‘தைரியமா இரு, பாத்துக் கலாம்!’ இப்படிப் பலர் உங்களுக்குத் தைரியம் சொல்லிருக்கக் கூடும். ஆனால், நான் அப்படி சொல்லப் போவதில்லை. உலகத்தையே அச்சுறுத்திய ஹிட்லருக்கு உயரம் என்றால் பயம். இப்படி நம் எல்லாருக்கும் ஏதாவது ஒன்றைக் குறித்துப் பயம் இருக்கலாம். நம் வாழ்க்கை, படிப்பு, பொருளாதார நிலைமை, நட்பு, காதல், குடும்பம் என்று பல விஷயங்களை நினைத்து நாம் பயப்படலாம்.
கற்கால மனிதர்களுக்குத் தன் உயிர் மேல இருந்த பயம்தான், அவர்கள் உயிரையே காப்பாற்றியது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா. பயப்படுவது தவறு இல்லை. பயம் இல்லாத மாதிரி நடிக்கும் போதுதான் பிரச்சினையே! யோசித்துப் பாருங்கள், கற்கால மனிதன் சிங்கத்திடம் பயத்தை மறைக்க பஞ்ச் டயலாக் பேசியிருந்தால்? ‘பயமா? எனக்கா? ஹா.. ஹா..’ன்னு சிரிக்கும் போதே சிங்கம் பாய்ந்திருக்கும். எல்லா உணர்வுகளையும்போல பயமும் நம் வாழ்க்கையில் ஒரு சீக்ரெட் ரெசிபிதான். ஆனால், அது ஒரு முக்கியமான மூலப்பொருள்.
தேவையான அளவு பயம்: ‘இதுக்கெல்லாம் பயமா?’ - இப்படி இளக்காரமாகக் கேள்வி கேட்பவர்களுக்கும், ஏதாவது ஒன்றைக் குறித்துப் பயம் இருக்கத்தான் செய்யும். நாம் எதைப் பார்த்துப்பயப்பட வேண்டும், பயப்படக் கூடாது என்று யாராலும் தீர்மானிக்க முடியாது. நமக்கு பயம் வரும்போது அதை எதிர்கொள்வது மட்டுமல்ல, அதிலிருந்து விலகுவதும் இயற்கைதான். ஆங்கிலத்தில் ‘Flight or fight response’ என்று சொல்வார்கள். பயத்தைத் தவிர்ப்பதும் எதிர்கொள்வதும் உங்களோட விருப்பம்தான்.
ஆனால், எதைத் தவிர்க்க வேண்டும், எதை எதிர்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுவதுதான் உங்கள் வாழ்க்கைக்கு ருசி சேர்க்கும். நாம் யார், நமக்கு யார் - எது முக்கியம் என்று பல விஷயங்களை பயம் நமக்குச் சொல்லித் தரும். நம் நண்பர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று யோசித்துப் பயப்படுவதில், அவர்களுடைய நட்பு நமக்கு முக்கியம் என்று புலப்படுகிறது. நம் நண்பர்களோட நலனைப் பற்றி யோசித்துப் பயப் படுவதில், அவர்கள் மேல் நமக்கு இருக்கிற அன்பும் அக்கறையும் புலப்படுகிறது.
பயம் தரக்கூடிய விஷயங்களைத் தேடி போய் செய்து முடிக்கும்போது, நாம் யார் என்று மற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் நாமே நம்மைப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாகவும் இருக்கிறது. புதிய அனுபவங்கள் பயம் தரக்கூடியவை. ஆனால், அதுக்கென்று ஒரு தனி ருசி உள்ளது. ஜப்பானில் ஒரு வழக்கம் உண்டாம்.
நம்மால் செய்ய முடியுமா என்று நினைத்துப் பயப்படுகிற ஒரு விஷயத்தை, ஒரு சவாலாக எடுத்துச் செய்வதும் ஒன்று. அந்த வழக்கத்தின் பெயர் மிசோகி சவால். இதை நம் பண்பாட்டிலும் பார்க்க முடியும். எழுபது வயதானாலும், கடவுளின் பெயரைச் சொல்லி பல கிலோ மீட்டர் பாதயாத்திரைப் போவது, பூ மிதிப்பது, காளையை அடக்குவது என்று வெவ்வேறு வடிவங்களில் இதைப் பார்க்கலாம்.
இரண்டு நிமிடங்கள் கையில் மொபைல் இல்லையென்றால், மனதுக்குள் படபடவென்று பயமா இருக்குமா, இருக்காதா? வாரத்தில் ஒரு நாள் தொலைபேசி இல்லாமல் இருக்க முயற்சி செய்வதும் ஒரு சவால்தான். நம்மை பயமுறுத்தக்கூடிய சில விஷயங்களைச் சின்ன சின்ன சவாலாக எடுத்துச் செய்யும்போது, நமக்கு அது தைரியத்தைக் கொடுக்கிறது.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக யாருடனும் தொடர்பு கொள்ளாமல் பதினெட்டு பேருடன் நூறு நாள்கள் தாக்குப் பிடித்து வாழ்வதுதான் நான் கடந்த ஆண்டு தேர்ந்தெடுத்த மிசோகி சவால். நான் என்னைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்த பிம்பத்தை எனக்கே மாற்றியமைத்த நிகழ்வு அது.
நம் செயலும் சொல்லும் சரியாக இருக்கிறதா என்று நம் சமூக வலைதளங்களில் ‘வேலிடேஷன்’ தேடிக்கொண்டே இருக்கும் காலக்கட்டம் இது. இதற்கிடையே நண்பர்கள், உறவினர்கள் என்று யாரிடமும் மனக்குழப்பங்களைப் பகிர்ந்துகொள்ள முடியாமல், என் மனசாட்சியை மட்டுமே தொடர்புகொள்ள முடிந்த அந்த நாள்கள், என்னோடு என் உறவைப் புதுப்பித்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது.
ஒவ்வொரு முறையும் நாம் பயப்படற விஷயத்தை அணுகும்போதும், இல்லை அதிலிருந்து விலகும்போதும் நம்மைப் பற்றிய புரிதலோடு ஒரு படி நெருக்கமாகிறோம். நீங்க எதைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள்? அது ஒரு சிறிய விஷயமாகவோ பெரிய விஷயமாகவோ, அதை நெருங்கலாமா அல்லது அதை விட்டு விலகலாமான்னு அந்தப் பயத்தோட கொஞ்சம் நேரம் செலவு பண்ணுங்க. விலகுவதால கிடைக்குற தெளிவும், எதிர்கொள்வதால வருகிற அனுபவங்களும் ஒரு தனிச் சுவைதான்.
பயத்தை ருசித்துப் பாருங்கள்.
(ரெசிபி வரும்)
- ananthi.iyappa@live.in