கதைகளையும் நாவல்களையும் ஒலி வடிவில் கேட்ட அனுபவம் முந்தைய தலைமுறைக்கு உண்டு. ஆனால், 90களுக்குப் பிறகு தொலைக்காட்சி அலைவரிசைகளின் அசுர வளர்ச்சியால் அத்தகைய ஒலி வடிவ அனுபவம் இன்றைய தலைமுறைக்குக் கிடைக்கவில்லை.
அத்தகைய அனுபவத்தை மீட்டெடுத்து, இன்றைய இளம் தலைமுறைக்கு அளிக்க புதிய வரவாக வந்திருக்கிறது ‘ரேடியோ ரூம்’ செயலி. ஊடகத் துறையில் பல ஆண்டுகளாகத் தலைமைப் பொறுப்புகளை அலங்கரித்த ஏ.எல். வெங்கடாசலத்தின் முயற்சியில் இந்தச் செயலி உருவாகியுள்ளது.
ஒலிச் செயலி: ‘ரேடியோ ரூம்’ செயலி வெறும் ஆடியோ புத்தகம் மட்டுமல்ல. சிறு கதைகளும் நாவல்களும் ஆடியோ நாடகங்களாக மாற்றப்பட்டுக் கேட்பவர்களுக்குப் புதிய அனுபவத்தை அளித்துவருகிறது. ஒலி வடிவக் கதைகளுக்கு முன்பு வரவேற்பு இருந்தது. இப்போது இதுபோன்ற முயற்சியை முன்னெடுக்க எது தூண்டியது என்கிற கேள்வியோடு வெங்கடாசலத்தை அணுகினோம்.
“வானொலியில் ஒலி வடிவிலான நாடகங்களைக் கேட்டு வளர்ந்த தலைமுறை எங்களுடையது. ஆனால், காலப்போக்கில் ஒலி வடிவத்தில் நாடகங்கள், கதைகளைக் கேட்பது அரிதாகிவிட்டது. எனினும், வீடியோ வடிவிலான ஓடிடிக்கு கிடைத்த வரவேற்பு, ஆடியோ ஓடிடி தொழில்நுட்பத்தை நோக்கி சிந்திக்கத் தூண்டியது.
குறிப்பாக, கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இதில் தீவிரமாக இறங்கினேன். நான் சந்தித்த பெற்றோர் பலரும் குழந்தைகள் அதிக நேரத்தைத் தொலைகாட்சி, திறன்பேசியில் செலவிடுவதால் கண் பார்வை பிரச்சினைகள் அதிகரிப்பதாக கூறினார்கள். இது தொடர்பான ஆய்வுகளிலும் ஈடுபட்டேன். இதன் பின்னணியில் உருவானதுதான் ரேடியோ ரூம் செயலி” என்கிறார் வெங்கடாசலம்.
குழந்தைகளுக்காக இதுவரை 100 கதைகள் ‘ரேடியோ ரூம்’ செயலியில் இடம்பெறுள்ளன; குழந்தைகளின் ஆர்வத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் புதிய கதைகளையும் உருவாக்கிவருகிறது, இந்தச் செயலி. குறிப்பாக, புத்தகங்களிலிருந்து கதைகளை எடுக்காமல் புதிதாக உருவாக்கப்படும் கதைகளுக்கு ‘ரேடியோ ரூம்’ செயலி முக்கியத்துவம் அளித்துவருகிறது.
ஒலிக்கு முக்கியத்துவம்: “ஒலி வடிவிலான கதைகளைக் கேட்பவர்களுக்கு அதன் ஒலியும் பின்னணியும் இசையுமே உயிர்ப்பைத் தரக்கூடியவை. அந்த வகையில் ‘ரேடியோ ரூம்’ செயலியில் நாம் கேட்கும் கதைகள், கண்ணை மூடிக்கொண்டு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை அளிக்கின்றன. திரைப்படத்துக்கு நிகரான ஒலி எங்களுடைய ஒலிக் கதைகளிலும் தத்ரூபமாகத் தரப்படுகிறது.
ஒலிதான் கதைகளை மனிதர்கள் மனதில் நிறுத்தும். அதற்காகத்தான் கூடுதலாக மெனக்கெடுகிறோம். ‘பார்த்திபன் கனவு’ நாவலை 18 மணி நேரத்துக்கு ஒலி வடிவில் வடிவமைத்திருக்கிறோம். அதைக் கேட்கும்போது அந்தக் காலக்கட்டத்திற்கே செல்லும் உணர்வு ஏற்படும்” என்கிறார் வெங்கடாசலம்.
இளைஞர்களுக்கான வாய்ப்பு: இன்று இளைஞர்கள் பலரும் கதைகளை எழுதுகிறார்கள். ஆனால், அக்கதைகளைப் புத்தகமாக வெளியிடும் வாய்ப்பு பெரும்பாலான வர்களுக்குக் கிடைப்பதில்லை. அத்தகைய இளைஞர்களுக்கு ‘ரேடியோ ரூம்’ செயலி வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவும் சொல்கிறார் வெங்கடாசலம். “கல்லூரி மாணவர்கள் பலரும் கதைகளை எழுதி எங்களைத் தேடி தருகிறார்கள்.
அதில், நல்ல கதைகளை எங்கள் குழு தேர்வுசெய்கிறது. தற்போது குழந்தைகளுக்கான கதைகளை நிறைய புதிய எழுத்தாளர்கள்தான் எழுதியிருக்கிறார்கள். கதைகளுக்கு என்றே சுமார் 400 குரல் மாதிரிகளைச் சேகரித்து வைத்துள்ளோம்” என்கிறார் வெங்கடாசலம்.
எழுத்தாளர் ராஜேஷ் குமார் உள்பட பிரபல எழுத்தாளர்களின் கதைகள் இச்செயலியில் ஒலி வடிவில் உள்ளன. ஈழத் தமிழ்க் கதைகளும் செயலியில் உள்ளன. இதற்காகப் பிரத்யேக எழுத்தாளர்கள் இலங்கையிலிருந்தே எழுதுகிறார்கள். கதைகள், நாவல்கள், கோயில் வரலாறு, ஜோதிடம், ஆரோக்கியம் சார்ந்த தகவல்களையும் ஒலி வடிவில் இச்செயலி அளித்துவருகிறது.
“பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகள், குடும்ப உறவைப் பேசும் கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பொழுதுபோக்குக்காகப் பல்வேறு தொழில்நுட்பங்கள் இன்று வந்துவிட்டன. இருந்தாலும் எல்லாவற்றுக்கும் வானொலி இன்றும் நல்லதொரு போட்டியாக உள்ளது.
அந்த வகையில் ஆடியோவுக்கு எந்தக் காலத்திலும் அழிவு கிடையாது. தொழில்நுட்பங்கள் வளர வளர அதில் மாற்றங்கள் உருவாகும். அதற்கேற்ப நம்மைத் தகுதிப்படுத்திக்கொள்ளத் தயாராக வேண்டும். ஒலிவடிவக் கதைகளை டிஜிட்டல் முறையில் காமிக்ஸ் கதைகளாகக் கொண்டுவரவும் திட்டம் உள்ளது” என்கிறார் வெங்கடாசலம்.