‘டபிள்யு.டபிள்யு.எஃப்.’ (தற்போது டபிள்யு.டபிள்யு.இ.) சண்டை நிகழ்ச்சிக்கென எப்போதும் உலக அளவில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களின் அறிமுகத்துக்குப் முன்பு, இந்நிகழ்ச்சிகளில் நடப்பவை எல்லாம் ‘சாட்சாத் உண்மை’ என நம்பிப் பார்த்தவர்கள் ஏராளம். இதில், பல சூப்பர் ஸ்டார்கள் உருவாகி மறைந்திருந்தாலும், சண்டை வீரர் ஜான் சீனா (John Cena)வுக்கு எப்போதுமே தனி மவுசுதான்.
போய் வா ‘சாம்ப்’ - தனது தனித்துவமான சண்டை பாணிக்காகவே பெரும் ரசிகர்களை ஈர்த்தவர் ஜான் சீனா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக டபிள்யு.டபிள்யு.இ. சண்டை நிகழ்ச்சி மட்டுமல்ல, சினிமாவிலும் ‘பிஸி’யாக இருந்த ஜான் சீனா, 2025 இறுதி நிகழ்ச்சியிலிருந்து ஓய்வுபெறுவதாக அண்மையில் அறிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக ‘ஃபேர்வெல் டூர்’ ஒன்றையும் தொடங்கியிருக்கிறார்.
கடந்த 2002இல் டபிள்யு.டபிள்யு.இ. நிகழ்ச்சியில் அறிமுகமானதிலிருந்து மொத்தம் 16 முறை சாம்பியன்ஷிப் பெல்ட்டை வென்றிருக்கிறார் ஜான். இதனால், ரசிகர்களால் செல்லமாக ‘சாம்ப்’ என்று அழைக்கப்படும் இவர், எப்போதுமே டபிள்யு.டபிள்யு.இ-யின் ‘பேபி ஃபேஸ்’ (baby face)ஆக வலம்வந்தவர்.
அதாவது, டபிள்யு.டபிள்யு.இ. சூப்பர் ஸ்டார்களில் ‘ஹீரோ’வாக ‘புரொஜெக்ட்’ செய்யப்படுவர்களை ‘பேபி ஃபேஸ்’ என்று அழைக்கின்றனர். ஹல்க் ஹோகன், ஸ்டீவ் ஆஸ்டின், தி ராக், சி எம் பங்க், ஜான் சீனா போன்று சிலர் ‘பேபி ஃபேஸ்’ ஆகச் சித்திரிக்கப்பட்டவர்கள்.
ஹீரோ இருக்கும்போது வில்லன் இல்லாமல் இருந்தால் எப்படி? டபிள்யு.டபிள்யு.இ.வில் வில்லனை ‘ஹீல்’ என்று குறிப்பிடுகிறார்கள். டிரிப்பிள் ஹெச், ஷான் மைக்கேல்ஸ், கர்ட் ஆங்கிள், எட்ஜ் போன்று பலரும் ‘ஹீல்’ ஆக வலம்வந்தவர்கள். டபிள்யு.டபிள்யு.இ.இல் சிலர் காலத்துக்கேற்ப ஹீரோவாக இருப்பதும், மாறி வில்லன் ஆவதும், மீண்டும் ஹீரோ ஆவதும் வழக்கம். ஆனால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோவாக மட்டுமே வலம்வந்த ஜான் சீனா, அப்படியே ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரெனெ வில்லன் அவதாரம் எடுத்து அவர் ரசிகர்களுக்கு ‘ஷாக்’ கொடுத்ததுதான் ஹைலைட்.
திரும்பிப் பார்த்த 90ஸ் கிட்ஸ்: டபிள்யு.டபிள்யு.இ. சண்டைச் சித்திரிப்பின் ஒரு பகுதியாக நடைபெற்ற ‘எலிமினேஷன் சேம்பர்’ எனும் தொடரில் பங்கேற்று வெற்றிகண்டார் ஜான் சீனா. இதனால், அடுத்து நடக்க இருக்கும் ‘ரெஸில்மேனியா 41’ எனும் பிரம்மாண்ட சண்டைப் போட்டியில் கோடி ரோட்ஸ் என்பவரை எதிர்கொள்ள உள்ளார்.
சாம்பியன்ஷிப் பெல்ட்டுக்கான இந்தப் போட்டியை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். டபிள்யு.டபிள்யு.இ.யின் ‘பாஸ்’ என்றழைக்கப்படும் ‘தி ராக்’ இந்த இருவருக்கும் இடையே குறுக்கிட, அவரோடு இணைந்து இவ்வளவு ஆண்டுகளாக ஹீரோவாக இருந்த ஜான் சீனா வில்லனாக உருவெடுத்து, கோடி ரோட்ஸ்க்கு எதிராகப் போட்டியிட உள்ளார்.
இதனால், கடந்த சில ஆண்டுகளாக டபிள்யு.டபிள்யு.இ. பக்கம் எட்டிப்பார்க்காத பலரும் சீனாவின் இந்த மாற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜான் சீனா நல்லவரா, கெட்டவரா என ‘நாயகன்’ பட பாணியில் காணொளிகளைத் தயார்செய்து வைரலாக்கி வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, நாம் பார்த்து வளர்ந்த ஆதர்ச நாயகர் ஒருவர் ஓய்வை அறிவித்துவிட்டார் என்றால், ‘நமக்கும் வயசாகிடுச்சே’ என்கிற 90ஸ் கிட்ஸ்களின் புலம்பல்களும் ஜான் சீனாவோடு சேர்ந்து சமூக வலைதளங்களில் இந்த வாரம் வைரலானது தனிக் கதை!