ரேடியோ ஜாக்கியாக அறிமுகமாகி வீடியோ ஜாக்கியாகவும் மாறியவர் ஆர்.ஜே. டோஷிலா உமாசங்கர். பின்னர் தமிழக முதல்வரின் நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவதாரம் எடுத்து, தற்போது யூடியூபராகவும் அறியப்படும் அவருடனான ஒரு காபி கோப்பை உரையாடல்.
சூரிய உதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? - கண்டிப்பாக. தினமும் சீக்கிரமாகவே எழுந்துவிடுவேன். விடுமுறை நாள் என்றால் மட்டும்தான் கொஞ்சம் லேட் ஆகும்.
‘வொர்க்-அவுட்’டா அல்லது ‘டயட்’டா? - வொர்க் அவுட்தான். டயட் கிடையாது. நன்றாகச் சாப்பிடுவதற்காக வொர்க் அவுட் செய்வேன்.
தனித்துவமான பழக்கம்? - பாட்டுக் கேட்கப் பிடிக்கும். பழைய எம்.எஸ்.வி. பாடல்கள், பக்திப் பாடல்கள், 90ஸ் பாடல்கள், டவுன் பஸ் ஹிட் பாடல்கள் எனக் கேட்பேன். இந்த மாதிரி பாடல்கள் பழைய ஞாபகங்களைக் கிளறும். பாட்டு மூலமாக மைண்டை மாற்றிக்கொள்வேன்.
கம்-பேக் தருணம்? - எப்போது பிரபலங்களைப் பேட்டி எடுத்தாலும், யூடியூபில் பேசினாலும் எனக்கு அது கம்-பேக் தருணமாகத்தான் தெரியும்.
இந்த வேலை இல்லையென்றால்? - வழக்கறிஞராக இருந்திருப்பேன். சிறு வயதிலிருந்தே கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் எனக்கு அதிகம். ஏதாவது பிரச்சினை என்றால், அதைத் தீர்த்துவைக்க எனக்குத் தெரியும். பள்ளியில் படிக்கும்போது ஏதாவது பிரச்சினை என்றால் உடனே கேள்வி எழுப்புவேன். எனக்கு ஸ்கூலில் ‘லா பாயிண்ட்’னு பேரே வெச்சிருந்தாங்க.
எதிர்காலக் கனவுகள் என்ன? - திரைக்கதை எழுத வேண்டும் என்கிற ஆசை இருக்கு. அந்த வேலை போய்க் கொண்டிருக்கிறது. திரைப்பட இயக்கம் மீதும் காதல் வந்துள்ளது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் சார்ந்து இயங்குவது, தற்போது எழுத்துத் தொடர்பாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறேன். அதன்மூலமாகத் திரைக்கதை, உள்ளடக்கங்களை எழுத வேண்டும்.
புத்தக வாசிப்பா, திரை அனுபவமா? - இரண்டுமே. புத்தகமும் நிறைய வாசிப்பேன். வாரத்துக்கு 7-8 படங்கள் பார்த்துவிடுவேன். சிறுகதைகளும் வாசிப்பேன். இவற்றிலிருந்து எனக்குத் தேவையான விஷயங்களை எடுத்துக்கொள்வேன்.
பொழுதுபோக்கு? - எனக்கு வேலையே ‘ஹாபி’ மாதிரி ஜாலியாத்தான் இருக்கு. ஒரு படத்தைப் பற்றிப் பேசப்போகிறேன் என்றால், படம் பார்ப்பேன். என் வேலையையே என்ஜாய் பண்ணிச் செய்கிறேன். எத்தனை பேருக்கு இந்த மாதிரி கிடைக்கும்?
பிடித்த சமூக வலைதளம் எது? ஏன்? - இன்ஸ்டகிராமும் ஃபேஸ்புக்கும். நான் தொலைக்காட்சி பார்ப்பதே இல்லை. தொலைக்காட்சியையும் உலகத்தையும் இணைப்பதாக இன்ஸ்டகிராம் உள்ளது. இதைப் பார்த்தாலே எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளலாம். எழுதுகிற மக்களைப் பற்றி அறிந்துகொள்வதற்காக ஃபேஸ்புக் பிடிக்கும்.
தூங்கவிடாத நிகழ்வு? - என்னுடைய நிகழ்ச்சியில் 0.5% அளவுக்குச் சின்ன தவறு செய்தால்கூட, என் மைண்ட் அன்றைக்கு ஆஃப் ஆகிவிடும்.
மறக்கவே முடியாத நபர்? - என்னுடைய அப்பா தவறி ஒன்றரை வருடம் ஆகிறது. அவரைத்தான் மிஸ் செய்கிறேன்.
மனதில் பதிந்த சொல் / வாசகம்? - வாழ்க்கை ஒரு வட்டம்.
நீங்களே சொல்லிக்கொள்ளும் மோட்டிவேஷன்? - நீ மிகவும் அரிதானவள், தனித்துவமானவள்.
மறக்க முடியாத தேதி? - டிசம்பர் 23, 24. என் அப்பா தவறிய நாள்.
திரும்பத் திரும்பப் போகுமிடம்? - புதுச்சேரி. ஒரு வருஷத்தில் 40 முறையாவது போய்விடுவேன்.
இதுதான் நான்..? - சமரசம் பண்ணிக்கொள்ளாத ஆள்.