இளமை புதுமை

நாளை புதிய நாள்! | காபி வித் மஞ்சரி

இந்து குணசேகர்

அழகான தமிழ் உச்சரிப்பாலும், ‘பிக்பாஸ் சீசன் 8’ இல் நேர்த்தியான ஆட்டத்தாலும் கவனம் ஈர்த்தவர் பேச்சாளர் மஞ்சரி. ஒரு மாலைப் பொழுதில் அவருடன் நடந்த உரையாடல்.

சூரிய உதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? - காலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் ஆள் நான் இல்லை. ஆனால், பயணங்களின்போது சூரிய உதயத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எழுவது உண்டு.

‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா? - என் தேர்வு டயட்தான். உணவு வகைகள் சரியான அளவில், சரியான ஊட்டச்சத்துடன் இருக்க வேண்டும் என்பதில் கவனமா இருப்பேன். தொடர்ச்சியாக உடற்பயிற்சி மேற்கொள்ளாவிட்டாலும் உடல் ஆரோக்கியத்துக்காகத் தொடர்ந்து விளையாட்டுகளுக்கு நேரம் ஒதுக்கிடுவேன்.

தனித்துவமான குணம்? - என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்கிற விழிப்புணர்வு எப்போதும் அதிகம் உண்டு. நான் ஒரு செயலைச் சரியாகவோ தவறாகவோ செய்யும்போதும், அந்தச் செயலைப் பற்றிய விழிப்புணர்வு எப்போதும் இருக்கும். அதுதான் நான் இயங்குவதற்கும் மாற்றிக்கொள்வதற்கும் உதவுது.

புத்தக வாசிப்பா, சினிமா அனுபவமா? - இரண்டுமே பிடிக்கும். ஆனால், சமீபமாக நிறைய படங்கள் பார்க்கிறேன். அதிலிருந்து ஏதாவது சாரம்சத்தை எடுத்துக்கொள்ள முடியுமா என முயற்சிப்பேன்.

உறங்கவிடாமல் செய்கிற விஷயம் என்ன? - என்ன கஷ்டம் வந்தாலும் நான் தூங்காமல் இருந்ததில்லை. ஏதாவது பெரிய நிகழ்வு நடக்கப் போகிறது, நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த நாள் வருகிறது என்றால் முந்தைய நாள் இரவு தூக்கமே வராது.

இந்த வேலை இல்லையென்றால்? - அம்மா ஆசிரியராக இருந்ததால், சிறுவயது முதலே கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு இருந்தது. அதனால் நான் ஆசிரியராகி இருக்க வாய்ப்பிருந்தது. ஆனால், மீடியாவை விட்டுச் சிறு இடைவேளை எடுத்தபோது என்னிடம் இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று ஆசிரியர், மற்றொன்று ஐடி வேலை. நான் ஐடி வேலையைத் தேர்வு செய்தேன்.

மறக்க முடியாத நபர்? - என் சிந்தனையை மாற்றிய பெரியார். கேள்விகள் எழுப்ப வேண்டும் என்கிற பழக்கம் அவரிடமிருந்துதான் வந்தது.

மனதில் பதிந்த சொல்? - பகுத்தறிவு. பகுத்தறிந்து கேள்விகளை எழுப்ப வேண்டும் என்கிற நுண்ணறிவு அச்சொல்லில் இருந்துதான் கிடைக்கிறது.

நினைவில் கொள்ளும் பாராட்டு? - பிரபல தனியார் டிவி நிகழ்ச்சியில் திருக்குறளின் ஒழுக்கமுடைமை குறித்த என் பேச்சுக்கு நெல்லை கண்ணன் கண்ணீருடன் அளித்த பாராட்டு மறக்க முடியாதது; இதயத்துக்கு நெருக்கமானது.

ஃபாலோ பண்ணும் தத்துவம்? - மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலைதான். எது செய்தாலும் அதை ஒரு குறிக்கோளுடன் செய்ய வேண்டும்.

நீங்களே கூறிக்கொள்ளும் மோட்டிவேஷன்? - அழுகை வந்தால் அழுதுவிடு, நாளை புதிய நாள்.

உங்கள் பார்வையில் பெண்? - என் பார்வையில் பெண் என்பவள் எல்லையற்றவள், பெண்களால் அவர்கள் விரும்பும் அனைத்தையும் செய்ய முடியும்.

அடுத்த இலக்கு? - பேச்சுலகில் எனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்ப் பேச்சுலகில் தவிர்க்க முடியாத பேச்சாளராக நான் இருக்க வேண்டும்.

திரும்பத் திரும்பப் போக விரும்பும் இடம்? - கடல். அதிகச் சத்தத்தையும் அமைதியையும் கடல் ஒன்றாகத் தருகிறது. அதனால், கடல் பிடிக்கும். சமீபமாகக் கேரளத்தின் வர்கலா மிகவும் பிடித்த இடமாக மாறியுள்ளது.

SCROLL FOR NEXT