இளமை புதுமை

நிம்மதி யாருடைய சாய்ஸ்? | வாழ்க்கையின் சீக்ரெட் ரெசிபி - 6

ஆர்.ஜே. ஆனந்தி

கரோனா காலக்கட்டத்தில் என் அக்காவும் மாமாவும் சென்னையில் இருந்தனர். அவர்களின் குழந்தைகள் இருவரும் கோடை விடுமுறைக்காகக் கோவை வந்திருந்தபோது பொது முடக்கம் அமலானது. ஆக, நானும் என் பெற்றோர், பாட்டி, இரண்டு வாண்டுகள் ஒரே வீட்டில் நீண்ட நாள்களுக்கு ஒன்றாக இருக்கவேண்டிய நிலைமை. பகுதி நேரமாகக் குழந்தைகளைப் பராமரிப்பதற்கும் பல மாதங்களுக்கு இடைவேளையே இல்லாமல் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கும் வேறுபாடுகள் உண்டு.

குழந்தைகளுக்கான இணைய வகுப்புகளில் தொடங்கி பொழுதுபோக்கு, சுகாதாரம் என அனைத்தையும் மேற்பார்வை செய்துகொண்டிருந்த எனக்கு, அவர்கள் கற்பித்த பாடம் இதுதான். சிறு வயதிலிருந்தே நாம் இந்த உலகையும் நம்மையும் புரிந்து கொள்ளப் பயன்படுத்தும் முறை, ‘டிரையல் அண்ட் எரர்’. நம்முடைய நடை, மொழி, சிந்தனை என அனைத்துமே நமக்கு முதல் முயற்சியிலேயே சரியாக வருவதில்லை. செய்து பார்ப்போம், சொதப்புவோம், பிறகு கற்றுக்கொள்வோம். சரியாக வராத நேரத்தில் தவறாகப் போவதன் விளைவுகளைப் பார்த்து, அதன் பிறகு மாற்றிக்கொள்வோம்.

தவறாக சில விஷயங்களைச் செய்யும்போது நம்மைச் சுற்றி இருக்கும் நெருங்கியவர்களின் கோபமோ முகச்சுளிப்போ, நம்மைத் தவிர்க்கும் விதமோ, நம் செயலை மறுபரிசீலனை செய்வதற்கோ அதே தவறை மறுமுறை செய்யாமல் இருப்பதற்கோ வழிகாட்டியாக அமையலாம். அதேநேரம் நாம் செய்யும் செயல்கள் சரியாகவோ அல்லது சமூகத்தில் ஏற்றுக்கொள்ளும் விதத்திலோ அமைந்துவிட்டால், நம்மைச் சுற்றி இருப்பவர்களின் பாராட்டுகள், அதை நாம் மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டும்.

நிலத்துக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப வளரும் செடிகளைப் போலத்தான், நாமும் நம்மைச் சுற்றி இருக்கும் சமூகத்துக்கு ஏற்ப வளர்கிறோம். அப்படியென்றால் ஒரு குழந்தை நல்ல முறையில் வளர, அந்தக் குழந்தையைச் சுற்றி இருக்கும் சூழல் எவ்வளவு முக்கியம்? அம்மா, அப்பா இருவரும் சென்னையில் இருக்க, என் அக்கா குழந்தைகளுக்கான சூழலைச் சரிவர செய்துதரும் கடமையை நான் ஏற்றுக்கொண்டேன்.

பெரியவர்கள் சொல்லும் ஒவ்வொன்றும் கட்டளையாகத் தோன்றும் வயது பெரியவளுக்கு. அவளுக்குத் தோன்றும் நேரத்தில் அவளுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய தாத்தா, பாட்டி, சித்தி என்று எல்லாரிடமும் எந்நேரமும் சண்டை போடும் மனநிலையில் இருப்பாள். சிறியவனுக்கு எங்கள் எல்லாரிடமும் தன் அம்மாவைத் தேடும் வயது.

