தொலைக்காட்சி ‘ரியாலிட்டி’ நிகழ்ச்சிகள், திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள், கான்சர்ட்டுகளுக்கு ‘டிஜே’ செய்து புகழ் பெற்றிருப்பவர் சுதன் குமார். ஆனால், ‘டிஜே பிளாக்’ என்று ரசிகர்கள் மனதில் பதிந்தவர். ‘டைமிங் பஞ்ச்’ வசனங்களை ஒலிக்க விடுவதில் கெட்டிக்காரரான அவருடன் ஒரு காபி கோப்பை உரையாடல்.
சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா?
படப்பிடிப்பு இருக்கும் நாள்களில் 8 மணிக்கும், இல்லாதபோது 11 மணிக்கும் எழுந்திருப்பதுதான் வழக்கமே. காலை, மாலை, இரவு என்றில்லை வேலைன்னு வந்துட்டா கடமையே கண்ணாயிரம்.
‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா?
2024 நவம்பரில் ஜிம்மில் சேர்ந்து 2025 புத்தாண்டில் ஜிம்முக்குப் போவதை நிறுத்திய ஆள் நான்! ஜிம், டயட்டெல்லாம் திடீரென ஞானோதயம் வரும்போது மட்டும்தான். மற்றபடி ஆரோக்கியமான உணவை சாப்பிடுவேன்.
தனித்துவமான பழக்கம்?
கத்திரி வெயிலே அடிச்சாலும் போர்வையை இழுத்திப் போர்த்திக்கொண்டு தூங்குவோர் சங்கத் தலைவனாக எனக்கு பதவியே தரலாம்னா பார்த்துக்கோங்க!
‘கம்-பேக்’ தருணம்?
பெர்சனலாக காதல் தோல்வியிலிருந்து மீண்டு வந்த தருணம். கிட்டத்தட்ட 6 மாதங்கள் தனிமையில் இருந்த பிறகு மீண்டும் நண்பர்களோடு பேசி, இணைந்து நார்மலானது மறக்க முடியாதது.
இந்த வேலை இல்லையெனில்?
ஸ்டோரி போர்டு ஆர்டிஸ்ட் அல்லது வெப் டிசைனர் ஆகியிருப்பேன்.
‘பக்கெட்-லிஸ்ட்’ ஷேரிங்ஸ்?
25 ஆண்டுகளுக்கு ஒரு முறை திறக்கப்படும் வாட்டிகன் சொர்க்க வாசலைப் பார்க்கும் ஆசை இருக்கு. இந்த ஆண்டு திருமணமாகிவிட்டால் நார்வே ‘நார்தர்ன் லைட்ஸ்’ பார்க்க போகணும்.
புத்தக வாசிப்பா, திரை அனுபவமா?
சிறு வயதில் புத்தக வாசிப்பில் அதிக ஆர்வம் இருந்தது. தற்போது ‘ஆடியோ விஷூவல்’ காணொளிகளைக் கேட்பது, ஆவணப்படங்களைப் பார்ப்பது என்றாகி விட்டது.
பொழுதுபோக்கு?
நேரம் கிடைக்கும்போதெல்லாம் ‘ரெஸ்ட்’ எடுப்பதுதான் ‘பெஸ்ட்’. அதைத் தவிர நண்பர்களோடு ‘பிளே ஸ்டேஷன்’ விளையாடுவது, ஊர் சுற்றுவது.
பிடித்த சமூக வலைதளம் எது, ஏன்?
இந்தக் காலத்தில் ‘ரீல்ஸ்’ பகிர்ந்து கொள்வதுதான் நட்புக்கே அழகு. எனவே, இன்ஸ்டகிராம்தான் என்னுடைய சாய்ஸ்.மனதில் பதிந்த பாடல் வரி? ‘மயக்கமா கலக்கமா’ பாடலில் வரும் ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி’ என்கிற வரி.
உறங்கவிடாத ஒன்று?
ஒரு நிகழ்ச்சி முடிந்த பிறகு அந்நிகழ்ச்சியில் இருந்த நிறை குறைகளைப் பற்றி குழுவோடு பேசிக்கொண்டே அந்த இரவைக் கடந்து விடுவோம். அன்றைக்கு ‘நோ’ தூக்கம்.
மாற வேண்டியது?
நான் கறுப்பாக இருப்பதைக் காரணம்காட்டி ஒரு சிறுவன் என்னோடு பேச மறுத்துவிட்டான். இதே தோற்றத்தைக் காரணமாகச் சொல்லி ‘நீங்க டிஜேவா?’ எனச் சந்தேகமாகச் சிலர் கேட்டுள்ளனர். ‘பாடி ஷேமிங்’ எப்போதும் இருக்கக் கூடாது. குழந்தைகள் மனதில் இது விதைக்கப்படக் கூடாது. மாற வேண்டியது நாம் அல்ல, இப்படிப் பேசுபவர்கள்தான்!
திரும்பத் திரும்பப் போக விரும்பும் இடம்?
மாமல்லபுரம் கடற்கரையோரம் உள்ள ஒரு ‘ஃபுட் ஸ்பாட்’டுக்கு நண்பர்களோடு அட்டி சேர்வது பிடிக்கும்.