பணக்காரர்கள் எப்படியெல்லாம் நடந்துகொள்வார்கள் என்பதை நேரில் பார்த்ததைவிட திரைப்படங்களில்தான் அதிகமாகப் பார்த்திருக்கிறேன். பணக்காரர்களை எதிரியாக்கி வசனங்கள் பேசுகிற பெரும்பாலான நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் பெரும் பணக்காரர்கள்தான்.
‘கழுத்து வரைக்கும் காசு இருந்தா, அதுதான் உனக்கு எஜமானன்!’ எனப் பாடல் வரிகள் மூலமாக ஓவர் காசு உடம்புக்கு ஆகாது என்று நமக்குக் கருத்துச் சொல்வது பல கோடிகளில் சம்பளம் வாங்கும் ஏழைகள்தான்! இப்படிப் பணக்காரர்கள் மீதும் பணம் மீதும் ‘அந்தப் பழம் புளிக்கும்’ மாதிரியான எண்ணங்களோடு இருப்பவர்களிடம் பணம் எப்படி வந்துசேரும்?
நாம் மதிக்காத, விரும்பாத விஷயங்களை நோக்கி நம் மனம் எப்படிப் பயணிக்காதோ, அதே போலதான் பணமும்.
நாம் பணக்காரர்கள் மீதும் பணம் மீதும் வெறுப்பைக் காட்டினால், அது நம்மிடம் அவ்வளவு சுலபத்தில் வராது என்று மார்கன் ஹௌசெல் ‘பணம்சார் உளவியல்’ நூலில் எழுதியிருக்கிறார். பணமும் நேரத்தைப் போலதான். நாம் அதை எப்படிச் செலவிடுகிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது.
வந்த மாற்றங்கள்: நான் கார் வாங்கியபோது, அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள நண்பர் ஒருவரைத் திறன்பேசியில் அழைத்தேன். நண்பர் அன்று சொன்ன ஒரு விஷயம், என் மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்துவிட்டது. “வாழ்த்துகள் தீ! இது உன் குடும்பத்தின் முதல் கார்.
நீயே சம்பாதிச்சு வாங்கியிருக்க! ரொம்பப் பெருமையா இருக்கு. ஆனா ஒண்ணு, இனி நீ போற இடங்கள் மாறும். கார் பார்க்கிங் இருக்கிற ஹோட்டல், அது மூலமா சந்திக்கிற மக்கள்னு நிறைய மாற்றங்களுக்குத் தயாராகிக்கோ” என்று அவர் சொன்னது எனக்கு அப்போது வித்தியாசமாக இருந்தது.
அதிலிருந்த ஆழ்ந்த அர்த்தம் அப்போது எனக்குப் புலப்படவில்லை. இப்போது யோசித்துப் பாக்கும்போது என் வாழ்க்கை முறை மாறியிருப்பதை மறுக்கவே முடியாது! கொஞ்சமோ அதிகமோ, பணம் நாம் வாழும் வாழ்க்கையின் வடிவத்தை மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அது நமக்கு எவ்வளவு தேவை என்பதையும், அதை எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் நம் அனுபவத்திலிருந்து நாமே கற்றுக்கொள்வதன் மூலம்தான் நம் வாழ்க்கையின் சுவையை தீர்மானிக்க முடியும். முதல் சம்பளம் வாங்கும்போதே நம் வீட்டில் சிக்கனமாக இருப்பதைப் பற்றியும், சேமிப்பைப் பற்றியும் நிறைய அறிவுரைகள் வழங்கப்படுவது வழக்கம்தான். ஆனால், பணத்தைப் பற்றி எனக்குக் கிடைத்த அறிவுரை, என் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது.
அப்பா சொன்ன அறிவுரை: அப்பா ஒருமுறை என்னிடம் சொன்ன விஷயம், நான் காசைப் பற்றி யோசிக்கும் விதத்தையே மாற்றியிருக்கிறது. கொஞ்சம் சம்பாதித்து, பெரிதாக ஆசைப்படாமல் ‘சிம்பிள் லைஃப்’ வாழ வேண்டும் என்கிற ஆசை எனக்கு வந்ததும், அதைப் பற்றி அப்பாவிடம் விவாதித்தேன்.
ஆடம்பர வாழ்க்கையை விரும்பாத என் அப்பா, என் முடிவைக் கேட்டு பாராட்டுவார் என்று நினைத்து ஞானமுக்தி ஏற்பட்டதுபோலப் பெருமையோடு என் தீர்மானத்தைச் சொன்னேன். பதிலுக்கு அப்பா கூறியதுதான், நான் பணத்தைப் பற்றிப் பார்க்கும் பார்வையை மாற்றியது.
“வாழ்க்கையை எப்படி வாழணுங்கிறது உன்னோட இஷ்டம்தான். பணம் நிறைய இருந்தால், அது உன்னுடைய சிம்பிள் லைஃப்க்குத் தடையாக இருக்கும் என்று யார் சொன்னது?” இதைக் கேட்டதும் எனக்கும், ‘கழுத்து வரைக்கும் காசு இருந்தா, அதுதான் உனக்கு எஜமானன்’ பாடல் வரிகள்தான் ஞாபகத்துக்கு வந்தன. அப்பா, “நம் நாட்டில் நிறைய பெண் குழந்தைகளுக்கு வாழ்வதற்கே கொடுத்து வைப்பதில்லை. பெண் சிசுக் கொலைகள் எவ்வளவு நடந்திருக்கிறது.
தவிர, எத்தனை குழந்தைகளுக்குப் பள்ளிக்கு போவதே கனவாக இருக்கிறது? அப்படியே போனாலும், வேலைக்குச் செல்வதற்குத் தடை. திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். எல்லாருக்கும் சமமான வாய்ப்பும் திறமையும் அமைவதில்லை. உனக்குத் திறமையோட வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.
அதைப் பயன்படுத்தாமல் இருப்பதும் ஒரு வகையில் வாழ்க்கையை முழுமையாக வாழாமல் இருப்பது போன்றதுதான். நாம் சம்பாதிக்கும் பணம் நம்மை யார் என்று தீர்மானிப்பது இல்லை. அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் நாம் யார் என்பதைத் தீர்மானிக்கிறது” என்றார்.
பிறர் வாழ்க்கைக்குச் சுவை: பணத்தைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்கள், நம்மிடம் பணம் வந்து சேர்வதைத் தடுக்கிறது. பணம் சம்பாதிக்க நாம் செய்யவேண்டிய முயற்சிகளையும் குறைத்துவிடுகிறது. அந்தப் பழம் புளிக்கும் என்கிற காரணங்களைச் சொல்லி, நம் முழுத் திறனையும் வெளிப்படுத்தவிடாமல் தடுக்கிறது. கிடைக்கும் வாய்ப்புகளை இறுகப் பற்றி, நம் திறமைகளை நமக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்காகவும் பயன்படுத்தி, கழுத்து வரை என்ன, ஆகாயம் வரையும் காசு வரட்டுமே? அதைத் திறமையாகச் செலவிட்டு நம் வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் பிறர் வாழ்க்கைக்கும் சுவை சேர்ப்பது நம் கையில்தானே இருக்கிறது!
(ரெசிபி வரும்)
- ananthi.iyappa@live.in