இளமை புதுமை

இளைய தலைமுறையை ஆட்டுவிக்கும் ரீல்ஸ்!

மிது கார்த்தி

சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ மூலம் காணொளிகளை வெளியிடுவது இன்று உச்சத்துக்குச் சென்றுவிட்டது. ரீல்ஸ்களுக்குப் பாதை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இன்ஸ்டகிராமில் மட்டும் 41.4 கோடி இந்தியர்கள் கணக்கு வைத்துள்ளனர். இதேபோல ரீல்ஸைக் கொண்டிருக்கும் ஃபேஸ்புக்கில் 37.8 கோடி இந்தியர்கள் கணக்கு வைத்துள்ளனர். ரீல்ஸைப் பயன்படுத்துவோரில் 10 - 24 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் என்கிறது இன்னொரு கணக்கு. ரீல்ஸைப் பார்ப்பதிலும் உலக அளவில் இந்தியர்கள் முன்னிலையில் உள்ளனர்.

மாதத்துக்கு சராசரியாக 36.29 கோடி இந்தியர்கள் ரீல்ஸைப் பார்க்கிறார்கள். இப்படி ரீல்ஸ் மோகத்தில் சிக்கியிருக்கும் இந்தியாவில், காணொளிகளை வெளியிட்டு லைக்ஸ், கமெண்ட்ஸ், ஷேரிங்குக்காக உயிரைத் துச்சமென மதித்து ஆபத்தான காணொளிகளை எடுப்பதும் அதிகரித்துள்ளது. ரீல்ஸ் பதிவிடும் மோகம் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் போக்கு எங்கு கொண்டு போய் நிறுத்தும்?

டிக்டாக் இடத்தில்: ஸ்மார்ட் போன்களின் வரவுக்குப் பிறகு சமூக வலைதளங்களின் வளர்ச்சி கிடுகிடுவென உயரத் தொடங்கியது. அதுவும் காணொளி சார்ந்த சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்ததைப் போலவே, பார்வையாளர்களின் எண்ணிக்கையும் குவிந்தது. இதற்கெல்லாம் பாதை அமைத்துக் கொடுத்தது டிக்டாக் செயலிதான். காணொளி செயலிகளில் டிக்டாக் முதன்மையாக இருந்தது.

இந்தச் செயலியைத் தங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பாகவே பலரும் கருதினர். குறிப்பாக இளைய தலைமுறையினர் பலரும் டிக்டாக் செயலியின் மூலம் தங்கள் திறமையை வெளிகாட்டத் தொடங்கினர். இந்தச் செயலியின் வாயிலாகப் பலர் வெளியுலகிற்குத் தெரியும் அளவுக்குப் புகழ்பெற்றனர்.

’இன்புளூயன்சர்’, சினிமா, சீரியல் வாய்ப்பு என்று அடுத்த கட்ட வாய்ப்புகளையும் பலர் பெற்றனர். ஆனால், அதேவேளையில் சில காணொளிகள் எல்லை மீறிச் சென்று விமர்சனங்களுக்கும் வழிவகுத்தன. எதை வேண்டுமானாலும் காணொளியாக்குவது, ஆபாச நடனம், ஆபாசப் பேச்சு என அது வேறொரு பாதைக்குச் சென்றது.

சீன இறக்குமதியான டிக்டாக் செயலி 2020இல் தடை செய்யப்பட்ட பிறகு, அதைப் பயன்படுத்தியவர்கள் ஒரு கணம் திண்டாடிப் போனார்கள். அப்போது ஏற்பட்ட வெற்றிடத்தை இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்கள் பயன்படுத்திக்கொண்டன. இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் ஆகியவை ரீல்ஸ் என்கிற பெயரில் காணொளிகளை வெளியிடுவதற்கான வாய்ப்புகளைத் தந்தன.

வேகமான வளர்ச்சி: கடந்த 4- 5 ஆண்டுகளில் ரீல்ஸ் மிகப் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. வெறும் 15 விநாடிகள் தொடங்கிய ரீல்ஸை இன்று 90 விநாடிகளுக்கு வெளியிட முடியும். என்றாலும், பேதங்கள் இல்லாமல் அனைத்துத் தரப்பினரையும் ரீல்ஸ் ஈர்த்திருப்பதை மறுக்க முடியாது. டிக்டாக் இல்லாத குறையை ரீல்ஸ் தீர்த்துவிட்டது என்றும் சொல்லலாம்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் உலகே முடங்கியிருந்த நிலையில்தான் ரீல்ஸ் அறிமுகமானது. அதன் பிறகு அதன் வளர்ச்சி ஜெட் வேகம் பிடித்தது. இந்தியாவில் ரீல்ஸில் வெளியிடப்படும் காணொளிகள் அதிகரித்திருக்கின்றன. உலகிலேயே ரீல்ஸை அதிகம் பதிவிடுபவர்களாகவும் பார்ப்பவர் களாகவும் இந்தியர்கள் இருக்கிறார்கள்.

2024 நிலவரப்படி சமூக வலை தளங்களில் கணக்கு வைத்திருக்கும் ஓர் இந்தியர் 3.14 மணி நேரத்தை ஒரு நாளில் ரீல்ஸுக்காகச் செலவிடுகிறார். ரீல்ஸே கதியென இருப்பவர்கள் 5 மணி நேரம் வரை செலவிடுகிறார்கள் என்கின்றன புள்ளி விவரங்கள். இதேபோல ஒரு நாளில் சுமார் 60 லட்சம் ரீல்ஸ்கள் இந்தியர்களால் இன்ஸ்டகிராமில் பதிவிடப்படுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ரீல்ஸ் மோகம்: ரீல்ஸில் நேரத்தைச் செலவிடும்போது, நேரம் போவதே தெரியாத அளவுக்குக் காலத்தை விழுங்கிவிடுகிறது என்கிற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. என்றாலும் திரையைப் பார்க்கும் நேரம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. சமீப காலமாக ரீல்ஸ் எடுக்கச் சென்று உயிரிழந்தவர்கள் பற்றிய செய்திகளும் அதிகமாகவே வருகின்றன. ரயில் வரும்போது தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுப்பது. மலை உச்சிக்குச் சென்று ரீல்ஸ் எடுப்பது என ஆபத்தை உணராமல் ரீல்ஸ் எடுக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது.

இதுதான் என்றில்லாமல் கண்டபடி எடுக்கப்படும் ரீல்ஸ்களால் கல்லூரியில் படிக்கும் இளைய தலைமுறையினர் மட்டுமல்ல, பள்ளிகளில் படிக்கும் வளரிளம் பருவத்தினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரவில் நீண்ட நேரம் கண் விழித்து சமூக வலைதளங்களில் அதிக நேரம் மூழ்கிக் கிடக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது. இது வருங்காலத் தலைமுறையினருக்குச் சவாலானதாகவும் மாறி வருகிறது.

ஏற்கெனவே இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் வீடியோ வடிவிலான பதிவுகளைத்தான் அதிகம் பார்க்கிறார்கள். ரீல்ஸ் மோகம் அதை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு சென்றுவிட்டது. ஆனால், தொடரும் இந்த ரீல்ஸ் மோகம் எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்கிற அச்சமும் கேள்வியும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

SCROLL FOR NEXT