ஒரு நாள் இரவு அவனைத் தூங்க வைத்துவிட்டு நானும் தூங்கிவிட்டேன். திடீரென்று விழித்துப் பார்க்கையில் என் மூக்கையே பார்த்துக்கொண்டு அவன் படுத்திருந்தான். எனக்கும் என் அக்காவுக்கும் ஒரே சாயல் மூக்கு. அவன் தன் அம்மாவை நினைத்துக்கொண்டிருக்கிறான் என்பதை புரிந்துகொண்டேன். “அம்மாவுக்கு வீடியோ கால் பண்ணலாமா?" என்று கேட்டேன். “வீடியோ கால்ல அம்மாவ தொட முடியாதே” என்று அவன் சொன்னான். அம்மாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ஆனால், ஒரு சித்தியின் பொறுப்பைச் சரிவர செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

ஒரே ஒரு பிரச்சினைதான். நம்மில் பலர் பொறுப்பையும் அதிகாரத்தையும் குழப்பிக்கொள்வதுதான். குழந்தைகள் படிக்கவில்லை என்றால் நாம் கோபித்து கொள்வதும், தவறான பதில்கள் சொல்லும் போது அவர்களைத் திட்டித் தீர்ப்பதும் அவர்களுக்குப் பயத்தை உண்டாக்குமே தவிர, படிப்பின் மீது ஆர்வத்தை எப்படித் தூண்டும்? எதைச் செய்வதாக இருந்தாலும் அதை நம்மிடம் கேட்ட பிறகே வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அவர்கள் அப்படிக் கேட்கும்போதெல்லாம் அதைப் பெரும்பாலும் நிராகரித்து விடுகிறோம்.

“பெரியவங்க சொன்னா அதைக் கேட்டு சரின்னு சொல்லப் பழகு. எதிர்த்துப் பேசாதே” என்று நமக்குச் சொல்லப்பட்ட அதே அறிவுரைகளைக் குழந்தை களுக்கும் கடத்துகிறோம். ஆனால், தனக்குத் தவறு என்று தோன்றுவதை, பெரியவர்களே சொன்னாலும், அதை எதிர்த்துக் கேள்வி கேட்டு ஓர் உரை யாடலைக் கையாளத் தெரிந்த குழந்தைகளே, பின்னாள் களில் மற்றவர்களின் கட்டளைகளை மட்டும் கேட்காமல், சுயசிந்தனை கொண்ட நபர்களாக வளர்கிறார்கள். குழந்தை வளர்ப்பில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இந்த அம்சத்தை வலியுறுத்துகிறார்கள்.

நாம் ஒரு மொழியை பேசக் கற்பதற்கு முன்னரே, நம் ஆழ்மனம் நம்மிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறது. பசி அடங்கிவிட்டது என்று உணரும் குழந்தையை வற்புறுத்தி அதிகம் சாப்பிட வைக்கும்போதும், அவர்கள் செய்த தவறை அவர்களே உணர்ந்து மாற்றிக்கொள்ள வாய்ப்பு கொடுக்காமல் மன்னிப்பு கேள் என்று வற்புறுத்தும்போதும், நமக்குத் தவறென்று தோன்றும் விஷயத்தைப் பற்றிக் கேட்கும்போது எதிர்த்துப் பேசாதே என்று மிரட்டும்போதும் அவர்களின் ஆழ்மனதின் உணர்வை நாம் அவமதிக்கிறோம்.

தன் உணர்வுகளை மதிக்காமலும் நம்பாமலும் வளரும் குழந்தைகள், பிற்காலத்தில் தன் உணர்வுகளோடு உள்ள உறவை நிரந்தரமாக மறந்துபோய் வாழ்கின்றனர். உலகமே எதிர்த்து நின்றாலும், உள்ளுணர்வு சொல்வதை மறுத்தால், உலகத்தில் வேண்டுமானால் இடம் கிடைக்கலாம். ஆனால், உள்மனதில் நிம்மதி இருக்காது. நிம்மதியற்ற வாழ்வில் சுவை ஏது?

(ரெசிபி வரும்)

SCROLL FOR NEXT