பின்னணிக் குரல் கலைஞரும் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஷியாமளாவுக்கு இசையின் மீதும் விருப்பம் உண்டு. திரைத்துறையில் பணியாற்றிவரும் தனியிசைக் கலைஞரான அருண் வள்ளலாருக்கு, தன்னைப் போலவே இயங்கிக்கொண்டிருக்கும் சக தனியிசைக் கலைஞர்களுக்கான தளத்தை அமைத்துத் தர வேண்டும் என்பது விருப்பம். ஷியாமளா, அருண் இருவருக்கும் பொதுவான விருப்பமாக இசை இருந்தது. அந்த இசை விருப்பத்தால் வேயப்பட்டதுதான் ‘குடிசை’ (Gudisai – பிரித்துப் பார்த்தால் ‘குட் இசை’).
இவர்கள் இருவரும் இணைந்து தொடங்கி இருக்கும் ‘குடிசை’ நிறுவனம், தனியிசைக் கலைஞர்களுக்கான மேடை அமைத்துத் தருகிறது. திறமையை வைத்துக்கொண்டு அதை வெளிப்படுத்த களம் இன்றித் தவிக்கும் கலைஞர்களுக்கான மேடையாகவும் இது இருக்கிறது. ஒரே மாதிரியான விருப்பம் கொண்ட கலைஞர்களை இணைக்கும் பாலமாகவும் குடிசை செயல்படுகிறது.
திரையிசையின் நட்சத்திர வெளிச்சத்துக்கு அருகில் சலமின்றிச் சுடரும் சிற்றகல் போல் தனியிசைக் கலைஞர்களின் இசையைக் காற்றில் தவழ வைப்பதுதான் தங்கள் நிறுவனத்தின் நோக்கம் என்கிறார் ஷியாமளா. இதுவரை 8 நிகழ்ச்சிகளை நடத்திமுடித்திருக்கிறார்கள்.
சபரி மியூசிக்கல்ஸ், புளூ அகாடமி போன்ற நிறுவனங்களோடு இணைந்து நிகழ்ச்சிகளை நடத்துவதால், இசைத்துறையின் கவனமும் பங்கேற்பாளர்களுக்குக் கிடைக்கிறது. தற்போது புது முயற்சியாக, தனியிசைக் கலைஞர்களைப் பற்றிய குறிப்புடன் அவர்கள் இயற்றிய பாடலைத் தங்கள் தளத்தில் (gudisai.com) வெளியிட்டிருக் கிறார்கள்.
ஆரம்பத்தில் இசையில் விருப்பம் உள்ளவர்கள் திரைப் பாடல்களைப் பாடி மகிழவும் இவர்களது மேடை வாய்ப்பளித்திருக்கிறது. தற்போது தனியிசைக் கலைஞர்கள் மட்டுமே பங்குபெறும் வகையில் மார்ச் 16 ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை ஆழ்வார்பேட்டையில், ‘Gudisai Indie Spotlight’ நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார்கள்.
வளர்ந்துவரும் தனியிசைக் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். விருப்பம் உள்ள கலைஞர்கள் இவர்களது இணைய தளத்துக்குச் சென்று பதிவு செய்துகொள்ளலாம். பார்வையாளர்களும் தங்களது அனுமதிச் சீட்டை இணையதளம் மூலம் வாங்கிக்கொள்ளலாம்.