ஊடகத் துறையில் செய்தி வாசிப்பாளராக நுழைந்து, ‘ஃபுட்டி’, ‘டிராவலர்’ என வலம் வந்துகொண்டிருப்பவர் லாவண்யா ஸ்ரீ ராம். அவருடன் ஒரு மாலை வேளையில் நடந்த காபி கோப்பை உரையாடல்:
சூரிய உதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? - வேலை காரணமா எப்போதும் அஞ்சு மணிக்கு எழுந்திடுவேன். அதனால், சூரிய உதயம் பார்க்கும் நாளாகத்தான் இருக்கும்.
‘வொர்க்-அவுட்’ அல்லது ‘டயட்’? - ரெண்டுமே பின்பற்றுவது உண்டு. ரொம்ப கண்ட்ரோல் செய்து டயட் இருக்க மாட்டேன். புரோட்டீன் அதிகமுள்ள முட்டையையும் பழங்களையும் அதிகம் சாப்பிடுவேன்.
தனித்துவமான பழக்கம்? - எனக்கு காரும் டூவிலரும் ஓட்டத் தெரியும். ஆனால், வண்டி ஓட்ட பிடிக்கவே பிடிக்காது. எப்படி இருந்தாலும் அதைத் தவிர்த்துவிடுவேன்.
‘கம்-பேக்’ தருணம்? - திருமணமே என் வாழ்க்கையில் நடந்த கம்பேக் தருணம் என்றுதான் சொல்வேன். அந்தத் தருணம் எனக்கு எப்போதும் விலைமதிப்பற்றது.
இந்த வேலை இல்லையென்றால் எது? - விமானப் பணிப்பெண் (ஏர்ஹோஸ்டஸ்) ஆவது என் கனவாக இருந்தது. அந்தக் கனவு நிறைவேறும் அளவுக்குச் சென்று நழுவிவிட்டது.
எதிர்காலத் திட்டங்கள் என்ன? - பொதுவாக எதிர்காலத் திட்டங்களை வகுப்பது கிடையாது. சின்னசின்ன விஷயங்கள் ஏதாவது இருந்தால், அவற்றை நோட் பண்ணி, முடித்துவிடுவேன். தொழில்முனைவோராக வேண்டும் என்பதில் ஆர்வம் உண்டு.
புத்தக வாசிப்பா, திரை அனுபவமா? - புத்தகம் வாசிக்க நிறைய முயற்சி செய்திருக்கிறேன். ஆனால், சுட்டுப் போட்டாலும் வரவில்லை. திரைப்படங்கள், வெப் தொடர்கள், பாடல்கள் அதிகம் பார்ப்பேன்.
பொழுதுபோக்குகள்? - சமையல் செய்யவும் பாட்மிண்டன் விளையாடவும் ரொம்பப் பிடிக்கும்.
பிடித்த சமூக வலைதளம் எது? ஏன்? - இன்ஸ்டகிராம். அரசியல் விஷயங்கள், நெகட்டிவிட்டி எதுவும் இல்லாமல் இன்ஸ்டகிராம் அமைதிப் பூங்காவாக இருப்பதால் பிடிக்கும்.
உறங்கவிடாதது..? - பெண் குழந்தைகள் மீதான அத்துமீறல்கள். அதைக் கேள்விபடும்போதெல்லாம் தூக்கமே வராது. குழந்தைகள் எதுவும் தெரியாத பிஞ்சு நெஞ்சங்கள்.
மறக்கவே முடியாத நபர்? - பள்ளி ஆங்கில ஆசிரியர்களான பிரேமலதா, டிஜூ. எனக்குள் இருந்த திறமையை வெளிக் கொண்டு வந்தவர்கள் இவர்கள். என்னை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்திய வேதியியல் ஆசிரியர் ஹெல்பின்.
மனதில் பதிந்த சொல் / வாசகம்? - ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’, ‘எண்ணம் போல் வாழ்க்கை’.
மறக்க முடியாத தேதி? - என் குழந்தை பிறந்த 16-01-2017. அது ஒரு ‘கிப்ட்’டான நாள்.
திரும்பத்திரும்பப் போக விரும்புமிடம்? - திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயில். முருகன் கோயில் எதுவாக இருந்தாலும் திரும்பத்திரும்பப் போய்விடுவேன்.
இதுதான் நான்..? - ‘ஸ்ட்ரைட் ஃபார்வேர்ட்’, ‘ பிரேவ் வுமன்’.