இளமை புதுமை

‘ஒர்க் ஃபிரம் ஹோம்’ கிடைக்காதா? | காபி வித் தனுஜா சிங்கம்

இந்து குணசேகர்

சமூக வலைதளப் பிரபலம், யூடியூபர், எழுத்தாளர் எனப் பல அடையாளங்களைக் கொண்டவர், தனுஜா சிங்கம். பால் புதுமையினரைப் பற்றிய புரிதலை அனைவரிடத்திலும் கொண்டுசெல்வதில் கவனம் செலுத்தும் தனுஜா, தனது இயல்பான, தைரியமான பேச்சின் மூலமாக ஏராளமான ரசிகர்களை ஈர்த்தவர். அவருடனான ஓர் உரையாடல்.

சூரிய உதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? - அடிப்படையில் பல் சுகாதாரம் - ஈறு சார்ந்த நிபுணராகப் பணியாற்றி வருகிறேன். என் பணி சார்ந்து அதிகாலையே எழுந்துவிடுவேன். அதனால், பெரும்பாலும் சூரிய உதயத்தைப் பார்த்துவிடுவேன்.

‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா? - ஒர்க் அவுட்தான் என் தேர்வு. இருந்தாலும் சில உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவேன்.

தனித்துவமான குணம்? - சகிப்புதன்மை, உதவிசெய்யும் மனப்பான்மை, விட்டுக்கொடுத்தல், மனக் காயங்களை ஏற்படுத்தியவர்களையும் மன்னித்துவிடுவேன். காயத்தின் சுமையைப் சுமப்பது எனக்குப் பிடிக்காது.

புத்தக வாசிப்பா, சினிமாவா? - புத்தக வாசிப்புதான். ‘How AI Can Elevate Spiritual Intelligence and Personal Well-Being’ என்கிற புத்தகத்தைத் தற்போது படித்துக் கொண்டிருக்கிறேன். அரைத்த மாவையே திரும்ப அரைப்பதால் சினிமாவைச் சமீபமாகப் பார்ப்பதில்லை.

உறங்கவிடாமல் செய்கிற விஷயம் என்ன? - மக்களிடமிருந்து கிடைக்கும் அன்பும் ஆதரவும். சோர்வாக இருக்கும்போதெல்லாம் சமூக வலைதளங்களில் வந்துசேரும் பாராட்டுக் குறுஞ்செய்திகள் உற்சாகமூட்டி ஓடவைக்கின்றன.

இந்த வேலை இல்லை என்றால்? - மருத்துவத் துறையில் இருப்பது என் சிறுவயது கனவு. அதன்படியே மருத்துவத் துறையில்தான் பணி செய்கிறேன். ஆனால், ஐ.டி. துறையில் உள்ள ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’ எங்களுக்கு இல்லை. ஐ.டி. துறையை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்கிற சிறு வருத்தம் உண்டு.

பிடித்த சமூக வலைதளம் எது, ஏன்? - அதிகம் பயன்படுத்துவது யூடியூப். மக்கள் என்னுடன் மிகுந்த நட்பாக இருப்பதால் இன்ஸ்டகிராமும் பிடிக்கும்.

மனதில் பதிந்த சொல்? - மகிழ்ச்சி.

மறக்க முடியாத நபர்? - பலர் இருக்காங்க.என்னைஎழுத வைத்த எழுத்தாளர் ஷோபா சக்தி. ஈழத்து திருநங்கையின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவுசெய்யத் தூண்டியவர். என் நூலை நடிகர் கமலிடம் அறிமுகப்படுத்தி புகழ்பெற வைத்த நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி.

நினைவில் கொள்ளும் பாராட்டு? - கரோனா காலத்தில் பிரபலமாக இருந்த கிளப் ஹவுஸில் பார்வை மாற்றுத் திறனாளி ஒருவர் என் நூலைப் படித்து பாராட்டியது.

திரும்பத்திரும்பப் போக விரும்பும் இடம்? - மதுரை.

ஃபாலோ பண்ணும் வாழ்க்கை தத்துவம்? - மறப்போம் மன்னிப்போம்; யாரையும் காயப்படுத்தக் கூடாது; வாழ்க்கையில் சோர்வடைந்து முடங்கிவிடக் கூடாது.

உங்களுக்கு நீங்களே கூறிக்கொள்ளும் மோட்டிவேஷன்? - இதுவும் கடந்து போகும்.

அடுத்த இலக்கு? - மேல்படிப்பை முடிக்க வேண்டும். தற்சார்ப்பு வாழ்க்கை வாழ விரும்புகிறேன்.

SCROLL FOR NEXT