றனர். வழக்கமான ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியைப் போல அல்லாமல் ஸ்டாண்ட்-அப், மாஸ்க் அணிந்து கண்ணை மூடிக்கொண்டு கதை கேட்கும் பகுதி, கேள்வி - பதில் பகுதி, நாடகம் போன்று பல்வேறு அம்சங்கள் கொண்ட நேரலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

“ஓடிடி தளம் வழியாக மட்டும் பயனர்களோடு இணைவது மட்டு மல்லாமல், இது போன்ற நேரடி நிகழ்ச்சிகளை நடத்தும்போது நேயர் களோடு உரையாட முடிகிறது. இந்தக் காலத்தில் ஒருவரைச் சில நிமிடங்கள் கண்ணை மூடி உட்கார வைப்பது சவாலான காரியம்.

திறன்பேசியைப் பார்க்கவிடாமல் அப்படி ஒருவரை உட்கார வைத்து செவிவழிக் கதைகளைச் சொல்லி, கவனத்தைப் பெறவே முயற்சி செய்து வருகிறோம்” என்கிறார் டேல் ஓ மீட்டர் குழுவைச் சேர்ந்த கீர்த்தனா. இன்றைக்குப் புதிதாக இருந்தாலும், இதுவும் காட்சி ஓடிடி போல நாளை டிரெண்ட் ஆகலாம்.

SCROLL FOR NEXT