இளமை புதுமை

இன்ஸ்டகிராம்தான் எனக்கு ஆதார்! | காபி வித் ஹர்ஷத் கான்

கார்த்திகா ராஜேந்திரன்

தமிழ் யூடியூப் தளத்தில் நகைச்சுவைத் துணுக்குகளைப் பதிவிடத் தொடங்கி அண்மையில் வெளியான ‘டிராகன்’ படத்தில் ‘குட்டி டிராகன்’ அவதாரம் எடுத்தவர், நடிகர் ஹர்ஷத் கான். யூடியூப் காணொளிகள் தயாரிப்பது, சுயாதீன இசைப் பாடல்கள், திரைப்படங்களில் நடிப்பது என பிஸியாக இருக்கும் அவருடன் ஓர் உரையாடல்:

சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? - அலாரமே இல்லாமல் காலை நேரம் சரியா எழுந்திருக்கும் பழக்கமுள்ள ‘மிலிட்டரி ஆள்’ நான். ஷூட் இல்லாத இரவு நேரம், தூங்குவதற்காக மட்டுமே!

‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா? - எதைச் சாப்பிடக் கூடாது என்பதை ஃபாலோ செய்யும் ‘டயட்’டைப் பின்பற்றுவேன். ஜிம்முக்கே போகாமல் வீட்டிலேயே ஒர்க்-அவுட் செய்து எடையைக் குறைச்சிருக்கேன்னா பார்த்துக்கோங்க.

தனித்துவமான பழக்கம்? - சிரிப்பு வந்துவிட்டால் சீரியஸான சூழலிலும் என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது, வெடிச்சிருவேன்.

மறக்க முடியாத தருணம்? - வெற்றியைவிட தோல்வியைச் சந்தித்த தருணங்களை என்றைக்கும் மறக்க முடியாது.

இந்த வேலை இல்லையென்றால்? - நடிகராக இருப்பதைத் தவிர, எனக்கு வேற ‘ஐடியா’வே கிடையாது!

எதிர்காலத் திட்டம்? - நல்ல திரைப்படங்களில் நடிக்க வேண்டும், சீக்கிரம் ‘பேச்சலர்’ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்!

புத்தக வாசிப்பா, திரை அனுபவமா? - ஒரு கதை எப்படித் திரைப்படமாக மாறுகிறது என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் அதிகம். அதனால் புத்தகங்கள், படங்கள் இரண்டையும் பார்த்துத் தகவல்களைத் திரட்டுவேன்.

பிடித்த சமூக வலைதளம் எது, ஏன்? - இன்ஸ்டகிராம் என்பது எனக்கு ஆதார் கார்டு மாதிரி. அதுவும் நம்முடைய இருப்பைப் பதிவு செய்யத்தானே தவிர, பொதுவாக சோஷியல் மீடியா மீது அவ்வளவு ஆர்வம் இருந்ததில்லை.

‘சீக்ரெட்’ மந்திரம்? - நல்லதே நடக்கும்!

மறக்க முடியாத நாள்? - என்னுடைய பிறந்தநாள் அன்று ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்று, அதே நாளில் ‘எலிமினேட்’டும் ஆனது!

யூடியூப் vs சினிமா? - தனித்திறமைகளை வெளிப்படுத்த யூடியூப் ஒரு தளம்தானே தவிர, இது மட்டும் ஒரே ஆப்ஷன் இல்லை. ஆனால், சினிமா என்பது சவால்கள் அதிகம் நிறைந்த பெரிய களம்!

உறங்கவிடாத ஒன்று? - மகிழ்ச்சி, சோகம் எதுவா இருந்தாலும் தூங்கிடுவேன். ஆனால், கரெண்ட் இல்லைன்னா தூக்கம் வராது!

திரும்பத் திரும்பப் போக விரும்பும் இடம்? - எங்கு ஊர் சுற்றினாலும் வீடு திரும்பினால்தான் சொர்க்கம்!

SCROLL FOR NEXT