தமிழ் ஊடகங்களில் ஆர்ஜேவாக அறிமுகமான ஆனந்தி, கோவையைச் சேர்ந்தவர். பின்பு யூடியூபராகத் தடம்பதித்தார். சினிமாவிலும் தலைகாட்டிவரும் ஆனந்தி, ‘பிக் பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றிருக்கிறார். அவருடன் ஒரு காபி கோப்பை உரையாடல்.
சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? - அலாரம் வைத்து எழுந்திருப்பது எல்லாம் எனக்கு ‘செட்’டாகாது. பொதுவா காலை 7 – 7.30 மணிக்கு எழுந்திரிச்சிடுவேன்.
‘ஒர்க் அவுட்’டா, ‘டயட்’டா? - சிறு வயதிலிருந்தே ‘ஜங்க் ஃபுட்’, சாக்லேட், ஐஸ்கிரீம் எல்லாம் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. சத்து நிறைந்த உணவை எப்படியாவது சாப்பிட்டிருவேன்.‘டயட்’ ஃபாலோ பண்றது பற்றி யோசிக்கவேயில்ல.
இந்த வேலை இல்லையெனில்? - நிறைய ஆசைகள் இருந்துச்சு. இன்னும் இருக்கு. எங்க குடும்பத்துல முதல் பட்டதாரி நான்தான். மீடியாவுக்குள் விரும்பி வந்தேன். ஆனா, உளவியல் துறையில ஏதாவது படிக்கணுங்கிற கனவு மட்டும் இன்னும் நனவாகல.
‘பக்கெட்-லிஸ்ட்’ ஷேரிங்ஸ்? - இரண்டு சூட்கேஸ்ல என் பொருள்களை ‘பேக்’ பண்ணிட்டு ஊர் ஊரா ‘எஸ்கேப்’ ஆகணும்!
புத்தக வாசிப்பா, திரை அனுபவமா? - என்கிட்ட மட்டும் இந்தக் கேள்விய நீங்க கேட்கவே கூடாது. புத்தகங்கள்தான் என் உயிர்மூச்சு. என் ‘ஒன்லி’ சாய்ஸ் புத்தக வாசிப்புதான். படங்கள் பார்க்கவெல்லாம் பொறுமை கிடையாது!
பொழுதுபோக்கு? - இதுக்கும் புத்தக வாசிப்புதான்னு சொன்னா நம்புவீங்களா? ஒன்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை மாற்றி வாசிப்பேன். என்னுடைய ‘ஹாபியும்’ புத்தகங்களோடுதான்.
மறக்க முடியாத தருணம்? - ‘காமசூத்ரா’ புத்தக விமர்சன வீடியோவுல பெண்களுடைய நிலையைப் பற்றிப் பேசினேன். அதைப் பார்த்து கருத்தைப் பகிர்ந்த 55 வயதுப் பெண் ஒருவர், ‘இந்த வீடியோ 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தா என் வாழ்க்கையே மாறியிருக்கும்’னு சொன்னாங்க. அந்தத் தருணத்தை மறக்கவே முடியாது.
பிடித்த சமூக வலைதளம்? - யூடியூப்தான். யூடியூப்பைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டதைப் போலவே, யூடியூபில் என்னுடைய ‘புக் ஷோ’வை இப்போதும் தொடர்கிறேனே.
மறக்கவே முடியாத நபர்? - கண்டிப்பா அப்பாதான். எப்போதும் என்னை கம்ஃபர்டபிளான சூழல்ல வைச்சிருக்காம, என் வளர்ச்சிக்கு உதவியா இருந்து, என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய என்னோட அப்பாதான் என்றைக்கும் மறக்க முடியாத மனிதர்!
மனதில் பதிந்த வரி? - ‘ஃபுரோசன்’ அனிமேஷன் படத்தில் வரும் வசனம் அது, ’அடுத்த விஷயத்தைச் சரியாகச் செய்யுங்கள்’ (Do the next right thing).
திரும்பத்திரும்பப் போக விரும்பும் இடம்? - என் பூனைக் கூட்டத்தோடு நேரத்தைக் கழிக்க, வீட்டின் ‘ஹால்’ பகுதிக்கு அப்பப்போ போவேன்.
‘யூடியூப’ரா, ‘புக்டியூப’ரா? - ‘புக்டியூப’ரா அறியப்படணுங்கிறதே என்னுடைய ஆசை, விருப்பம் எல்லாமே!
‘நான்’ - ஒரே வார்த்தையில்? - தேடல் அதிகம் என்பதால், என்னை ஒரு ‘க்யூரியஸ்’னு சொல்லலாம்.